🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மீடியாக்கள் பார்வை கம்பளத்தார் மீது....

தேர்தல் காலங்களில் கம்பளத்தார்களுக்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்குவதில்லை என்பது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு ஏக்கம். ஆனால் கம்பளத்தார் என்று ஒரு தனி சமூகம் இருப்பதே பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தெரியவில்லை என்பதே அரசியல் கட்சித் தலைவர்களிடம் பேசும்பொழுது தெரியவரும் உண்மை.  பெரும்பாலான அரசியல் கட்சிகளின் எண்ணம் நாயுடு-நாயக்கர் எல்லாம் ஒரே சமூகம் என்பதே. 

இல்லை நாங்கள் தனி சாதி, எங்கள் பழக்க வழக்கங்கள், பண்பாடு வேறு என்று விளக்கும்பொழுது அவர்கள் முன்வைக்கும் அடுத்த பதில், ஓ... அந்த குடுகுடுப்பைக்காரர்களா? என்பது. அவர்களிடம் பாளையக்காரர் வரலாறு, வீரபாண்டிய கட்டபொம்மன், க.சுப்பு என விளக்கும்பொழுது தான், அப்படியா? என்கின்றனர். கம்பளத்தார் சமுதாயம்பற்றி நன்கு அறிந்த தென்மாவட்ட அமைச்சர்கள் சொல்வது உங்களிடம் ஒற்றுமையில்லை என்ற ஒற்றை வார்த்தை தான்.

மீடியாக்கள் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. தேர்தல் காலங்களில் கருத்துக்கணிப்புகளை நடத்தும்பொழுது தொட்டிய நாயக்கர் சமூகம் அதிகமுள்ள தொகுதிகளில் கூட நாயுடுகள் மக்கள்தொகை என்று தான் குறிப்பிடுவார்கள். எனவே ஊடகவியலாளர்களுக்கும் தொட்டிய நாயக்கர் சமூகம் குறித்து எந்தவித புரிதலும் இல்லை. இந்தநிலை தற்பொழுது மாறத்தொடங்கியிருக்கிறது என்பதின் வெளிப்பாடுதான் சத்தியம் தொலைக்காட்சியில் "சத்தியம் சாத்தியமே" விவாத நிகழ்ச்சியில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜனுக்கு வழங்கியுள்ள வாய்ப்பு.

DNT ஒற்றைச்சான்றிதழ், வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரின் பங்களிப்பும், பங்கேற்பும் ஊடகங்களின் கவனத்தைப்பெற்று வருகின்றன. இது நேற்றைய மதுரை சமூக நீதி மாநாட்டிலும் எதிரொலித்தது. 250-க்கும் மேற்பட்ட சாதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாக உளவுத்துறை பதிவு செய்துள்ளது. மேலும், எல்லா சாதிகளிலும் பல அமைப்புகள் தனித்தனியாக கலந்துகொண்டது  தங்களிடையேயான முரண்பாடுகளை  வெட்ட வெளிச்சமாக்கியது. ஆனால் எந்த சமுதாயத்திடம் ஒற்றுமை இல்லை என்று சொன்னார்களோ அந்த தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த த.வீ.க.பண்பாட்டுக்கழகம், விடுதலைக்களம் கட்சி, நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை, இராஜகம்பளத்தார் மேன்மக்கள் கல்வி அறக்கட்டளை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஆகியவை ஒற்றுமையாக ஓரணியாக திரண்டிருந்தது சமூகநீதி கூட்டமைப்பு தலைவர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நீண்ட கால ஏக்கமாக உள்ள கம்பளத்தாரின் அரசியல் அதிகாரத்திற்கு புதிய வெளிச்சம் பிறந்துள்ளது. இதை தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து முன்னெடுத்துச் சென்று சாத்தியமாக்குவதே சவால்.  எது எப்படியோ இதுவரையிலான உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியான விசயம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved