🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இக்கட்டான சூழலில் இரட்டை இலை - இலையின் பிதாமகன் காலமானார்.

எம்.ஜி.இராமச்சந்திரன் கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து விலகி 1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.  திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திமுக எம்பி ராஜாங்கம் காலமானதைத் தொடர்ந்து, கட்சி தொடங்கிய ஒருசில மாதங்களிலேயே நாடாளுமன்ற இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1973 மே 10-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக-வின் முதல் வேட்பாளராக போட்டியிட்டவர் மாயத்தேவர்.  வழக்கறிஞரான மாயத்தேவர் பார்வார்ட் பிளாக் கட்சியில் அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர், அதிமுக உதயமானபொழுது அக்கட்சியில் இணைந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள டி.உச்சபட்டி கிராமத்தில் பிறந்த மாயத்தேவர், வழக்கறிஞராக எம்ஜியாருக்கு முன்பே அறிமுகம் ஆனவர். அதுவரை எந்த தேர்தலையும் சந்தித்திராத புதிய கட்சியான அதிமுக-விற்கு சுயோட்சை சின்னம் ஒதுக்கப்பட இருந்தநிலையில் "விளக்கு" சின்னத்தை தேர்ந்தெடுக்க எம்ஜியார் பரிந்துரை செய்தபொழுது வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்தார் மாயத்தேவர். இரட்டை இலையை தேர்வு செய்தது குறித்து எம்ஜியாரிடம் விளக்கமளித்த மாயத்தேவர், இங்கிலாந்து நாட்டின் வின்சன்ட் சர்ச்சில் வெற்றியின் சின்னமாக இருவிரல்களைக் காட்டி மக்களிடம் கொண்டு சேர்த்ததுபோல், நாமும் இரட்டை இலையை கொண்டுசேர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் நினைத்தது போலவே அன்று முதல் இன்று வரை ஐம்பதாண்டுகாலம் தமிழகத்தில் வெற்றிச்சின்னமாக இரட்டை இலை தொடர்கிறது. பொன்விழா ஆண்டை கொண்டாட வேண்டிய அதிமுக உட்கட்சிப்பிரச்சினைகளால் தத்தளித்து தடுமாறிவரும் நிலையில், கட்சியின் எதிர்காலம் குறித்து கோடிக்கணக்கான தொண்டர்கள் கவலைப்பட்டு வரும் சூழலில், இரட்டை இலையின் பிதாமகன் மாயத்தேவர் மறைவு கட்சித் தொண்டர்களுக்கு நிச்சயம் நல்ல சகுனமாக இருக்காது. வயது முதிர்வின் காரணமாக அரசியலில் இருந்து விலகி மதுரை சின்னாளப்பட்டியில் குடும்பத்தினரோடு வசித்து வந்த மாயத்தேவர் அதிமுக வரலாற்றோடு இரண்டரக் கலந்தவர். 

காரல் மார்க்ஸ் குறித்து ஜெயகாந்தன், "இவனுக்கு முந்தைய வரலாறு அனைத்தும் இவனில் முடிந்து, பிந்தைய வரலாறு அனைத்தும் இவனில் தொடங்குகிறது" என்று எழுதியிருப்பார். அதுபோல் அதிமுக-வின் சின்னம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் "இரட்டை இலையின் வரலாறு அனைத்தும் மாயத்தேவரில் தொடங்கி அவரோடு முடிவு பெறுகிறதா?" என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved