🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தாரும் அர்ச்சகராகலாம்! - ஆன்மீக அரசியலை வெல்வோம்!

மனித சமூகத்தை கட்டமைப்பதில் மதங்கள் பல்லாயிரம் வருடங்களாக ஆதிக்கம் செலுத்திவருகிறது. மதங்களையும், மதபோதகர்களையும் துணைக்கொண்டு அரசர்கள் மக்களை அடிமைப்படுத்தி, சுரண்டிய வடுக்கள் வரலாறு முழுக்க படிந்துள்ளதை யாரும் மறுக்கமுடியாது. அரசர்கள் மாறினாலும், கடவுள்கள் மாறினாலும், கடவுள் என்ற பெயரை மையப்படுத்தி இயங்கும் மதம் தன் செல்வாக்கை இழந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகில் ஒருசில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளிலும் அரசுகளோடு இணைந்து மதம் இன்றுவரை ஆதிக்கம் செலுத்திவருகிறது. ஒரே மதத்தை பின்பற்றும் மக்களுக்குள் பல்வேறு பிணக்குகள் இருந்தாலும், மதம் அனைவரையும் பேதமின்றி சமமாகவே பாவித்து வருகிறது.

இதிலிருந்து விலக்காக இந்து மதம், தன்னுள் சாதிரீதியான ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியதாக காட்டப்படுகிறது. இந்து மதம் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே எல்லா அதிகாரங்களையும், உரிமைகளையும் வழங்குவதாக, அவர்களே உயர்ந்தவர்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பிற சாதியினர் மதம் சொல்லுவதை பின்பற்றலாமே தவிர, மதத்தை வழிநடத்தவோ, சீர்திருத்தவோ, மதத்திற்குறிய மந்திரங்களைக்கொண்டு பூசனைகள் செய்யவோ, வேதங்களை படிக்கவோ முடியாது எனபது அதிலுள்ள பெரிய சிக்கல். இதனால் இறை நம்பிக்கையுள்ள பிற சமூகங்கள் அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தே ஆன்மிக பரப்பில் இயங்க வேண்டியுள்ளது. மதத்தின் வாயிலாக அரசிலும், மக்களிடமும் செல்வாக்கு பெற்றுள்ள இச்சமூகம், அரசின் அனைத்து அதிகார மட்டத்திலும் ஆதிக்கம் செலுத்துவதுவதோடு, மக்களின் உணவு, வேலை, கல்வி என அனைத்தையும் தீர்மானிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

தமிழ் சமூக மரபில் சாதிகளே இல்லை என்று மறுத்தாலும், அரசியலமைப்பு சட்டம் அனைவரையும் ஏதோ ஒரு மதத்திற்குள் வலிந்து திணித்துவிடுகிறது. தற்போது தான் நீதிமன்றம் வரை சென்று சாதி, மதம் அற்றவன் என்று சான்றிதழ் பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அடிமைச்சமூக காலம்வரை இந்து மதம் செலுத்திய ஆதிக்கம், நவீன காலத்திற்குள் அடியெடுத்து வைத்தது முதல் சோதனைகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் மதம் மாறிக்கொள்வது ஆங்கிலேயர்கள் வந்தபின் எளிதாக நடந்தது. அதிலும் உடன்படாத அம்பேத்கர் போன்றவர்கள் பௌத்தம் தழுவிய நிலையில், பெரியார் உள்ளிட்ட சமூக சிந்தனையாளர்கள் மதத்திற்குள் உள்ள சாதிகளை சமன்படுத்துவதில் முணைப்பு காட்டினர். இந்து மதம் ஒரு இனத்திற்கான மதமாக, அவ்வினத்தின் மேலாண்மைக்கும், நலத்திற்கானது மட்டுமாக இல்லாமல், அனைவருக்குமான சமயமாக இருக்க வேண்டுமென்றால், நிறுவன மயமாக்கப்பட்ட மதத்தில், இறைவனை வழிபடவும், பூசனை செய்யவும் அனைவருக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று விரும்பினர். அதற்காக அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். 

மதத்திலுள்ள பாகுபாட்டினையும், ஆதிக்கத்தையும் நீக்க கடவுளையே மறுத்த பெரியார், அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இதற்காக 1970ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று போராட்டம் ஒன்றை அறிவித்தவர்,  திருநீறு பூசித்தான் கோயில்களில் நுழையலாம் என்றால் தொண்டர்கள் பூசிக்கொண்டு, தமிழகத்தின் முக்கியமான கோயில்களில் நுழையலாம் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பையடுத்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் பெரியார் தன் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

எல்லோரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் இந்தச் சட்டம், ஏற்கனவே இருந்த இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை சட்டத்தின் பிரிவு 55, 56, 116 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தச் சட்டம்தான். இதற்கான மசோதா 2.12.1970 அன்று தமிழக சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதன் முக்கிய கூறு, இந்துக் கோயிவில்களின் எல்லா பகுதிகளின் நியமனத்திலும் பாரம்பரிய (வாரிசு அடிப்படையில் நியமனம்) கொள்கையை நீக்குவது (பிரிவு 55-ல் செய்யப்பட்ட திருத்தம்).

இந்தச் சட்டத்தை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தில் எஸ்.எம். சிக்ரி, ஏ.என். குரோவர், ஏ.என்.ரே, டி.ஜி.பாலேகர், எம்.எச். பெக் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து 1972 மார்ச் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர்.

ஒரு கோயிலில் அர்ச்சகரை நியமனம் செய்யும்போது, ஆகமங்களை மீறி அறங்காவலர் நியமனங்களை மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அரசு கூறியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குறிப்பிட்ட இனம், உட்பிரிவு, குழுவிலிருந்தே அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியது. ஆனாலும் மனுதாரரின் அச்சத்திற்கு இப்போது அவசியமில்லை என்று கூறி சேஷம்மாளின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

சட்டத்தை எதிர்த்தவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தோன்றினாலும் ஆகமத்திற்கு உட்பட்டே நியமனங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்த உத்தரவு வலியுறுத்தியது.

இந்த நீதிமன்ற உத்தரவை பெரியார் கடுமையாக விமர்சித்தார். 1973 டிசம்பர் 8-9ல் பெரியார் திடலில் நடந்த தமிழர் சமுதாய இழிவு மாநாட்டில் பேசிய பெரியார், நண்பர் கருணாநிதி கொண்டுவந்த சட்டத்தை நீதிமன்றம் செல்லாது என்று ஆக்கியதால் ஆத்திரம் அதிகமாவிட்டதாகக் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அரசியல் சாசனப் பிரிவு 25-ஐப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்குவதற்கு ஏதுவாக அந்தப் பிரிவை நீக்க வேண்டுமென கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்த ஆரம்பித்தார். பிரதமருக்கு கடிதங்களை எழுதினார். ஆனால் பிரிவு திருத்தப்படவில்லை.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த பிறகு 1982ல் நீதியரசர் மகாராஜன் தலைமையில் கோயில் வழக்கங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவும் அனைத்து சாதியினரும் உரிய பயிற்சிக்குப் பிறகு அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்று கூறியது. ஆனால், அதற்கு முன்பாக அரசியல் சாசன சட்டப்பிரிவு 25 -2ல் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கூறியது.

இதற்குப் பிறகு பல ஆண்டுகள் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2002ல் ஆதித்யன் Vs கேரள அரசு என்கிற வழக்கில் தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதின்றம், "ஆகமங்கள், மதப் பழக்க வழக்கங்கள் போன்றவை 'எல்லோரும் சமம்' என்ற இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருந்தால், அவை சட்ட ரீதியாக செல்லாது என்று கூறி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க முடியும் என்று தீர்ப்பளித்தது.

இதற்குப் பிறகு, 2006ஆம் ஆண்டில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அரசாணையை வெளியிட்டது. இதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.

அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாட திட்டம், பயிற்சிக் காலம், கோயில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது.

இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோயில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.

இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அரசு விளம்பரம் வெளியிட்டு, நேர்காணல் செய்தபோது ஒவ்வொரு நாளும் நேர்காணலுக்கு 300 பேருக்கு மேல் வந்தனர். இவர்களில் இருந்து ஒவ்வொரு மையத்திற்கும் 40 பேர் வீதம் ஆறு மையங்களுக்குமாக சேர்த்து 240 பேர் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 33 பேர் பயிற்சிக் காலத்தில் விலகிவிட, 207 பேர் முழுமையாக பயிற்சியை முடித்தார்கள். இந்த 240 பேரில் எல்லா சாதியினரும் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களுக்கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அடுத்த 13 மாதங்களில் தமிழ் மந்திரங்கள், பூஜை முறைகள், கோவில்களின் பழக்க வழங்கங்கள் ஆகியவை தொடர்ந்து கற்பிக்கப்பட்டன.

"எங்களுக்கு நேர்காணல்களைச் செய்யும் குழுவில் அதிகாரிகளுடன் பல அர்ச்சகர்களும் இருந்தனர். ஆனால், பயிற்சி என்று வரும்போது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். தங்களது சங்கத்தினர், மற்ற சாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது என கூறி விட்டதால் தங்களால் பயிற்சியளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.

பிறகு பெங்களூரில் இருந்து ராமகிருஷ்ண ஜீவா என்ற பிராமணர் சமஸ்கிருதத்தில் பயிற்சியளிக்க வந்தார். அவர் பயிற்சியளிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே, அவர் மீது தாக்குதல் நடந்தது. பிறகு அவர் வெளியில் செல்லும்போதெல்லாம் மாணவர்களின் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது.

அதேபோல முறைப்படி பூஜை செய்து பயிற்சி செய்வதற்காக அறநிலையத் துறையிடம் கடவுளின் திருவுருவங்களைச் செய்து தரச் சொன்னோம். அவர்கள் செய்து கொண்டுவரும் வழியில், அதனைத் தடைசெய்தார்கள். பிறகு நாங்களே திருவுருவங்களை செய்து வைத்து பூஜை பயிற்சியைச் செய்தோம். இவ்வளவு தடைகளுக்கு மத்தியில்தான் பயிற்சியை முடித்தோம்" என்கிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன்.

ஆனால், இதற்குள் இது தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது. பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008ஆம் ஆண்டு தீட்சையை முடித்துவிட்ட நிலையில், இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பயிற்சி பெற்ற மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதற்கு இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த சமயத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்ததாகக் கூறுகிறார் ரங்கநாதன்.

2011ல் புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. "தமிழக கோயில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்" உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை என அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கருதினர். தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக தன்னுடைய நிலைபாடு எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் மதுரையில் அழகர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய ஐயப்பன் கோவிலில் மாரிமுத்து என்ற பயிற்சிபெற்ற மாணவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். ஆனால், இது தொடர்பான அறிவிப்பு எதையும் இந்து சமய அறநிலையத் துறை வெளியிடவில்லை.

இதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டில் மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் தியாகராஜன் என்ற பயிற்சி பெற்ற மாணவர் நியமிக்கப்பட்டார்.

2008ஆம் ஆண்டு தீட்சை பெற்ற பிறகு, அரசு அர்ச்சகர் பணிவாய்ப்பு எதையும் வழங்காத நிலையில், சிறிய தனியார் கோயில்களில் பணியாற்றுவது, வேறு வேலைகளைச் செய்வது என்றே இந்த பயிற்சி மாணவர்களின் வாழ்க்கையைக் கழிந்திருப்பதாகச் சொல்கிறார் ரங்கநாதன். இவர்களில் பெரும்பாலானவர்கள் 35 வயதை எட்டிவிட்டனர்.

இந்த நிலையில், 2021-இல் தி.மு.க. அரசு மீண்டும் பதவியேற்ற பிறகு அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சேகர் பாபு, "பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 100 நாட்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்" என்று சொல்லியிருந்தார்.

அதன்படி தி.மு.க. அரசு பதவியேற்ற நூறாவது நாளன்று அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணிநியமன  ஆணைகளை தமிழக முதல்வர் வழங்ககினார். அப்போதே இந்தப் பயிற்சியை முடித்த பலருக்கு வயது 35ஐத் தாண்டியிருப்பதால் இந்த முறை அவர்களால் விண்ணப்பிக்க இயலவில்லை. சட்டப்போராட்டங்களின் காரணமாக காலம் கடத்தப்பட்டுவிட்டதால் தங்களுக்கு வயது வரம்பில் விலக்குத் தர வேண்டும் என பயிற்சி முடித்திருந்த பலர் கோரியிருக்கின்றனர்.

தமிழகக் கோயில்களில் அர்ச்சர்கர்கள் மற்றும் பூசாரிகள் நியமிப்பது தொடர்பாக 2020 - ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி ஆகமப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற, பதினெட்டு வயது முதல் முப்பதைந்து வயதுக்கு உட்பட்ட நபரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிசைவ சிவாசார்யர்கள் சேவா சங்கம் மற்றும் சில தனிநபர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அர்ச்சகர் நியமனம் தொடர்பான இந்த வழக்கு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என 2021 அக்டோபர் மாதம் தெரிவித்தது. அதன்பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்தது.

அப்போது எதிர்தரப்பில், கோயில்களுக்குப் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலம் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்ட விரோதமானது என்று வாதிட்டனர். அறங்காவலர்கள் மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க முடியும் என்று வாதம் செய்தனர். மேலும் ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து பதில் அளித்த அரசுத் தரப்பு, உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து, அதன் பிறகே ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டதாக பதில் மனு தாக்கல் செய்தது. மேலும் சிவாச்சார்யர்கள் வழக்கில், ஆகம விதிகள் கற்றவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் சுட்டிக் காட்டி வாதிட்டது.

இந்நிலையில் இந்த வழக்குக்கான இறுதித் தீர்ப்பு இன்று வெளியானது. இதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் வழக்கில் அரசு வெளியிட்ட விதிகள் செல்லும் என்று உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேவேளை ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆகம விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம் ஆகம விதிப்படி அமைந்த கோவில்களில் ஆகமப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று கூறியிருப்பதால் பிராமணர்களே நியமிக்கப்பட வேண்டும், ஆகம விதிப்படி அமைந்த கோவில்களில் பிற சாதியினர் அர்ச்சகராக்கும் அரசின் முயற்சி தோல்வி என்று பரப்புரை செய்தாலும், சத்தியவேல் முருகனார் போன்ற சைவசித்தாந்த வாதிகள், ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லிவிட்ட பிறகு எதோ ஆகமவிதிதான் அதைத் தடுப்பதாக சிலர் திசை திருப்புகிறார்கள். ஆனால் ஆகமம் என்பதே தமிழ் மரபுக்குறியது, அதில் எங்கும் சாதி பற்றி குறிப்பிடவில்லை என்று தீர்க்கமாக வாதிடுகிறார்.

அரசிலும், மக்களிடமும் செல்வாக்கு பெற்ற மதக்கட்டமைப்பில் அனைவருக்குமான வாய்ப்பை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதையடுத்து தெய்வ வழிபாடு, பண்பாட்டில் பற்றுள்ள கம்பளத்தாரும் மற்ற அரசுப்பணிகளுக்கு ஆர்வம் காட்டுவதுபோல் மத நிறுவனத்திலும் உரிய பிரதிநிதித்துவம் பெறுவது அவசியம். எனவே வாய்ப்பும், விருப்பமும் உள்ளவர்கள் அர்ச்சகர் பயிற்சி மேற்கொள்ள முன்வரவேண்டும். அரசியல் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்கொண்டு வென்றெடுக்க தயாராக இருப்போம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved