🔴 LIVE | முப்பெரும் விழா 2023


TRB தேர்வு முடிவுகள் வெளியீடு!- மோசடிக்கு தயாராகிறதா தேர்வாணையம்!

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (Teachers Recruitment Board-TRB) தமிழகத்திலுள்ள பல்வேறு பாடப்பிரிவுகளில் 3800-க்கும் அதிகமான காலியாக உள்ள இடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் கலந்தாய்வுக்கு தேர்வானவர்களின் பெயர் மற்றும் மதிப்பெண் விபரம் அடங்கிய பட்டியலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது.



இப்பட்டியலில் பெரிய அளவில் மோசடி நடைபெற்றிருப்பதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு முறைப்படி வெளியாகி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதவிர ஒரு பதவிக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இல்லாமல் ஒருபதவிக்கு மூவர் வீதம் தேர்வு செய்யப்பட்டிருப்பது பல்வேறு முறைகேடுகளுக்கு அச்சாரமாக இருக்கும் என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது சமூகநீதி கூட்டமைப்பு. ஒருவருக்கு மூவர் வீதம் அழைக்கப்படுவதன் மூலம் தேர்வானவர்களை சான்றிதழ் சரிபார்ப்பின்பொழுது சான்றிதழ்களில் ஏதாவது குறை அல்லது காரணம் சொல்லி கழித்துவிட்டு, தாங்கள் விரும்புவர்களை அந்த இடத்தில் நியமிப்பதற்கான முயற்சியில் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தையும் தெரிவிக்கின்றனர் சமூகநீதி கூட்டமைப்பினர். மேலும் நேற்று வெளியான பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பெயர்கள் இடம்பெறாமல், குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதவிர, எம்பிசி பிரிவில் வன்னியர் சமுதாய மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண்கள் குறைவாகவும், டிஎன்சி மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண்கள் கூடுதலாகவும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இதுகுறித்து பேசிய சமூகநீதி கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் போல் மாநில தேர்வு வாரியமும் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சாதியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இந்த மோசடி காலம் காலமாக இருந்து வருவதாகவும், தற்பொழுது உருவாகியுள்ள சமூகநீதி கூட்டமைப்பின் மூலமே அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு மோசடிகள் வெளிச்சத்திற்கு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், டிஆர்பி இணையத்தில் தேர்வு முடிவுகள் குறித்து ஆட்சேபணை இருந்தால் மூன்று நாட்களில் குறிப்பிடலாம் என்று கூறியிருப்பது ஏமாற்றுவேலை, மோசடியானது என்றும், பல்வேறு இடங்களில் உள்ள தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்து ஆராய்ந்து மூன்று நாட்களில் எப்படி ஆட்சேபனை செய்ய முடியும் என்றும் தேர்வாணையத்தின் இந்த அவசரமே மோசடிகளை மூடி மறைப்பதற்காக மட்டும் தான் என்றும் தெரிவித்தார்.




தமிழக முதல்வருக்கோ அல்லது துறை அமைச்சருக்கோ தெரியாமல், அத்துறையில் காலம் காலமாக பணியாற்றிக்கொண்டு, தேர்வானையத்தையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரிகள் துணையோடு இந்த மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், இதை எதிர்த்து விரைவில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு சட்டம் 8/2021 மாநில உயர்நீதிமன்றத்தாலும், பிறகு உச்சநீதிமன்றத்தாலும்  சட்ட ரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்தும் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டின்படி அறிவிப்பு வெளியிட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டியும். இனிமேல் எந்தத் துறையிலும் இதுபோல தவறு நடக்காத வண்ணம் மாநில அரசு நடந்து கொள்ள வேண்டும் எனவும் சமூகநீதி கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.  தேர்வாணைய முடிவால் பாதிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட/ சீர்மரபின சமுதாய மாணவ-மாணவியர் பதட்டமடைய வேண்டாம் என்றும், உடனடிய சமூகநீதி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அந்தந்த சமுதாய அமைப்புகளை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

ஏற்கனவே சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்திற்கு தகவல் கேட்பு உரிமைச்சட்டப்படி அனுப்பிய கடிதத்திற்கு பதிலளித்துள்ள வாரியம், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு ஏதும் வழங்கப்படவில்லை என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20% இட ஒதுக்கீட்டின்படியே செயல்படும் என்றும் பதில் வழங்கியிருந்தது. ஆனால் இன்று மற்றொரு துறையில் (ஆசிரியர் தேர்வு வாரியம்TRB) வன்னியர் உள் இட ஒதுக்கீட்டின்படி அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மிகவும் கேலிக்கூத்தாகவும் மனவேதனை தருவதாக இருப்பதாகவும், வரும் காலங்களில் தமிழக அரசு இதுபோன்ற தவறுகளள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved