🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஓய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

இந்திய உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். ஆந்திரப் பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பொன்னாவரம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் 27 ஆகஸ்டு 1957-அன்று பிறந்த நூத்தலபதி வெங்கட ரமணா (Nuthalapati Venkata Ramana) இளநிலை அறிவியல் மற்றும் இளநிலை சட்டப் படிப்பு முடித்தவர், தொடக்கத்தில் பத்திரிகையாளராக பணியாற்றினார். 10 பிப்ரவரி 1983-ல் வழக்கறிஞராக பதிவு செய்து வழக்கறிஞர் பணியை தொடங்கியவர்.

மேலும் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், இந்திய உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர், பல அரசு முகமைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் பட்டியலில் இடம் பெற்றவர். சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச முதல்வராக இருந்தபோது அம்மாநிலத்தின் அரசக் கூடுதல் தலைமை வழக்கறிஞராக இருந்தார். 27 சூன் 2000 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அதே நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாக 2013-ஆம் ஆண்டில் ஓரிரு மாதங்கள் பணியாற்றினார். பிறகு தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றார். 2014-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற ரமணா 20 பிப்ரவரி 2017 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் 48வது இந்தியத் தலைமை நீதிபதியாக ரமணா அவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக ரமணா பதவி வகித்தபொழுது துரதிஷ்டவசமாக சொந்த மாநிலத்திலிருந்தே எதிர்ப்பை சந்திக்க வேண்டியசூழல் ஏற்பட்டது. ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, என்.வி.ரமணாவுக்கு எதிராக அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.அக்கடிதத்தில் என். வி. இரமணா ஆந்திரப் பிரதேச மாநில நிர்வாக விவகாரங்களில் தலையிடுவதாகவும், அவருக்கும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையிலான நெருக்கம் இருப்பதாகவும், ஆந்திர உயர்நீதிமன்றத்தின் அமர்வுகளில், நீதிபதிகளின் ரோஸ்டர்களில் அவர் தலையிடுவதாகவும், தெலுங்கு தேசம் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில வழக்குகள் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

16 மாதங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா மீது கடும் விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. சமீபகாலமாகவே உச்சநீதிமன்றத்தை ஆளும்கட்சி தன் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாக எழும் விமர்சனங்கள் முன் எப்போதும் இருந்திராத ஒன்று. இருந்தாலும் முந்தைய தலைமைநீதிபதிகள் போல் சுய லாபத்திற்காக செயல்பட்டதாகவோ, தனிப்பட்ட நடத்தை சம்மந்தமாகவோ எந்த விதமான குற்றச்சாட்டிற்கும் ஆளாகதவர் ரமணா என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

நீதியரசர் ரமணா குறித்தான விமர்சனப்பார்வையை முன்வைப்பவர்கள் வைக்கும் பட்டியல் நீளமனது,  அதன்படி எந்த தலைமை நீதிபதிக்கும் இல்லாத பெருமை ரமணாவுக்கு உண்டு. தலைமை நீதிபதியாக இருந்த இந்த 16 மாதத்தில் எந்த ஒரு முக்கிய வழக்கையும் விசாரித்து அவர் தீர்ப்பு வழங்கவே இல்லை. 

1.காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து 16/08/2019-ல் வழக்கு தொடரப்பட்டது. ஏறத்தாழ இரண்டரை வருடமாக அந்த வழக்கை விசாரிக்க இன்னும் அரசியல் சாசன அமர்வு கூட உருவாக்கப்படவில்லை. 

2. தேர்தல் பத்திரங்களுக்கு ( Electoral Bonds) எதிராக தொடரப்பட்ட வழக்கு. இதை எதிர்த்து 5/04/2019-ல் உச்சநீதிமன்றத்தில் முதல் விசாரணை நடந்தது. இந்த வழக்கின் மீது கடந்த 3 ஆண்டுகளில் 8 முறை மட்டுமே விசாரணை நடந்துள்ளது. இந்த வழக்கு 1,816 நாட்கள் நிலுவையில் உள்ளது. 

3. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் - தனி மனிதனின் சுதந்திரத்தை பறிக்கும் இந்த சட்டத்தால் யார் வேண்டுமானாலும் கைது செயய்யப்படலாம். பத்திரிகையாளர் சித்திக் காப்பான் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 21 மாதங்களாக சிறையில் இருக்கிறார். 9/9/2019-ல்  உச்சநீதிமன்றத்தில் UAPA சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 35 மாதங்களாக இவ்வழக்கில் ஒரு முறை மட்டுமே விசாரணை நடந்திருக்கிறது. இச்சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்னும் பிணை கிடைக்கவில்லை. அதில் உமர் கலித்தும் ஒருவர். 

4.10% இட ஒதுக்கீடு வழக்கு- பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி இதை எதிர்த்து 12/03/2019-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1,323 நாட்களாக நிலுவையில் இருக்கும் இவ்வழக்கில் இதுவரை 6 முறை மட்டுமே விசாரணை நடந்துள்ளது. EWS ஒதுக்கீடு மூலம் முற்பட்ட வகுப்பினருக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்த போட்டித்தேர்வுகளில் OBC வகுப்பினரை விட கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டு மாபெரும் சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இவ் வழக்கை விசாரிக்க இன்னும் அரசியல்சாசன அமர்வு உருவாக்கப்படவில்லை.

5. குடியுரிமை திருத்தச் சட்டம்-18/12/2019-ல் CAA சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 987 நாட்கள் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில் இதுவரை 2 முறை மட்டுமே விசாரணை நடந்துள்ளது. 31 மாதங்களாக இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவே இல்லை. 

இது தவிர பல முக்கிய வழக்குகள் பல மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.16 மாதங்கள் தலைமை நீதிபதியாக இருந்த ரமணா அமர்வு முன் எவ்வளவு முக்கியமான வழக்கை விசாரிக்க சொன்னாலும் அவர் Will see, We will take it up, I will list soon என்று தான் இத்தனை மாதங்களாக கூறிவந்தார். ரமணா அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து கூட தீர்ப்பு வழங்கியிருக்கலாம். ஆனால் அவர் அதை கூட செய்யவில்லை. ஒரு முக்கிய வழக்கில் கூட தீர்ப்பு வழங்காமல் 16 மாதங்கள் காலத்தை கடத்தியிருக்கிறார். உச்சநீதிமன்றம் தன் வரலாற்றில் என்.வி.ரமணாவை போல் ஒரு தலைமை நீதிபதியை பெற்றதில்லை. இவ்வாறு நொறுங்கிய குடியரசு என்ற தன்னுடைய புத்தகத்தில் " இந்தியாவின் நீதிமன்றங்களில் ஏழைகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று அருந்ததி ராய் எழுதியிருப்பார்.

இந்தவார தொடக்கத்தில் இலவசங்கள் குறித்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக ரமணா அவர்கள் தெரிவித்த கருத்து அகில இந்திய அளவில் பரபரப்பை கிளப்பியதும், அறிவுசார் தளத்தில் ரமணா அவர்கள் விமர்சனத்திற்கு ஆளானதும் நடந்தது.

தனது பதவி காலத்தின் இறுதி நாளன்று,பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம், பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை விடுவித்தது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டம் செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிரான மனு, பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடி ஆகிய 4 முக்கிய வழக்குகளை தலைமை நீதிபதிஎன்.வி.ரமணா நேற்று விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் இலவசங்கள் குறித்து இன்று ரமணா தீர்ப்பு வழங்கவுள்ளதாக தெரிகிறது.

தெலுங்குமொழிக்குடும்பத்தில் பிறந்த என்.வி.ரமணா, ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை தனது சட்ட அறிவையும், நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் எளிய மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் பணியாற்றி மனநிம்மதியோடு அமைதியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்திட வாழ்த்துவோம்.



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved