🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாணவ-மாணவியருக்கு உதவிக்கரம் நீட்டும் உயர்ந்த உள்ளங்கள்!

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை (குறள்:400)

[பொருட்பால்,அரசியல்,கல்வி]

பொருள்:

ஒருவனுக்கு செல்வங்களில் அழிவில்லாத செல்வமாக கல்வி அறிவு மட்டுமே இருக்கம். மற்ற செல்வங்கள் (நிலம், பணம், வீடு, பொருள், நகை) யாவும் இயற்கையினாலோ செயற்கையினாலோ நிலையில்லாது அழிய கூடியது ஆகும். ஆதலால் அவைகள் செல்வங்களே அல்ல. ஆதனால் கல்வியே சிறந்த செல்வமாகும். 

எந்த உயிரினத்திற்கும் இல்லாத சிறப்பு மனிதனுக்கு ஆறாம் அறிவின் மூலமே கிடைத்தது. அந்த ஆறாம் அறிவே இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது. அரிஸ்டாட்டில், கலிலியோ கலிலி, புளுட்டோ, சர் ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன், ஸ்டீவன் ஹாங்கிங் போன்றோரின் சிந்தனைகள் அறிவியல் உலகில் மிகப்பெரிய புரட்சிக்கு வித்திட்டது. ஆறறிவோடு மனிதன்பிறந்துவிட்டாலும், கல்வி மக்களை எட்ட எட்ட மட்டுமே ஆறாம் அறிவு பட்டை தீட்டப்பட்டுக்கொண்டு வருகிறது.

இதை உணர்ந்துகொண்ட மதங்களும், சாதிகளும், தங்கள் சமூக மக்களுக்கு தனியாக பாடசாலைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அமைத்து முன்னேறி விட்டன.

இந்திய வரலாற்றில் மிக நீண்டகாலம் ஆட்சி அதிகாரம், ஆதிக்கம் செலுத்திய கம்பளத்தார் சமூகம் கல்விக்கோ, கல்வி நிலையங்கள் அமைக்கவோ முன்னுரிமை வழங்காததால் இன்று அரசியல், கல்வி, தொழில் உள்ளிட்ட எல்லாவற்றிலும் பின்தங்கி உள்ளோம். 

வசதியான வீட்டுப்பிள்ளைகளுக்கு படிப்பு பிடிபடாமல் போவதும், ஏழை வீட்டுப்பிள்ளைகள் படிப்பு வந்தும் மேல்படிப்புக்கு செல்லமுடியாமல் போவதும் பரவலாக எல்லா சமூகங்களிலும் நிலவும் முரண். இதை எதிர்கொள்ளும் வளர்ந்த சமூகங்கள் நன்றாக படிக்கும் பிள்ளைகளை கைதூக்கி விடுவதற்கு சமூகமாய் ஒன்றிணைந்து பல உதவிகளை செய்கின்றன.

நமது சமூகத்திலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்று வந்தாலும், முறையாக  வருடம்தோறும் அப்பணி தொய்வின்றி நடப்பதில்லை. 

காலம் கடந்தேனும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு முறைப்படுத்தி, தொடர்ந்து நடத்திட சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கமும்,  www.thottianaicker.com இணையதளமும் இணைந்து முனைந்துள்ளது.

அதன்படி மாணவ-மாணவியருக்கு உதவமுன்வரும் சமுதாயத்திலுள்ள அறக்கட்டளைகள், அமைப்புகள், தனிநபர்கள், நிறுவனங்களை ஒன்றிணைத்து கல்வி  ஊக்கத்தொகை,  உதவித்தொகை, பரிசு, பாராட்டுச்சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதில் முதல்கட்டமாக விருதுநகரிலுள்ள தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை மற்றும் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டபொம்மன் பர்பிள் டிரஸ்ட் உறுப்பினர்கள் சிலரின் உதவியோடும் இந்தாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, அரசுப்பள்ளி மற்றும் உதவிபெறும் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400 முதல் 450 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு தலா ரூ.1000/-, 451 முதல் 500 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.3000/-, முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு தலா ரூ.5000/- வழங்கப்படவுள்ளது.

அதேபோல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 முதல் 550 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு தலா.ரூ.1000/-, 550 முதல் 600 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு தலா.ரூ.3000/-,மற்றும்  முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு தலா.ரூ.10000/- வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, பன்னிரெண்டாம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் அண்ணா பல்கலை உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் மாணவ-மாணவியருக்கு கல்விக்கட்டணம் செலுத்தவும் சமுதாயத்தின்பால் அக்கறை உள்ள நன்கொடையாளர்கள் சிலர் முன்வந்துள்ளனர்.

உதவி வேண்டிடும் தகுதிபடைத்த மாணவ-மாணவியர், தங்கள் புகைப்படத்தோடு  மதிப்பெண் பட்டியல், டி.சி, சாதிச்சான்றிதழ், தொலைபேசி எண், முகவரி உள்ளிட்டவற்றை thottianayakkar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்டு 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


*படித்தபின் பகிரவும்*


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved