🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தோல்வி!

இங்கிலாந்து பிரதமராக இருந்து வரும் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். இங்கிலாந்து சட்டப்படி ஆளும்கட்சியின் தலைவர் தான் பிரதமர் பதவிக்கு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் தேர்வாகும்வரை பிரதமர் பதவியில் நீடிப்பதாக தெரிவித்திருந்தார் போரிஸ் ஜான்சன்.

முன்னதாக, போரிஸ் ஜான்சன் தலைமியயிலான அமைச்சரவைக்கு 2024 வரை ஆயுட்காலம் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே போரிஸ் ஜான்சன் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். கொரோனா பெருந்தொற்று மிகவும் தீவிரமாக இருந்தபோது, பிரதமர் இல்லம் மற்றும் அதற்கு அருகே உள்ள பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட இடத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் பிரதமரின் பிறந்த நாள் விழாவும் அடங்கும். அந்த செயல்பாட்டுக்காக நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கே, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக லண்டன் போலீஸ் அபராதம் விதித்தது. இதன் மூலம் பிரிட்டனில் அரசாங்க விதியை மீறிய குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரதமரானார் போரிஸ் ஜான்சன்.

இது தவிர, சொந்த கட்சியைச் சேர்ந்த சில எம்.பி.க்கள், வரி உயர்வு நடவடிக்கை மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் செலவினத்தை கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையில் தெளிவில்லை என்று விமர்சித்து வந்தனர். இத்துடன் கடந்த ஜூன் மாதம் டிவெர்டன், ஹோனிட்டன் மற்றும் வேக்ஃபீல்டில் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி தோல்வி அடைந்ததும் பிரதமர் போரிஸுக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே மேலதிக அழுத்தத்தை அளித்தது. இதன் உச்சமாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஆலிவர் டெளடென் விலகவும் நேர்ந்தது.

பிரச்சினைகளோடு பிரச்சினையாக, தன் கட்சியின் எம்.பி கிறிஸ் பஞ்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்ததை அறிந்திருந்தும் அவரை 'துணை தலைமைக் கொறடா' பதவிக்கு நியமனம் செய்திருந்தார் போரிஸ் ஜான்சன். பின்னர் அவரே "இது தான் செய்த மிகப்பெரிய தவறு," என்று ஒப்புக் கொண்டார்.

இருந்தபோதும், போரிஸ் ஜான்சன் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தி அதில் போரிஸ் 59 சதவீத வாக்குகளுடன் வெற்றியும் பெற்று விட்டார். அதனால் கட்சி விதிகளின்படி கன்சர்வேட்டிவ் தலைமை மாற்றத்துக்கான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தப்படுவதில் இருந்து அடுத்த (2023) ஆண்டு ஜூன் மாதம் வரை ஜான்சனுக்கு வாய்ப்பிருந்த நிலையில், சில மாதங்களிலேயே, தமது சொந்த அமைச்சரவை சகாக்களின் ராஜினாமாவால் புதிய நெருக்கடியை எதிர் கொண்டதால் பதவி விலகினார்.

இதற்குப் பிறகு, புதிய பிரதமருக்கான முதல் சுற்றில் எட்டு வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். கடைசி சுற்றுக்கு முன், கட்சி எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும், கட்சி உறுப்பினர்களுக்கு அந்த உரிமை இல்லை. இதில் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து, ஜான்சன் செயல்பாடுகள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி பதவி விலகிய எம்.பி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகியோரை கடைசி சுற்றுக்குத் தேர்வு செய்தனர்.

இதில் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் பிரபல மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி அவர்களின் மருமகன் என்பதாலும் இந்தியாவில் பிரிட்டன் பிரதமர் தேர்தல் பரபரப்பிற்கு உள்ளானது. 42 வயதான சுனக், தெற்கு இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் பிறந்தார். இவரது பெற்றோர் யாஷ்வீர், உஷா சுனக் இருவரும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளியினர்.

தொடக்கத்தில் ரிஷி சுனக்கிற்கான ஆதரவு இருப்பதாக தெரிந்தாலும், அடுத்தடுத்த சுற்றுகளில் பல்வீனமாகிக்கொண்டே வந்தது. இதற்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுபவை போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இடம்பெற்று இக்கட்டான சுழலில் பதவி விலகி அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது இறுதிவரை கன்சர்வேடிவ் கட்சியிலுள்ள ஜான்சன் ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதும்,  அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி செலுத்திய வருமான வரியும் முக்கிய காரணம். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்திக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 0.93% பங்குகள் (794 மில்லியன் டாலர் மதிப்பு) உள்ளது. இது பிரிட்டன் இளவரசியின் சொத்தை விட அதிகம் எனச் செய்திகள் பரவியது. மேலும். இன்ஃபோசிஸ் டிவிடென்ட் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு அவர் வரி செலுத்தவில்லை. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அவர் பல மில்லியன் டாலர் வரி செலுத்துவதைத் தவிர்த்துள்ளதாக வெளியான தகவலே அவருக்குப் பெரிய பின்னடைவைக் கொடுக்க காரணமாக சொல்லப்படுகிறது.

பிரச்சாரம் இறுதிகட்டத்தை நெருங்க நெருங்க கன்சர்வேடிவ் கட்சியிலுள்ள இந்துக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக கிருஷ்ண ஜெயந்தி தினத்தில்   லண்டனில்  பூசாரிகள் படைசூழ பசுவுக்கு கோபூஜை கூடச் செய்தார் ரிஷி சுனக். புனித நீரைப் பசு மீது தெளித்து அவரே பூஜைகளைச் செய்தார். இருப்பினும், இது வெற்றிக்குத் தேவையான வாக்குகளைப் பெற்றுத்தர உதவவில்லை.

இறுதியில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, அந்நாட்டின் புதிய பிரதமராக 47 வயதான லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லிஸ் டிரஸ்க்கு இந்தத் தேர்தலில் மொத்தம் 81326 வாக்குகளும், ரிஷி சுனக்கிற்கு ஆதரவாக 60399 வாக்குகளும் கிடைத்தன. இதனால் ஏறக்குறைய 21000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார் ரிஷி.

1975 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் பிறந்த லிஸ் டிரஸ் முழுப்பெயர் மேரி எலிசபெத் ட்ரஸ். தந்தை கணிதப் பேராசிரியர், தாயார் செவிலியர் (நர்ஸ்). இவரது கணவர்  ஹக் ஓ லியரி ஒரு அக்கவுண்டன்ட். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved