🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மன்னவனின் கோட்டைக்கு தனியாளாய் வந்து அதிர்ச்சியளித்த அமைச்சர்!

எட்டயபுர சமஸ்தான மஹாராஜா ஜெகவீரராமபாண்டிய எட்டப்பனாரின் தளபதியும், சுதந்திரப்போராட்ட மாவீரனுமான வீரன் அழகுமுத்துக்கோனின் 312-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள சிலைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.


அங்கு விழாவை முடித்துக்கொண்ட அமைச்சர் திடீர் விஜயமாக கயத்தாறிலுள்ள மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்திற்கு சென்று பார்வையிட்டார். அதற்கடுத்து பசுவந்தனையிலுள்ள பள்ளியை ஆய்வு செய்தார். அங்கு ஆய்வை முடித்துகொண்ட அமைச்சர் கட்சியினர் யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென பாஞ்சாலங்குறிச்சியிலுள்ள மாவீரன் கட்டபொம்மன் கோட்டைக்கு மதியம் 1.30 மணிக்கு வருகை தந்தார். 


முன்னறிவிப்பின்றி கட்சியினர் துணையின்றி அமைச்சரின் வாகனம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்திற்கு வந்துநின்றபோது பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆலயத்தில் கோவில் பூசாரி, பொதுச்செயலாளர் செந்தில்குமார் தவிர யாரும் இல்லாததால் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கமுடியமால் திகைத்தனர். ஆனால் எதையும் பொருட்படுத்தாத அமைச்சர், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி புத்தகங்களில் படித்துள்ளதாகவும், கயத்தாறு, பாஞ்சாலங்குறிச்சிக்கு நேரடியாக சென்று பார்வையிட வேண்டும் என்று நீண்டநாட்களாக எண்ணி வந்ததாகவும், தலைவர் கலைஞர் கட்டிய இந்தக்கோட்டையை பார்வையிட்டு வரலாறுகளை அறிந்துகொள்ளும் ஆர்வத்திலேயே வந்துள்ளதாகவும் தெரிவித்து கோட்டையை பார்வையிட்டார். அமைச்சரோடு சென்ற ஆலயக்குழு பொதுச்செயலாளர் செந்தில்குமார் கோட்டையில் அமைந்துள்ள புகைப்படங்களைக்காட்டி வரலாற்று நிகழ்வுகளை அமைச்சருக்கு விளக்கினார்.


கோட்டையை பார்வையிட்டு முடித்துக்கொண்ட அமைச்சர் அன்னை வீரசக்கதேவியின் சன்னதிக்கு வருகைதந்தார். அப்பொழுது சிறப்புப்பூஜை நடத்தி, அமைச்சருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. மிகுந்த பக்தியோடு அம்மனை வழிபட்டுக்கொண்டு, இந்த மண்ணிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்து விடைபெற்றுச் சென்றார்.

அமைச்சர் தூத்துக்குடி செல்லும் வழியில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் வாரிசுதாரர் வீமராஜா அவர்களை சந்த்தித்து நலம் விசாரித்ததாக சொல்லப்படுகிறது. அன்னையின் சன்னதிக்கும், மன்னவனின் கோட்டைக்கும் வருகைதந்து சிறப்பித்த அமைச்சருக்கு இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved