🔴 LIVE | முப்பெரும் விழா 2023


42-வது மஹாராஜாவாக ஸ்ரீ சந்ர சைதன்ய ராஜாவுக்கு முடிசூட்டப்பட்டது!

விஜயநகரப்பேரரசின் கீழ் உருவான 72 பாளையங்களில், திருநெல்வேலி சீமையின் இருந்த பாளையங்களில் பரப்பளவில் பெரிய பாளையம் எட்டயபுரம் . இந்த எட்டயபுரத்தை ஆண்ட அரசர்களை எட்டப்பன் என்று அழைத்தனர். மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர் எட்டயபுரம். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை எட்டயபுர சமஸ்தான ஆதரவில் கழித்ததாக சொல்லப்படுகிறது. சிறாப்புராணத்தை பாடிய உமறுப் புலவர் எட்டயபுரத்தின் ஆஸ்தான கவியாக இருந்துள்ளார்.

புகழ்பெற்ற ஜோதிர்நாயகி சமதே எட்டீஸ்வரமூர்த்தி சிவன் கோவில் எட்டப்ப மன்னர்களில் ஒருவராக இருந்த வீரராம குமார எட்டப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது . எட்டயபுர மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் ஒன்று சந்திரகிரி. எட்டயபுர நாயக்கர் அரசர்களில் சிறந்தவராக கருதப்படுபவர்கள் குமார முத்து நாயக்கர். இவருக்கு நல்லம நாயக்கர் மற்றும் வடலிங்கம நாயக்கர் என இரண்டு மகன்கள் இருந்தனர்.

குமார முத்து நாயக்கரின் மூத்த மகனான நல்லம நாயக்கர் அப்போதைய விஜய நகரை ஆண்ட சாம்பு மகாராஜாவை காண ஒருமுறை சென்றிருந்தார். சாம்பு ராஜாவின் அரண்மனையை சோமன் எனும் மல்யுத்த வீரனும் அவனது சகோதரர்களும் காவல் காத்து வந்தனர்.

சாம்புவை காண வரும் யாராக இருப்பினும், வாசலில் கட்டப்பட்டிருக்கும் தங்க சங்கிலியை தலை குனிந்து வணங்கி தான் செல்ல வேண்டும். அந்த சங்கிலியின் ஒருபுறம் சோமனின் காலிலும், மற்றொரு முனை தூணிலும் கட்டப்பட்டிருக்கும். வணங்கி இப்படி செல்ல விருப்பம் இல்லாதவர்கள் சோமனுடன் மல்யுத்த போட்டியில் பங்கேற்று வென்று செல்ல வேண்டும்.

இது சாம்பு மற்றும் சோமனின் பெருமையாக இருந்து வந்தது. மகாராஜாவை காண வரும் மக்கள், குறுநில மன்னர்கள் என அனைவரும் இந்த முறையிலேயே சாம்பு அரசனை தரிசித்து வந்தனர். ஆனால், இதற்கு நல்லமநாயக்கர் மனம் ஒப்பவில்லை. சோமனுடன் மல்யுத்தம் செய்து சாம்புவை தரிசிக்க முடிவு செய்தான்.

சோமனுடன் ஒருவன் மோத போகிறானா? என கேள்விப்பட்ட ஊர் மக்கள் அனைவரும் ஆச்சரியத்தின் உச்சிக்கு சென்று, அந்த மல்யுத்த போட்டியை காண திரண்டனர். யாராலும் வெல்ல முடியாத மாவீரன் என்ற பெயர் சோமனுக்கு இருந்தது தான் இந்த ஆச்சரியத்திற்கான காரணம்.

கண்டிப்பாக சோமன் மற்றும் நல்லமநாயக்கர் மத்தியில் நடக்க போகும் சண்டை கடுமையானதாக தான் இருக்கும். ஊர் மக்கள் கூட சண்டை ஆரம்பமானது. சண்டையை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும். சண்டையின் முடிவில் நல்லமநாயக்கர் சோமனின் தலையை துண்டித்து போட்டியில் வென்றார். சாம்பு அரசரை காண சோமனின் தலையை ஒரு கையிலும், இரத்தம் கறை காயாத தனது உடையை மறு கையிலும் ஏந்தி தனது ரத்தத்தில் சென்றார் நல்லமநாயக்கர்.

தானறிந்த மாவீரனின் தலையை கொய்து வென்று வந்த நல்லமநாயக்கரை கண்டு வியந்தார் சாம்பு அரசர். நல்லமனின் வீரத்தை பாராட்டி நீ சிறந்த வீரன் என புகழ்ந்தார். மேலும், தனக்கு கீழிருந்த சில கிராமங்களையும், பெரும் பரிசு பொருட்களையும் அளித்தார் சாம்பு அரசர். இந்த சமயத்தில் சோமனின் தம்பிகள் தங்கள் அண்ணன் இறந்த சோகத்தில் அழுது வருந்திக் கொண்டிருந்தனர்.

சோமனின் தம்பிகளின் வருத்தம் கண்டு சாம்பு அரசரும் மனம் வருந்தினார். பிறகு நல்லம நாயக்கரை கண்டு, இவர்களுக்கு சோமனை விட்டால் வேறு யாரும் இல்லை. சோமனின் தம்பிகளை நீதான் தகப்பனாக இருந்து காக்க வேண்டும். சோமனின் எட்டு தம்பிகளையும் உன் மகன்களாக நீ ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு ஒரு அப்பனாக இருக்க வேண்டும் என்றார். இப்படி சோமனின் எட்டு தம்பிகளுக்கு அப்பனாக நல்லமநாயக்கர் ஆனதால் தான், இதன் பிறகு நல்லம நாயக்கரின் பரம்பரைக்கு எட்டப்பன் என்ற பெயர் வந்தது.

சாம்பு மாமன்னன், நல்லம நாயக்கருக்கு சோமன் தலை விருது அளித்து, அந்த இரத்த கறை படிந்த காரணம் காட்டி காவி நிறத்திலான கொடியும் பயன்படுத்த அனுமதி அளித்தார். மேலும், அரசராக பட்டம் சூட்டும் போது இடது கணுக்காலில் பட்டம் சூட்டினார். இதன் பிறகு எட்டப்ப வம்சாவளியில் அரசராக வருபவர்களுக்கு இடது கணுக்காலில் பட்டம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும். மேலும், சோமன் தலை விருத்த காலில் அணிய வேண்டும். அணிந்த பிறகு அந்த விருதின் நாக்கு இடது, வலது புறம் அசைந்தால், அவர்கள் அரசராக சோமன் ஒப்புக் கொள்வதாக ஒரு கருத்தும் நிலவிவந்துள்ளது.

அதே போல, எட்டயபுர அரசர்கள் மீது மக்களுக்கும் பெரும் அன்பு இருந்தது. அந்த காலத்தில் தங்கள் நிலத்தில் விளையும் நெல், தானியங்களை அரசரின் களஞ்சியத்திற்கு வழங்கும் வழக்கம் இருந்தது. அவரவர் தங்களால் இயன்ற அளவில் லாபம் 1,2,3 என அளிப்பார்கள். இந்த கணக்கில் 8க்கு பதிலாக மகாராஜா என்றே மக்கள் கூறி வந்துள்ளனர். எட்டு என்பது அரசரின் பெயரில் வருவதால் அந்த என்னை மக்கள் வாயால் கூற விரும்பவில்லை. இது அரசருக்கு அளிக்கும் அவமரியாதையாக மக்கள் கருதினர்.

அரசர்களை எட்டப்பன் என அழைப்பது போல, அரசர்களின் துணைவியர்களை அவரவர் பெயருடன் கண்ணப்பன் என்று சேர்த்து அழைக்கும் முறையும் இருந்துள்ளது. அரசிகள் தங்கள் மக்களை பிள்ளைகளாக பாவித்து கண்கள் போல காத்து வந்த காரணத்தால். மக்கள் இந்த பெயர் வைத்து அழைத்து வந்தனர் என கூறப்படுகிறது.

புகழ்பெற்ற எட்டயபுர சமஸ்தானத்தின் 42-வது மகாராஜாவாக  ஸ்ரீ சந்ர சைதன்ய ராஜா-வுக்கு முடிசூட்டு விழா இன்று எட்டயபுரம் அரண்மனையில் இராஜகம்பளத்தார் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதனையொட்டி எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது. எட்டயபுரம் மகாராஜாவாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ஸ்ரீ சந்ர சைதன்ய ராஜா-வுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved