🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வாய்ப்பற்ற சமூகத்திற்கு தலைமைப்பதவி - ஆளுமைமிக்க தலைவரால் மட்டுமே சாத்தியமானது

பாரதிய ஜனதா கட்சியில் கோயமுத்தூர் தெற்கு மாவட்ட விவசாய அணித்தலைவராக பொள்ளாச்சியைச் சேர்ந்த G.தர்மப்பிரகாஷ் அவர்களை நியமித்து விவசாய அணியின் மாநிலத் தலைவர் G.K.நாகராஜன் நேற்று முன்தினம் (11.06.2022) அறிவிப்பு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து தர்மப்பிரகாஷூக்கு சமுதாயத்தலைவர்கள் கைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கோவை மாவட்ட பாஜக தலைவர் K.வசந்தராஜன் அவர்களைத் தொடர்புகொண்டு, இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த தர்மப்பிரகாஷ் அவர்களை மாவட்ட விவசாய அணித்தலைவராக நியமிக்க கடைசிவரை போராடி பெற்றுத்தந்தமைக்காக சமுதாயத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொண்டார் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ்.

இதுகுறித்து, இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று காலை பாஜக மாவட்டத் தலைவர் K.வசந்தராஜன் அவர்களைத் தொடர்புகொண்டு பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர், சமகால அரசியலை தங்கள் அமைப்பு உற்றுநோக்கி கவனித்து வருவதாகவும், பல்வேறு முக்கிய கட்சிகளில் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தலைமுறைகள் கடந்து ப்யணித்து வருகின்றனர். நாங்கள் மட்டுமல்ல எங்களைப்போன்ற சாதி, மொழி சிறுபான்மையினர், பொருளாதார பின்புலம் இல்லாத பல சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு கட்சி பிரதான அமைப்பிலும்கூட அல்ல துணை அமைப்புகளில்கூட தலைமைப் பதவியை வழங்கியதை பார்த்ததில்லை. செல்வி.ஜெயலலிதா அவர்களைத் தவிர வேறு எவ்வளவு ஆளுமைமிக்க தலைவர்களாலும், பெரும்பான்மை சாதியைத் தவிர்த்து வேறு சாதியினரை அதிகாரமிக்க பதவிகளில் அமர்த்தியதே இல்லை. இதுதான் தமிழகத்தின் இன்றையதேதி வரையில் உள்ள எதார்த்தநிலை.

ஜெயலலிதா அவர்களுக்குப்பிறகு அப்படி ஒரு ஆளுமை மிக்க தலைவராக தங்களைப் பார்க்கிறோம். பாஜக கட்சியின் பிரதான அமைப்பாகட்டும், துணை அமைப்புகளாகட்டும் அதிகாரமிக்க பதவி என்பது அந்த அணியின் தலைவர் பதவிதான். கொங்கு மண்டலத்தில் பிரதான ஜாதி, வாக்கு அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை கோவை மாவட்டத்துக்காரனாக நன்கு அறிவேன். தாங்களும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதையும் அறிவேன். தம்பி.தர்மப்பிரகாஷ் தீவிர கட்சிப்பற்றாளர் மட்டுமல்ல களப்பணியாளரும் கூட. எவ்வளவுதான் களப்பணியாளர், தியாகி என்றாலும் மாவட்டத் தலைவர் பதவியெல்லாம் எங்களைப் போன்ற சாதி சிறுபான்மையினர்கள் கற்பனைகூட செய்துவிட முடியாது. இருந்தாலும், இப்போட்டியில் தம்பி தர்மப்பிரகாஷ் முந்துவதாகவும், சாதி பின்புலம் மட்டுமே அவருக்கு பெரிய மைனஸ் ஆக இருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. சுமார் 40 லட்சம் இராஜகம்பளத்தார் சமூகத்தினர் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவியிருந்தும், எந்த ஒரு தொகுதிலும் பெரும்பான்மையினராக இல்லாதது எங்களின் துரதிஷ்டமே. 

இந்தமாதிரியான தலைமைப் பதவிகளில், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எந்தக்கட்சியிலும் இல்லாததால், எங்களுக்கே கூட பெரிய நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தது. ஆனால் தர்மப்பிரகாஷின் களப்பணியை மட்டுமே பார்த்தவர் என்றவகையில் "உட்கட்சியில் மாபெரும் போராட்டத்தை நடத்தி, தர்மப்பிரகாஷுக்கு இப்பதவி வழங்கப்படவில்லை என்றால் மாவட்டத் தலைவர் பதவிகூட எனக்குத் தேவையில்லை" என்று தாங்கள் போராடியதை அறிந்து மெய்சிலிர்த்துப்போனோம். சாதாரண தொண்டரான தம்பி தர்மப்பிரகாஷுக்கு இப்பதவியை பெற்றுத்தந்ததின் மூலம், என்னுடைய மாவட்டத்தில் கட்சிக்காக தியாகம் செய்பவர்கள், களப்பணியாளர்கள் உரிய பதவிகளைப் பெறுவதற்கு சாதி,மதம், மொழி தடையில்லை என்பதை உணர்த்தி இருப்பதின் மூலம் சாதி,மொழி சிறுபான்மையினருக்கு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளீர். இதன்மூலம் உண்மையான "தேசியவாதி" யாக உங்களைப் பார்க்கின்றோம். 

செல்வி.ஜெயலலிதா அவர்களுக்குப்பிறகு,  உழைப்பவர்களை அங்கீரிக்கும் ஆளுமைமிக்க தலைவராக, தங்களின் ஆசியோடும், ஆதரவோடும் தம்பி.தர்மப்பிரகாஷ் முன்பைவிட கூடுதலான உழைப்பை கட்சிக்கு வழங்குவார் என்பது நிச்சயம். எளிய சமூகங்களுக்காக போராடிய தங்களுக்கு கட்சி மாட்சரியங்கள் கடந்து அனைத்து கம்பளத்தாரும் கடமைப்பட்டுள்ளோம். இதை நாங்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூற்வோம். உரிய காலம் வரும்பொழுது எங்கள் சமுதாய மக்கள் இதற்கான நன்றியை வழகுவோம் என்றார். 

பொதுச்செயலாளரின் நன்றியை ஏற்றுக்கொண்டு பேசிய மாவட்டத் தலைவர் வசந்தராஜன் அவர்கள், ஈச்சனாரியிலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு தான் ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருவதாகவும், ஈச்சனாரி, மாசநாயக்கன்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த கம்பளத்தார் சமுதாய மக்களோடு தாய்-பிள்ளையாக பழகி வருவதாகவும், என்னால் முடிந்தவரை போராடி தர்மப்பிரகாஷின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்துள்ளேன், இனி சமூகம் அவருக்கு உரிய ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved