🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சபாஷ்.... ஒன்றியச் செயலாளர் பதவிக்கு கடுமையாக மோதும் தலைவர்கள்!

தமிழகமெங்கும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் இராஜகம்பளத்தார் சமுதாயத்தினர், தலைமுறைகள் பல கடந்து, அவரவர் சார்ந்த கட்சிகளில் தீவிர விசுவாசிகளாக இருந்து வருகின்றனர். விவசாயக்குடிகளான கம்பளத்தார் சமுதாயத்தினர் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாததால், முழுநேர கட்சிப்பணிகளில் ஈடுபடமுடியாது என்பதால், கிளைக்கழக அளவில் பொறுப்பேற்றுக்கொண்டு திருப்தி அடைந்து வந்தனர். இதனால் ஆளுமைமிக்க தலைவர்கள் உருவாவதில் சமுதாயத்தில் பெரும் சிக்கல் நிலவி வந்தது.

பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளில் ஒன்றிய அளவிலான பதவிகளைப் பெறுவதற்கே கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் தவியாய் தவித்து வந்த சூழலில், இளம் தலைவர்கள் தேசிய கட்சியான  பாஜக-வில் மாநில், மாவட்ட அளவிலான பதவிகளைப் போராடி கைப்பற்றியுள்ளனர். பொதுவாகவே திராவிட இயக்கங்களில் பெரும்பான்மை சமூகங்களுக்கே முக்கிய பதவிகளை வழங்குவதால், சாதி சிறுபான்மை மக்களிடையே அதிருப்தி நிலவியது. அதிமுக-வில் ஜெயலலிதா இருந்தவரை கட்சிக்காக உழைப்பவர்களுக்கும், தீவிர விசுவாசிகளுக்கும் சாதி, மதம் கடந்து பதவி, பொறுப்புகளை வழங்கியதால், சாதி,மொழி சிறுபான்மை மக்கள் அவர் இருந்தவரை அதிமுக வை ஆதரித்து வந்தனர்.

இந்நிலையில், சமீபகாலமாக அரசியலில் ஏற்பட்டுள்ள  மாற்றங்களினால், கழகங்களில் ஒதுங்கியிருந்த கம்பளத்தார்களும் முக்கிய பதவிகளை கைப்பற்ற மல்லுக்கட்ட தொடங்கியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை அந்தியூர், சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை போன்ற பகுதிகளிl கம்பளத்தார்கள் மிக அதிகமாக உள்ளனர். இதில் அதிமுக-வைப் பொறுத்தவரை கம்பளத்தாருக்கு ஒன்றிய, மாவட்ட அளவிலான பதவிகள் வழங்கப்பட்டாலும், திமுக-வில் வழக்கம்போல் பெரும்பான்மை சாதியினருக்கே முக்கிய பதவிகள் ஒதுக்கப்பட்டு வந்தன. 

ஆனால் இம்முறை திமுக-வின் 15-வது பொதுத்தேர்தலில் தமிழகத்தின் பல பகுதிகளில் கம்பளத்தார்கள் ஒன்றிய, மாவட்ட அளவிலான பதவிகளுக்கு போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதன்வெளிப்பாடாக, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு, கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னசாமி, இளைஞரணியைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 20000 கம்பளத்தார் சமுதாய வாக்குகள் உள்ள அப்பகுதியில் பெரும்பாலான கட்சிகள் அனைத்திலும் கம்பளத்தார்களே ஒன்றியச் செயலாளர் பதவியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து சமூகநீதியை வலியுறுத்திவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசியல் அதிகார வாய்ப்பற்ற சமுதாயங்களுக்கு கட்சியில் உரிய வாய்ப்புகளை வழங்கி, உட்கட்சியில் சமூகநீதியை நிலைநாட்டிட வேண்டும் என்பதே தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர், போயர் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved