🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ரத்தாகிறதா இலவச மின்சரம்? - புதிய சட்டம் சொல்வது என்ன?

இந்திய அரசு நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை அறிமுகம் செய்த "மின்சார திருத்தச் சட்ட மசோதா - 2022" கடுமையான எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது. இப்போது இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போதைய வடிவில் இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்? இது தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை கேள்வி பதில்களாக தொகுத்து வழங்கப்படுகிறது.

கே. இந்த சட்ட மசோதாவை பல்வேறு மாநில அரசுகள் ஏன் எதிர்க்கின்றன?

ப. இந்தியாவில் மின் உற்பத்தியில் பெருமளவில் தனியார் நிறுவனங்கள் இருந்தாலும் விநியோகத்தைப் பொறுத்தவரை மாநில அரசுகளே மேற்கொண்டு வருகின்றன. மின் விநியோகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், நுகர்வோருக்கான சலுகைகளை மாநில அரசுகளால் வழங்க முடிகிறது.

மின்சார விநியோகம் முழுவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், அதற்கான மின் கட்டமைப்பையும் மாநில அரசுகளே உருவாக்கியிருக்கின்றன. இந்த நிலையில், வேறு தனியார் நிறுவனங்கள் மின் விநியோகத்தில் ஈடுபட்டால், ஏற்கெனவே மாநில அரசுகள் உருவாக்கிவைத்திருக்கும் மின் தொடரமைப்பை அவை பயன்படுத்திக்கொள்ளலாம் என பழைய சட்டத்தின் 42வது பிரிவில் செய்யப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம் சொல்கிறது.

ஒரு நிறுவனத்தின் மின் கட்டமைப்பை வேறொரு மின் விநியோக நிறுவனமும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதன் மூலம் நுகர்வோர் தரமான சேவையைத் தேர்வு செய்ய முடியும் என்று மத்திய அரசு சமாதானம் சொல்கிறது.

ஆனால், மிகப் பெரிய செலவில் மாநில அரசுகள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பை, புதிய நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு ஏன் தர வேண்டுமென மாநில அரசுகள் கேள்வி எழுப்புகின்றன. இந்த பயன்பாட்டிற்கென தனியார் நிறுவனங்கள் ஒரு கட்டணத்தைத் (Wheeling Charges) தருமென்றாலும் அவை போதுமானதாக இருக்காது. மேலும், அதில் நிறுவனங்கள் ஏமாற்றுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பது மாநில அரசுகளின் ஆட்சேபணைக்கு முக்கியமான காரணம்.

ஒரு பகுதியல் மின் தொடர் கட்டமைப்பை வைத்திருக்கும் நிறுவனம், அதே பகுதியில் புதிதாக உரிமம் பெறும் நிறுவனத்திற்கு தனது கட்டமைப்பைத் தர மறுத்தால், ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறையீடு செய்து நிவாரணம் பெற முடியும்.

கே. இந்தச் சட்ட மசோதா இதே வடிவில் ஒருவேளை அமல்படுத்தப்பட்டால், இலவச மின்சாரம் போன்ற சலுகைகள் ரத்தாகுமா?

ப. இந்த புதிய திருத்தச் சட்ட மசோதாவில் இலவச மின்சாரம் அளிக்கப்படுவது தடை செய்யப்படவில்லை. ஆனால், மின்சாரத்திற்கு உரிய கட்டணம் நிர்ணயம் செய்வதை வலியுறுத்துவதின் மூலம் இலவச மின்சாரம் தொடர வாய்ப்பில்லை. இலவச மின்சாரம் வழங்கிவரும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள், தொழிற்சாலைப் பிரிவினருக்கு கூடுதல் கட்டணத்தை வசூலித்து, அதில் கிடைக்கும் உபரி வருவாய் மூலம் மாநில மின் வாரியங்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், தனியார் நிறுவனங்கள் மின்சார விநியோக உரிமையை பெறும்போது, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு நிர்ணயிக்கப்படும் அதிகபட்ச கட்டணத்தை ஒழுங்குமுறை ஆணையமே தீர்மானிக்கும். அதேபோல, தனியார் மின் விநியோக நிறுவனங்கள் இடையே போட்டியை உறுதி செய்ய, குறைந்தபட்ச கட்டணத்தை ஆணையம் நிர்ணயிக்கும். அதைவிட குறைந்த விலையில் மின்சாரத்தை மாநில அரசுகளால் தர இயலாமல் போகக்கூடும்.

கே. இந்தத் திருத்தங்களால் நுகர்வோருக்கான மின்சார கட்டணம் உயரக்கூடுமா?

ப. மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்பதை இந்தச் சட்டம் நேரடியாகச் சொல்லவில்லை. ஆனால், மின்சாரக் கட்டணமானது, உற்பத்தியிலிருந்து விநியோகம் வரையில் ஆகும் எல்லாக் கட்டணத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. இது முழுக்க முழுக்க விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது, மின் கட்டணம் நேரடியாக உயரும் என்று சொல்லாமல் அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியதாக மின் கட்டணம் இருப்பதை உறுதி செய்கிறது.

மாநில மின் விநியோக நிறுவனங்கள், செலவுக்கு ஏற்றவகையில் மின் கட்டணத்தை நிர்ணயித்துவிட்டு, நுகர்வோருக்கு மானியங்களை அதிகரித்து அளிப்பதன் மூலம், மின் கட்டணம் உயராமல் தடுக்க முடியும். ஆனால், நிதி நெருக்கடியில் உள்ள மாநிலங்களால் இதனை எந்த அளவுக்குத் தாங்க முடியும் என்பது கேள்விக்குறிதான்.

கே. இந்த புதிய சட்டத்திருத்த மசோதாவில் நேஷனல் லோட் டெஸ்பாட்ச் சென்டருக்கு (National Load Despatch Centre) கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறதா, ஏன் அளிக்கப்பட்டிருக்கிறது?

ப. முந்தைய சட்டத்தில் நேஷனல் லோட் டெஸ்பாட்ச் சென்டர் என்பது, மின்சார விநியோகத்தை நாடு முழுவதும் முறைப்படுத்தும் என்ற வகையில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் திருத்தச் சட்ட மசோதாவில், மின் விநியோகத்தின் உச்சகட்ட அமைப்பாக நேஷனல் லோட் டெஸ்பாட்ச் சென்டர் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் விநியோக நிறுவனங்களும் உற்பத்தி நிறுவனங்களும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மின்விநியோகத்தை இந்த அமைப்பே கண்காணிக்கும். ஒப்பந்தத்தில் இருப்பதைப் போல பணம் கொடுக்கப்படாமல் மின்சாரம் வழங்கப்படமாட்டாது. மாநிலங்களுக்கு இடையிலும் பிராந்தியங்களுக்கு இடையிலுமான மின் விநியோகத்தை இந்த அமைப்பே கட்டுப்படுத்தும். நாடு முழுவதுமான மின் விநியோகக் கட்டமைப்பு இந்த அமைப்பிடமே இருக்கும்.

நேஷனல் லோட் டெஸ்பாட்ச் சென்டர் அளிக்கும் கட்டுப்பாடுகளை மாநிலத்தின் மின் அமைப்புகள் கேட்டுச் செயல்பட வேண்டும். அவற்றை மீற முடியாது.

இதற்குக் காரணம், மாநில மின் நிறுவனங்கள் தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தை வாங்கிவிட்டு, தொகையைச் செலுத்தாமல் கடன் வைக்கின்றன. இதனால், அந்த தனியார் உற்பத்தியாளர்கள் தாங்கள் வாங்கிய கடனை வங்கிகளுக்குச் செலுத்த முடிவதில்லை. இதனால் வங்கிகளின் வாரா கடன் தொகை அதிகரிக்கிறது. இந்த நிலையில்தான், மாநில நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையைச் சரியாகச் செலுத்துவதை உறுதி செய்ய கூடுதல் கட்டுப்பாடு நேஷனல் லோட் டெஸ்பாட்ச் சென்டருக்கு அளக்கப்படுகிறது.

கே. சிலருக்கு அதிக விலையில் மின்சாரத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தை, வேறு பிரிவினருக்கு குறிப்பாக விவசாயிகள், நெசவாளிகள், வீட்டு நுகர்வோருக்கு பகிர்ந்தளிக்கும் முறை (Cross subsidy) இந்தச் சட்டத்தால் நீக்கப்படுகிறதா?

ப. தனியாரும் மின் விநியோகத்தில் பங்கெடுக்கலாம் என்பதால், ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு உரிமம் தரும்போது, மின்சாரத்தைக் கூடுதல் விலைக்கு வாங்குபவர்களிடமிருந்து பெறும் தொகையை வேறு பிரிவினருக்கு மானியமாகத் தருவதற்கு ஏதுவாக, ஒரு நிதியை அரசு உருவாக்க வேண்டும் என இந்தச் திருத்தச் சட்ட மசோதா வலியுறுத்துகிறது.

கே. விதி மீறல்களுக்கான அபராதம் குறித்து மாநில அரசுகள் ஆட்சேபிப்பது ஏன்?

ப. இந்த சட்டத்திருத்த மசோதாவில் அபராதத் தொகை கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மின்சார சட்டத்தை ஒரு மின் விநியோக நிறுவனம் மீறுவதாக கண்டறியப்பட்டால், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்க முடியும். அது தொடர்ந்து நடக்கும்பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஆறு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். அதேபோல, ஒழுங்கு முறை ஆணையம் விதிக்கும் விதிமுறைகளை மீறினால், ஒவ்வொரு மீறலுக்கும் பத்து லட்ச ரூபாய் அபராதமும் தொடரும் பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் 60,000 ரூபாய் அபராதமும் விதிக்க முடியும்.

பெரும்பாலான மின் விநியோகத்தை மாநில மின் வாரியங்களே மேற்கொள்ளும் நிலையில், இது யதார்த்தத்திற்குப் பொருந்தாத ஒன்று என்றும் மாநில மின் வாரியங்களின் நிதிச் சுமையை இது அதிகரிக்குமென்றும் மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

கே. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மாநில அரசுகளின் அச்சங்கள் என்ன?

ப. தனியார் நிறுவனங்கள் மின் விநியோகத்தில் ஈடுபடுவதை புதிய சட்டத் திருத்த மசோதா வெகுவாக ஊக்குவிக்கிறது. ஆனால், லாபம் தரக்கூடிய பகுதிகளில் மட்டுமே தனியார் நிறுவனங்கள் மின் விநியோகத்தில் ஈடுபடும். அந்த லாபம் முழுக்க அவர்களையே சென்று சேரும். கிராமங்கள், விவசாயப் பகுதிகளுக்கு மின் விநியோகத்தை அரசே மேற்கொள்ள வேண்டியிருக்கும். லாபம் தரக்கூடிய பகுதிகள் தனியாருக்குச் சென்றுவிட்டால், Cross subsidy மூலம் பிற பிரிவினருக்கு சலுகைகளைத் தர முடியாது. இது மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தும் என மாநில அரசுகள் கருதுகின்றன.

மேலும், புதிய திருத்தத்தின் மூலம், தேசிய மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது மாநில அரசின் உரிமைகளை மீறும் செயல் என மாநில அரசுகள் கருதுகின்றன. மேலும், அபராதங்களை அதிகரிப்பது, மாநில மின் வாரியங்களின் நிதி நிலையை மோசமாக்குமென மாநில அரசுகள் கருதுகின்றன. இவையே இந்த எதிர்ப்புகளுக்குக் காரணம்.

கே. மின்சார திருத்தச் சட்ட மசோதாவின் தற்போதைய நிலை என்ன? அது எப்போது சட்ட வடிவைப் பெறும்?

நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மின்சார சட்டத்திருத்த மசோதா, அறிமுக நிலையிலேயே எரிசக்தித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக இருப்பவர் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ராஜீவ் ரஞ்சன். இந்த குழுவில் 19 மக்களவை 7 மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ளனர். மின்சார சட்டத்திருத்த மசோதா தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர், அமைப்புகள், பொதுமக்களின் கருத்துக்களை இந்தக் குழு வரவேற்கும். பிறகு அரசுத்துறை உயரதிகாரிகளிடமும் விளக்கம் கோரும். அதன் பிறகு நிலைக்குழு பரிந்துரைக்கும் விவரங்கள் திருத்த மசோதாவில் இடம்பெறச் செய்யப்பட்டு மக்களவை சபாநாயகருக்கு அனுப்பப்படும். அதன் பிறகு மீண்டும் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடந்து பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படும். அதன் பிறகு அந்த மசோதா மக்களவை சபாநாயகர் அலுவலகம் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசு தலைவர் ஒப்புதல் தெரிவித்த பிறகே இந்த திருத்த மசோதா சட்ட வடிவத்தைப் பெறும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved