🔴 LIVE | முப்பெரும் விழா 2023


14-வது குடியரசு துணைத்தலைவருக்கு கம்பளத்தாரின் வாழ்த்துகள்!

சுதந்திர இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் இன்று பதவி ஏற்றுக்கொண்டர். முன்னதாக கடந்த இரு வாரங்களுக்கு முன் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்றார். இதனையடுத்து புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கர் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா போட்டியிட்டார். 

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் 725 பேர் வாக்களித்தனர். 92.94 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதில் பாஜக வேட்பாளர் ஜெகதீப் தங்கர் 528 வாக்குகளையும், மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்றனர். 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் ஜெகதீப் தங்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

இதனைத்தொடர்ந்து நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ள ஜெகதீப் தங்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த வெங்கையா நாயுடுவின் பிரிவு உபசார விழா, விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

வழக்கறிஞரான ஜெகதீப் தங்கர் பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர். 1989ம் ஆண்டு முதல் முறையாக ஜுன்ஜுஹுனு லோக்சபாவுக்கு போட்டியிட்டு தேர்வானார். அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இரு ஆண்டுகள் வரை மட்டும் அமைச்சராக இருந்த ஜெகதீப் தங்கர், 1993ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பின்னர் கடந்த 2019ம் ஆண்டு மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜெகதீப் தங்கரை நியமித்து அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.  மேற்கு வங்க ஆளுநராக ஜெகதீப் தங்கர் பதவியேற்றதிலிருந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

குடியரசு துணைத்தலைவராக பதவியேற்றிருக்கும் ஜெகதீப் தங்கர் மாநிலங்களவையின் தலைவராகவும் செயல்படுவார். புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஜெகதீப் தங்கர் அவர்களுக்கு கம்பளத்தார் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved