🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாயக்கர் படை சிந்திய குருதியில் பிறந்துள்ள கோவை நலசங்கம்! - மூத்த தலைவர் வாழ்த்து!

கோவை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இராஜ கம்பள சமுதாய நலச் சங்கத்திற்கும், அதன் நிர்வாகிகள் மற்றும் சங்கம் தொடங்க பேருதவியாக இருந்த ஊர்பெரியவர்கள், தலைவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று தொடங்கப்பட்டுள்ள கோவை இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் கொங்கு மண்ணில் நம் இன மக்களுக்கு  ஓர் கலங்கரை விளக்கமாக திகழ்ந்திட வேண்டும். 

சான்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்து  உருவாக்கியிருக்கும் இந்த அமைப்பானது கல்விக்கு நல்ல களமாக விளங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கொங்கு மண்ணிலிருந்து  எண்ணற்ற கல்வியாளர்களை உருவாக்கி, நம்மவர்கள் அரசு உயர்பதவிகளில் காவல் துறை அதிகாரிகளாக அரசியல் ஆளுமைகளாக மாவட்ட ஆட்சித்தலைவர்களாக எதிர் காலத்தில் உருவாக்கிட வேண்டிய மிகப் பெரும்  பொறுப்பு இச்சங்கத்திற்கு உள்ளது. இச் சங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு  சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் சமுதாய நலச் சங்கம் ஊன்றுகோளாகவும்,  உறுதுணையாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும், பல அரசியல் மாற்றங்களுக்கும் பல அரசியல்  தலைவர்களை உருவாக்கியதற்கும் களமாக கொங்கு மண்டலம் இருந்துள்ளது. அரசியல்  அதிகாரம் இல்லாமல் எந்த  இனமும் முன்னேற முடியாது. இதை கடந்த 

50 ஆண்டு கால தமிழக அரசியல்  நமக்கு அறிவுறுத்தி உள்ளதையும்  நாம் மறக்க கூடாது. ஒரே இனமாக ஒன்றுபட

வேண்டிய  தருணம் இது. இதை உணர்ந்து செயல்படட்டும் கோவையில் புறப்படட்டுள்ள இப்புதிய படை. 

ஆம், கி.பி.1800-இல் விருப்பாட்சி கோபால் நாயக்கர் தலைமையில் திரட்டப்பட்ட  படை நடத்திய "கோவை கலவரம்" என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட அந்த நிகழ்வு வெற்றிபெற்றிருந்தால் ஆங்கிலேயர்களை இந்த நாட்டை விட்டே  துரத்திய பெருமை பெற்றவர்களாக நாமாகியிருப்போம். சதிகாரர்களின் சிலரின் சூழ்ச்சியால் திட்டம் தோல்வியுற்று ஆயிரக்கணக்கான உயிர்களை இந்த நாட்டிற்காக நம்மவர்கள் தியாகம் செய்தனர்.  இரண்டு நூற்றாண்டிற்குப்பின்  நம் தியாக வீரர்களின் செங்குருதியில் முளைத்துள்ள கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், விருப்பாச்சி நாயக்கரின் ஆசியோடு வெற்றியை உறுதி செய்யும். 

இனத்தின் பெயரில் சங்கம்  அமைப்பதை சிலர் விமர்சிக்கலாம். இனம் அல்லது  சாதி என்பது  நமது அடையாளம். குறிப்பிட்ட பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகளுடன் வாழும் குழுக்களை சாதி என்கிறோம். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைப்பு  ஏற்படுத்துவது எப்படி தவறாகும்?.

எனவே எதிர்வரும் விமர்சங்களை புறந்தள்ளிவிட்டு, இன மக்களை உயர்த்துவதும், இழந்த பெருமைகளை மீட்பதுமே இலக்காக கொண்டு செயலாற்றி வெற்றிபெற மீண்டுமொருமுறை  கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கும், புதிய நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன். 

கோவையில் புறப்பட்டுள்ள புதிய படையின் அறிவாயுதத்தை பட்டை தீட்டிடும் பட்டறையாக மதுரை சமூக நீதி மாநாடு அமையட்டும். ஆகஸ்டு 07-இல் மதுரையில் உங்களை எல்லாம் சந்திக்க, ஆர்வம்  பொங்கும் விழிகளுடன் காத்திருக்கிறேன் வாருங்கள் சந்திப்போம்! சிந்திப்போம்! சாதிப்போம்!.

அன்புடன், 

சௌந்தர பாண்டியன், 

போடிநாயக்கனூர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved