🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மது ஒழிப்பு பிரச்சாரத்தை தொடங்கினார் சமுதாய சங்க தலைவர்!

தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளும், இளம் விதவைகளின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இந்தப்போக்கு கட்டுப்பாடுகள் மிக்க தொட்டிய நாயக்கர் இராஜகம்பள சமுதாய மக்களையும் விட்டுவைக்கவில்லை. ஒருசில பத்தாண்டுகளுக்கு முன்பாக கிராமத்தில் ஓரிருவர் குடிகாரர்களாக இருந்த காலம் மாறி, தற்பொழுது மது குடிக்காதவர்கள் ஓரிருவரே என்ற நிலைக்கு வந்துள்ளது. அதேபோல் முன்பெல்லாம் மூத்தவர்கள் குடித்துவிட்டு ஊர்வம்பை இழுத்துவந்த நிலை மாறி, தற்பொழுது இளைஞர்கள் குடித்துவிட்டு கட்டுப்பாடின்றி திரிகின்ற நிலை வந்துள்ளது. குறிப்பாக பத்துப்பேர் சேர்ந்து எந்த நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தாலும், மது விருந்து என்பது கட்டாயமாகி விட்டது. கட்டபொம்மன் பிறந்தநாள், நினைவுநாளுக்கு கூடும் இளைஞர்கள் மது அருந்திவிட்டு பொது இடங்களில் செய்யும் சேட்டைகள் சாதாரண பொதுஜனங்களை முகம்சுழிக்கச் செய்வதோடு, சமுதாயத்தை இழித்துப்பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.


சாதி, மத பாகுபாடின்றி எல்லா சமூகங்களிலும் இப்பிரச்சினை இருப்பதை ஒப்புக்கொண்டாலும், குடிகாரர் என்ற நிலையிலிருந்து குடிநோயாளிகளாக மாறியிருக்கும் சூழல் சமுதாயத்திற்கு ஆபத்தானது. இந்தக் கவலை எல்லோருக்கும் இருந்தாலும், மருத்துவர் இராமதாஸ், வைகோ போன்ற ஒருசில அரசியல் தலைவர்களே இதற்காக பிரச்சாரங்களை அவ்வப்பொழுது முன்னெடுத்து வந்தனர். சமுதாய ரீதியாக எந்தஒரு சமுதாய அமைப்பும் இதுகுறித்து பெரிய அளவில் முன்னெடுப்புகளை செய்யாதநிலையில், தற்பொழுது கம்பளத்தார் சமுதாயத்திலிருந்து ஒரு தலைவர் மது ஒழிப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.


இராஜகம்பளம் (தொட்டிய நாயக்கர்) மகாஜன சங்கத்தின் தலைவர் மாரையா அவர்கள் இம்முயற்சியில் தீவிரமாக இயங்கத் தொடங்கியுள்ளார். நேற்று  74-வது பிறந்தநாளைக் கொண்டாடிய மாரையா அவர்கள், தனது தாயார் பிறந்த டி.சேதுபுரம் கிராமத்திலிருந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அம்பலம் இராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மதுஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பயண தொடக்க நிகழ்ச்சியை மேலமுடி மன்னார் கோட்டை கார்த்திகைச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில், முதுகலை ஆசிரியர் பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் மாநிலபொருளாளர் காளிச்சாமி நன்றியுரை கூறினார்.

தகவல் உதவி:எஸ்.இராமராஜ்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved