🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வேட்பாளரானார் மார்க்ரெட் ஆல்வா - ஆண்களோடு மல்லுக்கட்டும் பெண்கள்

நாட்டின் 13வது குடியரசு துணைத் தலைவராக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கையா நாயுடு பதவி வகிக்கிறார். இவரது பதவிக்காலம், வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேற்கு வங்க மாநில ஆளுநரான ஜெகதீப் தங்கர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டு பா.ஜ.க சார்பாக ஜெகதீப் தங்கர் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வாவை குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேர்வு செய்தன. சட்டம் பயின்றவரான மார்க்ரெட் ஆல்வாவின் கணவர் மற்றும் மாமியார் வயலட் ஆல்வா அகியோர் காங்கிரசு கட்சியின் தலைவர்கள் ஆவார். மாமியார் வயலட் ஆல்வா நாடாளுமன்ற மேலவையின் துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்ட்டிரிய ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கலந்துகொண்டன. 16 எதிர்க்கட்சிகள் சேர்ந்து குடியரசு துணைத்தலைவர் வேட்பாளரை முடிவு செய்துள்ளதாக சரத் பவார் தெரிவித்தார். குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக தன்னை தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்துள்ள மார்கரெட் ஆல்வா, தன்னை வேட்பாளராக தேர்வு செய்தது தனது பாக்கியம் என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்யக்கடைசி நாளான இன்று மார்கரெட் ஆல்வா வேட்புமனுவை தாக்கல்செய்தார்.இந்த நிகழ்வில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, அதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், திமுக எம்பி திருச்சி சிவா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 77 வயதாகும் மார்கரெட் ஆல்வா 1942-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம், மங்களூரில் பிறந்தவர். உத்ரகாண்ட், இராஜஸ்தான், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆளுநராக இருந்த அனுபவமிக்கவர். அதோடு மத்திய அமைச்சராகவும், ஐந்து முறை எம்.பி-யாகவும் இருந்து அனுபவப்பட்டவர்.

ஏற்கனவே குடியரசுத்தலைவர் வேட்பாளர்களாக ஆளும் கட்சி சார்பில் பெண்ணும், எதிர்க்கட்சி சார்பில் ஆணும் போட்டியிடும் நிலையில், துணைக்குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டியில் ஆளும்கட்சி சார்பில் ஆணும், எதிர்க்கட்சிகள் சார்பில் பெண்ணும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved