🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., B.Arch., உள்ளிட்ட  படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை (25.08.2022) தொடங்குவதாக இருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மருத்துவப்படிப்பிற்கான "நீட் தேர்வு" முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளாதால், மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கவும், பொறியியல் சேர்க்கைக்குப்பின் ஏற்படும் காலியிடங்களை தவிர்க்கும் வகையிலும் கலந்தாய்வை தள்ளி வைப்பதாக  அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே பொறியியல் கலந்தாய்வு நீட் தேர்வு வெளிவந்து இரண்டு தினங்களுக்குப்பின் தொடங்கும் என்று தெரிகிறது.

கடந்த 16ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். இதில் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் 133 பேர் பெற்றிருந்தனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு 10 ஆயிரம் பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 22,587 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் 9,981 மாணவியர் மாதம் ரூ.1,000 பெற தகுதியானவர்கள். மேலும் விளையாட்டுப் பிரிவின் கீழ் 1,258 பேர் தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 970 பேர், மாற்றுத்திறனாளிகள் 203 பேர் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர். மொத்தமுள்ள ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்களுக்கு, ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 157 பேர் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

கல்லூரிகளின் செயல் திறன், அதாவது தேர்ச்சி விகிதப் பட்டியலை (ஏப்ரல் – மே 2021 மற்றும் நவம்பர்- டிசம்பர் 2021) அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதைக் கொண்டு கல்லூரிகளின் தரத்தை அறிந்துகொள்ளலாம்.  இந்த ஆண்டு 1,58,157 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. 1.48 லட்சம் பொறியியல் இடங்களுக்கு 1.58 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன. இதனால் விண்ணப்பிப்பவரில் பெரும்பாலும் அனைவருக்குமே இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

முதலில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு  இன்றுவரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை (25-ந்தேதி) தொடங்கி 4 சுற்றுகளாக நடக்க இருந்தது. சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கும் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதை சிறப்பு பிரிவில் நடத்தாமல், பொதுப்பிரிவு கலந்தாய்வு நடத்தும் அதே தேதியில் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது. அரசு பள்ளி மாணவ-மாணவிகள் விருப்பப்பட்ட இடங்களில் சேரவேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு கூடுதல் சலுகையாக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

அதாவது, பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு கட்-ஆப் மதிப்பெண்படி அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பது போலவே, அதே கட்-ஆப் மதிப்பெண்ணுடன் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்களுக்கும் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 7.5%  உள் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 7.5% உள்ஒதுக்கீட்டிலும் இடத்தை தேர்வு செய்யலாம், அதேபோல் பொதுப்பிரிவிலும் விருப்பமான இடத்தை தேர்வு செய்ய முடியும். 2 இடங்களை தேர்வு செய்யும் அந்த மாணவர் இறுதியில் எந்த இடத்தில் சேர விருப்பமோ அதில் சேர்ந்து கொள்ளலாம்.

ஆனால் 7.5% உள்ஒதுக்கீட்டில் அவர் பெறும் இடத்துக்கு மட்டும்தான் கல்வி, விடுதி, பஸ் உள்பட அனைத்து கட்டணங்களையும் அரசு செலுத்தும். பொதுப்பிரிவில் தேர்வு செய்த இடத்தில் சேர்ந்தால், அதற்கு அரசு கட்டணம் செலுத்தாது. அனைத்து பிரிவினருக்குமான கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுகிறது. கடந்த ஆண்டு வரை கலந்தாய்வு தொடக்கத்தில் முன்பண கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. நேரடியாக மாணவர் விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர், தேர்வு செய்ததில் தற்காலிக ஒதுக்கீடு மாணவர்களுக்கு அளிக்கப்படும். அதில் மாணவர் ஒரு இடத்தை உறுதிசெய்யவேண்டும். அதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். இந்த ஆண்டு ஒதுக்கீட்டு ஆணையிலும் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தேர்வு செய்த இடத்தில் நேரடியாக சேர விருப்பம் தெரிவிக்கும் மாணவர் சம்பந்தப்பட்ட கல்லூரியில் ஒதுக்கீட்டு ஆணை பெற்ற 7 நாட்களுக்குள் பணத்தை செலுத்தி சேரவேண்டும்.

மற்றொன்று தனக்கு மற்றொரு வாய்ப்பில் சிறந்த இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் மாணவர், மாணவர் சேர்க்கை சேவை மையத்தில் ஒதுக்கீட்டு ஆணை பெற்ற கல்லூரியின் பெயரில் கட்டணத்தை செலுத்த வேண்டும். அந்த மாணவருக்கு துணை கலந்தாய்வில் விருப்பப்பட்ட இடம் கிடைக்கும் பட்சத்தில்தான் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்று, விருப்பப்பட்ட கல்லூரியில் கட்டணத்தை செலுத்தி சேர்ந்து கொள்ளலாம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved