🔴 LIVE | முப்பெரும் விழா 2023


படை திரண்ட கோவை! - கொங்கு மண்டல எழுச்சி!

மதுரையில் விஜயநகர பேரரசு அமையும் முன்பே தாவளம் அமைத்து கோட்டை - கொத்தளம் கண்டு கம்பளத்தாரின் வெற்றிக்கொடியை பறக்க விட்ட மண் கோவை. ஓரணியாய் நின்று நம் மூத்தகுடிகள் வெற்றிகொண்ட மண்ணில் மீண்டும் சமுதாயமாக திரள வேண்டும் என்ற ஏக்கம் மக்களிடம் சில வருடங்களாக மேலோங்கி வருகிறது. மக்களின் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்க பல தலைவர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தனர். அதன் விளைவாக கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தொடங்கப்பட்டு, அதன் நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.


கோவை,ஈச்சனாரி - செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ள விவேகா திருமண மண்டபத்தில் சங்கத்தின் தொடக்க விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மாச்சேகவுண்டன் பாளையம் துரை சிவசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் திருவுருவப்படத்தை ஈச்சனாரி.மகாலிங்கம்  திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவப்படத்தை ராஜமூர்த்தி திறந்து வைத்தார்.

இக்கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய ஆர்.ஏ.கணேசன், கம்பளத்தாரின் வீரமிகு வரலாற்றை தனக்கே உரிய வெங்கல குரலோசையில் முழங்கினார். சிறப்புரையாற்றிய ஈச்சனாரி மகாலிங்கம்  , சமூகநீதி எதிர்நோக்கும் சவால்கள், இடஒதுக்கீடு வரலாறு,  சந்தித்த சட்டப்போராட்டங்களை பட்டியலிட்டு சமூக ஒன்றிணைய வேண்டிய தேவையை எடுத்துரைத்தார். 


தலைமையேற்பு உரையாற்றிய மாச்சேகவுண்டன் பாளையம் துரை சிவசாமி, இன ஒற்றுமைக்கு கட்டியம் கூறும் இக்கூட்டம், கம்பளத்தாரின் புதிய அத்தியாயத்திற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளதை நிரம்பி வழியும் அரங்கமே சாட்சியாக உள்ளது. இப்பெருமைமிகு கூட்டத்திற்கு தலைமை ஏற்பது பாக்கியமாக கருதுவதாக குறிப்பிட்டார். இராமச்சந்திராபுரம் பழனிச்சாமி பேசுகையில் காரல் மார்க்ஸின் தத்துவத்தை மேற்கோள்காட்டி அளவு மாற்றமே பண்பு மாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. அதுபோல் இங்கு கூடியுள்ள கூட்டம் நிச்சம் கம்பளத்தாரின் வரலாற்றை மாற்றி எழுதும் என்றார். 


மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் பேசுகையில்,  கால்நூற்றாண்டுகள் கடந்த என்னுடைய அரசியல் பயணத்தில் சாதி மட்டுமே வெல்லதை பல தருணங்களில் கண்கூடாக பார்த்து வருகிறேன். சாதியைக் கடந்து சமகால அரசியலில் எதுவுமில்லை என்றும்  அரசியல் கனவில் மிதப்பவர்களின் அடிக்கட்டுமானம் தங்களது சமூகத்தில் மட்டுமே உள்ளது, ஆகையல் முதலில் சமுதாயப்பணியாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும். ஆகஸ்டு 7-இல் மதுரையில் நடைபெறும் சமூகநீதி மாநாடு நமக்கான பயிற்சி களங்களாக அமையும். குறுகிய வட்டத்தில் இருந்துகொண்டு அரசியல் பெருங்கடலை நீந்த முடியாது. அரசியல் கடலில் நீந்துமுன் இதுபோன்ற பல சமுதாயங்கள் இணைந்து நடத்தும் மாநாட்டில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 


இறுதியாக கோவை தெற்கு, கோவை வடக்கு மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள தலைவர்களை அறிமுகப்படுத்தி, வாழ்த்தி சிறப்புரையாற்றினார் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் ராமராஜ். 

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் கூட்டத்திற்கு முன்னிலை வகித்த அனைத்து கிராம ஊர்நாயக்கர்களும் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர். 

கவுன்சிலர் மாசிலாமணி, நல்லட்டிபாளையம் மணியகாரர் மணிகண்டன்,  குள்ளக்காபாளையம் கொத்துக்காரர் தன்ராஜ், பெரியதொட்டிபாளையம் மனோகரன் உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இக்கூட்டத்திற்கு நன்றியுரை வழங்கினார் மாச்சேகவுண்டன் பாளையம் கணேசன்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved