🔴 LIVE | முப்பெரும் விழா 2023


68 சீர்மரபு பழங்குடி சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு!

சீர்மரபினர் சமுதாய (DNC) மக்கள்தொகை, சமூகம் பொருளாதார நிலையைக் கணக்கெடுக்க தனி ஆணையம் அமைக்க தாக்கலான வழக்கில் மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுசம்மந்தமாக அனைத்து மறவர்நலக் கூட்டமைப்பின் ஆலோசகரும், தமிழ்நாடு தடயவியல் துறையின் முன்னாள் இயக்குநருமான C.விஜயகுமார் அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, அனைத்து மாநிலங்களிலும் சீர்மரபினர், நாடோடிகள் மற்றும் அரை நாடோடிகள் வகுப்பினரின் மக்கள் தொகை, குடும்பம், சமூகம் பொருளாதார நிலையை தனி அதிகாரியை நியமித்து கணக்கெடுப்பு நடத்தி 2020 டிசம்பர் 31-க்குள் சமர்ப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

கணக்கெடுப்பு நடத்துவதற்குறிய செலவுத் தொகையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூக, அரசியல், கல்வி, பொருளாதார உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத சமூகத்தினராக சீர்மரபு பழங்குடி வகுப்பினர் உள்ளனர். இதற்கிடையே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீதிபதி குணசேகரன் தலைமையில் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் நன்மை செய்யும் நோக்கில் ஒருதலைப்பட்சமாக செயல்படும். மிகவும் பின்தங்கிய 68 சாதிகள் அடங்கிய சீர்மரபு பழங்குடியினரின் உண்மையான, சரியான தகவலை சேகரிக்காது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டு ஓராண்டு காலம் தாண்டியும் இதுவரை எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை. இதற்காக அரசு செலவிடும் மொத்த நிதியும் வீண் விரையம் ஆகும், எனவே அதை கலைக்க வேண்டும்.

சீர்மரபினர் வகுப்பினரின் மக்கள் தொகை. குடும்பம், சமூக பொருளாதார நிலையைக் கணக்கிட தனி ஆணையம் அமைக்கக் கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பியும், இதுவரை எந்த பதிலையும் அரசு அளிக்கவில்லை. எனவே என் மனுவினை பரீசிலிக்க தமிழக அளிக்க உத்தரவிட வேண்டும் என்று விஜயகுமார் அவர்கள் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தபொழுது தமிழக பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை முதன்மைச் செயலாளர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஆகஸ்ட் -1 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved