🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி மாநாடு நடைபெறும் இடம் உறுதியானது - உயர்மட்ட ஆலோசனைக்குழு நியமனம்

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 261 சமூகங்கள் இணைந்து ஆகஸ்டு'07-இல் மதுரையில் நடத்தவுள்ள மாநாட்டிற்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மதுரையில் நடைபெற்ற சமூகநீதி கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டத்தில் மாநாடு நடத்துவற்கான இடத்தையும், உயர்மட்ட ஆலோசனைக் குழுவும் இறுதி செய்யப்பட்டது. 

அதன்படி மதுரை- அருப்புக்கோட்டை சாலை, விமானநிலையம் பின்புறம், கருப்புகோவில் எதிர்புறம் அமைந்துள்ள  தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் சமூகநீதி மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இருபது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் நடைபெறும் இந்த மாநாட்டு அரங்கத்திற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசரும்,  இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய அளவில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவாக தீர்ப்பளைத்தவருமான இரத்தினவேல் பாண்டியன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும், மாநாட்டை ஒருங்கிணைப்பதற்கும், வழிகாட்டுவதற்கும் உயர்மட்டக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு சாதியில் இருந்தும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நாமக்கல் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி மற்றும் சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.இராமராஜ் ஆகியோரின் ஆலோசனைப்படி விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநாட்டிற்கான இடமும், உயர்மட்டக்குழுவும் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து சாதிகளும் மக்களைத் திரட்டுவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் சமூகநீதி மாநாடு குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரங்களை விடுதலைக்களம், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை, இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஆகிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved