🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கைலாசப்பட்டியில் பெரும்துயரம்- நீரில் மூழ்கி மூவர் உயிரழந்த சோகம்

தேனி மாவட்டம் ,பெரியகுளம் -தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கைலாசபட்டி கிராமம். தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகள் பழமையுள்ள கைலாசநாதர் திருக்கோவில் இந்த ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்ட முத்தாலம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவில் திருவிழா மிகவும் பிரபலமானது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனோ பெருந்தொற்றால் திருவிழா நடைபெறாத நிலையில், இந்தாண்டு முத்தாலம்மன் கோவில் திருவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

கம்பளத்தார் சமுதாய மக்கள் அதிக அளவில் வசிக்கும் கைலாசபட்டி கிராமத்தில், முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தர்மராஜ் என்பவர் வீட்டிற்கு மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவர் மகன் பன்னீர்செல்வம் (25), திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள வேலன்சேர்வகாரன்பட்டியைச் சேர்ந்த பாபு என்பவர் மகன் சபரிவாசன் (11), நிலக்கோட்டை அருகேயுள்ள மீலாபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் மகன்கள் மணிமாறன் (12), ருத்ரன் (7) சென்றுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற தினமான நேற்று நால்வரும் கைலாசபட்டி அருகேயுள்ள பாப்பிபட்டி கண்மாய்க்கு குளிக்கச் சென்றுள்ளனர்.அப்பொழுது சபரிவாசன், மணிமாறன், ருத்ரன் ஆகியோர் கண்மாயில் இருந்த வண்டல் மண்ணில் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. புதைகுழிபோல் ஆழமாக வண்டல் மண் படிந்திருந்த காரணத்தால் கால்களை மேலே தூக்கமுடியாமல் நீரினுள் மூழ்கியுள்ளனர். இவர்களை காப்பாற்ற முயன்ற பன்னீசெல்வமும் சேற்றில் சிக்கிக்கொண்டார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு கைலாசபட்டி காலனியைச் சேர்ந்த சின்னுச்சாமி, நால்வரையும் மீட்டு கரைசேர்த்துள்ளார்.

ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர்களை  பரிசோதித்த மருத்துவர்கள் பன்னீர்செல்வம், மணிமாறன், சபரிவாசன் ஆகியோர்  இறந்துவிட்டதாக அறிவித்தனர். ஏழு வயது ருத்ரன் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விருந்துக்கு வந்த இளம் கன்றுகள் புதைகுழியில் சிக்கி இறந்தது திருவிழாக்கோலம் பூண்டிருந்த கைலாசபட்டியை துயரத்தில் தள்ளியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று பிரேத பரிசோதனைக்குப்பின் மூவரின் உடலும் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கடந்த ஓரிரு தினங்களுக்குமுன் கடலூரில் ஏழு பெண்கள் கண்மாயில் குளிக்கச்சென்றபொழுது உயிரிழந்தது நாடு முழுவது அதிர்வலைகளை உண்டாக்கியது. அத்துயரம் நடைபெற்ற சில தினங்களில் நீர்நிலைகளில் சிக்கி  மூவர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. 

கம்பளத்து இளம் சிங்கங்கள் பன்னீர்செல்வம், சபரிவாசன், மணிமாறன் ஆகியோர் இளம் வயதில் மரணமுற்றிருப்பதற்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், நீர்நிலைகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் துயரச்சம்பவங்களுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved