🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூகநீதி மாநாடு!- 20 ஏக்கரில் தயாராகிவரும் பிரமாண்ட ஏற்பாடுகள்!

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 262 சாதிகள் இணைந்த "சமூகநீதி கூட்டமைப்பு" சார்பில் மதுரை விமானநிலையம் அருகே நடைபெறவுள்ள சமூகநீதி மாநாடு-க்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


மாநாடு நடத்துவதற்கான அனுமதியை காவல்துறை கடந்த வாரம் வழங்கிய நிலையில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை சமன்படுத்தும் வேலைகள் நிறைவு பெற்று, மாநாட்டு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக மதுரையில் முகாமிட்டுள்ள சமுதாய தலைவர்கள் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.


 தொட்டிய நாயக்கர் சமூகம் சார்பில் கடந்த ஒருவாரமாக மதுரையில் தங்கியுள்ள ஒருங்கிணைப்பாளர் P.இராமராஜ், பல்வேறு சமுதாய தலைவர்களோடு இணைந்து தினந்தோறும் மாநாட்டு அரங்கில் இருந்து மாநாட்டுப்பணியை பார்வையிட்டு வருகிறார். அவ்வபொழுது நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி மற்றும் அக்கம்மாபாளையம் சரவணன் உள்ளிட்ட தலைவர்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.


இதுதவிர விடுதலைக்களம் சார்பில் கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அக்கட்சியின் தலைவர் கொ.நாகராஜன் தேனியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்தார். சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஏற்பாட்டில் விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம், இராமநாதபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சமூகநீதி மாநாட்டிற்கு சமுதாய உறவுகளை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக தலைவர்களை நேரில் சந்தித்து நாமக்கல் அறக்கட்டளை தலைவர் விடுத்த அழைப்பின் காரணமாக விழா மலரில் விளம்பரம் செய்யப்படுவதோடு, தொண்டர்களும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved