🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாஞ்சை சித்திரைத் திருவிழா குறித்து வைகோ நெகிழ்ச்சி!

பாஞ்சை சித்திரைத் திருவிழா- வைகோ நெகிழ்ச்சி

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வமும், கம்பளத்தாரின் ஆன்மீக தெய்வமுமான பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய சித்தைரைத் திருவிழா கடந்த மாதம் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இரண்டு ஆண்டுகள் கொரானோ பெருந்தொற்று பொதுமுடக்கத்திற்குப்பின் நடைபெற்ற இந்நிகழ்வையொட்டி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு  பிறப்பித்திருந்தது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தவிர்க்க முன் எச்சரிக்கையாக மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும், பக்தர்களையும், பொதுமக்களையும் எந்தவித இடைஞ்சல்களுக்கும் உட்படுத்தாமல் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வழிபட்டுச் செல்லும் வகையில்  தமிழக காவல்துறை அரண் அமைத்துக்கொடுத்திருந்தது பலரின் பாராட்டுதலைப் பெற்றது.


மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில், தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, டெல்லி போன்ற இடங்களில் வசிக்கும் கம்பளத்தார்கள் உட்பட பல லட்சக்கணக்கான மக்கள் பாஞ்சைக்கு அணிவகுத்து வந்து அம்மனை தரிசித்துச்சென்றனர். திருவிழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆலயக்குழுவினர், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இதில் முதல்நாள் காலையில் கோவில்பட்டியில் ஜோதி ஓட்டத்தை தொடங்கிவைத்ததிலிருந்து, அன்று இரவு பாஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது வரை முழுமையாக பங்கெடுத்தவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக செயலாளரும், இளம் தலைவருமான துரைவைகோ. அவர் மட்டுமல்லாது, அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் திருமலாபுரம் இராஜேந்திரன், நெல்லை மாவட்டச் செயலாளர் நிஜாம் ஆகியோர் பாளையங்கோட்டையில் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்து சுமார் ஒருகிலோமீட்டர் உடன் பயணித்தனர். இதனால் எந்த ஆண்டும் இல்லாதவகையில் தொடர் ஓட்டம் சிலகிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இல்லையேல் போலீசார் வழக்கம்போல் துவக்கவிழா நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி நிகழ்ச்சி நடந்த சுவடு இல்லாமல் செய்து விடுவர்.

அன்று மாலையில் பாஞ்சாலங்குறிச்சி ஆலயத்திற்கு வருகைதந்த துரைவைகோ அவர்களின் வாகனத்தை, ஒருசில கிலோமீட்டருக்கு முன்பாகவே சூழ்ந்துகொண்ட இளைஞர்கள் துரைவைகோவை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். கூட்டநெரிசலில் சிக்கிக்கொண்ட துரைவைகோவும், காரில் இருந்து இறங்கி, இளைஞர்களோடு சேர்ந்து மூன்று கிலோமீட்டர் நடந்தே பயணித்தார். இரவு பாஞ்சை வந்தடைந்த துரைவைகோவுக்கு ஆலயக்குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு மேடைக்கு வரும்வழியில் பெரியவர்கள், இளைஞர்களை சந்தித்து நலம் விசாரித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டார். இறுதியாக மேடையேறிய துரைவைகோ, கட்டபொம்மனாரின் வீரம் குறித்து உணர்ச்சிபொங்கப் பேசினார். மேலும், கம்பளத்தார் சமுதாயத்தினர் தன் தந்தையும், கழக பொதுச்செயலாளருமான வைகோ அவர்களிடம் காட்டிய அதே அன்பு, பாசத்திற்கு சற்றும் குறைவில்லாம் தன்னிடமும் காட்டியதாக பெருமிதத்தோடு குறிப்பிட்டார். மேலும் பேசியவர், தொடர்ந்து ஆண்டுதோறும் அன்னை சக்கதேவி ஆலயவிழாவிற்கு வருவதாக கூறியபொழுது கூட்டத்தினர் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்தனர்.


ஆண்டுதோறும் அக்டோபர்'16 இல் கயத்தாறிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதோடு, பாஞ்சை திருவிழாவிற்கும் வருகைதரும் ஒரே அரசியல் தலைவர் வைகோ அவர்கள், உடல்நிலையை கருத்தில்கொண்டு பயணங்களை தவிர்த்து வந்த சூழலில், துரைவைகோவின் பாஞ்சாலங்குறிச்சி பயணம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தத் தகவலெல்லாம் கட்சியின் முன்னனி தலைவர்கள் மூலமும், செய்தி ஊடகங்களின் வாயிலாகவும் தெரிந்துகொண்ட வைகோ அவர்கள், கடந்த இருதினங்களுக்கு முன் திருநெல்வேலி சென்றிருந்தார். அங்குள்ள வீட்டில்  ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வைகோ அவர்கள், வெளியே கூட்டத்தில் நல்லப்பசாமிகளின் வம்சாவளி பெயரனான மாரிச்சாமியை அடையாளம் கண்டு உள்ளே அழைத்து, பாஞ்சாலங்குறிச்சியில் துரைவைகோவிற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியோடு பேசி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார். தலைவர் வீட்டில் ஓய்வில் இருந்தாலும் அனைத்து நிகழ்சியையும் பார்த்துக்கொண்டிருப்பதாக கட்சியினர் பேசிக்கொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved