🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாதிக்கத்துடிக்கிறாள் வரதலட்சுமி! கரம் கொடுக்குமா சமூகம்?

மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ள வந்தப்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் மதனகுரு. பெயின்டர் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி சுமதி, நூறுநாள் வேலைக்குச் செல்லும் தினக்கூலி. இத்தம்பதியினருக்கு வரதலட்சுமி, கலைச்செல்வி என்று இருமகள்கள். கடந்த இரண்டு வருடமாக கொரோனா பெருந்தொற்று காரணமாக "மதனகுரு" வேலையிழந்ததால், குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்த நிலையில், அரசு கொடுக்கும் இலவச அரிசி, அவ்வப்பொழுது கொடுத்த நிதியுதவியைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். 

தந்தை படும் பாட்டை நினைத்து வரதலட்சுமியும், கலைச்செல்வியும் பள்ளி செல்வதை நிறுத்திக்கொள்வதாக சொன்னபொழுதும், மகளை படிக்க வைப்பதில் உறுதியாக இருந்தார். தந்தையின் படும் சிரமமும், குடும்பசூழலும் இருமகள்களுக்கும் வருத்தத்தை தந்தாலும், தாய்-தந்தையின் விருப்பதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த வரதலட்சுமி, 600-க்கு 560 மதிப்பெண்களும், கலைச்செல்வி 500-க்கு 420 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 


கட்-ஆப் மதிப்பெண் 193 வைத்துள்ள வரதலட்சுமிக்கு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் இஞ்சினியரிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்று, ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் குரோம்பேட்டையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று நம்பும் வரதலட்சுமி, அக்ரி எஞ்சினியரிங் துறைக்கும் விண்ணப்பித்துள்ளார். படித்து சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரதலட்சுமியிடம் இருந்தாலும், சென்னையில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைக்கும் அளவிற்கு தனது தந்தையின் பொருளாதார நிலை இல்லை என்பதையும் உணர்ந்து பேசும்பொழுது அவரை அறியாமலேயே குரல் விம்மி அழுகிறாள்.

ஆசிரியர்களின் அரவணைப்போடு, டியூஷன் எதுவும் செல்லாமலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ள வரதலட்சுமி, இன்னும் கொஞ்சம் வழிகாட்டுதல் இருந்திருந்தால், இல்லை, இல்லை, வறுமை இல்லாமல் இருந்திருந்தாலே போதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. 

சமுதாயத்தில் எண்ணற்ற வரதலட்சுமிகள் இருந்தும், அவர்களை அடையாளம் கண்டு கைதூக்கி விடுவதில்தான் சமூகம் தடுமாறி நிற்கிறது. கம்பளத்தார் சமுதாயத்திலும் உதவிக்கரங்கள் அவ்வப்பொழுது நீட்டப்பட்டு வந்தாலும், மக்கள் சமூகமாக வளர்வது மட்டுமே நீடித்த,ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும்.  வளர்ந்த பல சமூகங்கள் போல், ஒவ்வொருவரும் தங்கள் சமூகத்திற்கான பங்களிப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளும் அவசியமாகிறது.

பெற்றால் தான் பிள்ளையா? படிக்க வேண்டும் என்ற ஒரு பெண்பிள்ளையின் அழுகுரலை சமுதாயம் நிச்சயம் நிறைவேற்றும் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை. வரதலட்சுமி கவுன்சிலிங் செல்லும்பொழுது உரிய உதவிகளை செய்திட தயாராவோம். சிறுதுளி பெருவெள்ளம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved