🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாம் இருவர் இணைந்தால் மாற்றம் உறுதி! - கரம் கோர்க்க அழைக்கும் வேட்டுவர்!

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 262 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பான "சமூகநீதி கூட்டமைப்பு" சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (07.08.2022) மாலை 3 மணியளவில் மதுரை விமான நிலையம் அருகே மாபெரும் சமூகநீதி மாநாடு நடைபெறவுள்ளது.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக 262 சாதிகள் ஒருங்கிணைந்து ஒரு மாநாட்டை நடத்துவது இதுவே முதல்முறையென்பதால், எல்லா சமூக அமைப்புகளும் கிராமம் தோரும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. தொட்டிய நாயக்கர் சமூக அமைப்புகளும் நாமக்கல், கோவை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, இராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மக்களை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இப்பிரச்சாரத்தின் மூலம் பல சமூக அமைப்புகள் ஒன்றோடு ஒன்று கலந்துரையாடி, கூட்டாகவும், தனித்தனியாகவும் உறவுகளையும், தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொண்டு நட்புறவு பாராட்டி வருகின்றனர். இதன் வெளிப்பாடாக கொங்கு மண்டல கிராமங்களில் பெரும்பாலனவற்றில் தொட்டிய நாயக்கர் - வேட்டுவக்கவுண்டர் சமூகங்கள் நீண்டகால நட்பு சக்திகளாக இருந்தாலும், பொது அரங்கில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலைமாறி, தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர், DNT பட்டியலில் இடம்பெற்றுள்ள இருசமூகங்களும் இணைந்து இடஒதுக்கீடு, ஒற்றைச்சான்றிதழ் உள்ளிட்ட விவகாரங்களில் போராடி வருகின்றன.

சமூகநீதி மாநாட்டின் மூலம் இந்த உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. மாநாட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேட்டுவக்கவுண்டர் சமுதாய தலைவர்கள் தொட்டிய நாயக்கர் சமுதாயம் வசிக்கும் கிராமங்களுக்கும் சென்று  மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் கரூர் மாவட்டத்தில் கம்பளத்தார் கோவில் திருவிழாவின்போது தொட்டிய நாயக்கர் சமுதாய முக்கியத்தலைவர்களையும், ஊர்பொதுமக்களையும் சந்தித்து சமூகநீதி மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்கினர். 

அதேபோல் நேற்று முன்தினம் 01.08.22 ஈரோடு மாவட்டம் பவானி சாகர் ஒன்றியம் பாச்சாமல்லனூர் ஊர் பெரியவர்களையும், தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களையும் சந்தித்த வேட்டுவக்கவுண்டர் சமுதாய தலைவர்களான முனுசாமி கவுண்டர், அம்மாசைக் கவுண்டர், சத்தி, முத்துசாமி கவுண்டர்,  ரங்கசாமி கவுண்டர் மற்றும் செல்வராஜ் ஆகியோர் மதுரை சமூகநீதி மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினர். ஏற்கனவே கரூர், ஈரோடு, திருப்பூர் பகுதிகளிலுள்ள இருசமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரவர் இனத்திற்கான உரிமைகளை காப்பதும், போராடி பெறுவதும் அந்தந்த சமுதாயத்தினர் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் பொதுவான அடிப்படை உரிமைகள் குறித்தான விழிப்புணர்வும், நிகழ்கால அரசியல் மோசடிகள் பற்றி ஏதுமறியாத மக்கள் அதிகமுள்ள சாதிகளில், அமைப்புகளும், தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே அரசின் செவிகளுக்குப்போய்ச் சேரும். இப்புதிய முயற்சியை முன்னெடுத்துள்ள வேட்டுவக்கவுண்டர் சமுதாய உறவுகளுக்கு நன்றியும், வாழ்த்தும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved