🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன முறைகேடு! உயர்நீதிமன்றம் சவுக்கடி!

2020-2021 ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுைகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

17 பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 02.09.2022 முதல் 04.09.2022 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று நடந்து முடிந்துள்ளது.


இதற்கிடையே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முடிவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், முறையாக ரேங்க் பட்டியல் வெளியிடவில்லை என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வன்னியர் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர் அல்லாத சமுதாய மாணவ - மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவில்லை என்ற குரலும் எழுந்தது. ஆனால் இதற்கு எதற்கும் செவிசாய்க்கவோ, பதிலளிக்கவோ விரும்பாத ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்ந்து தான் விரும்பிய போக்கில் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த வாரம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஊராளிக்கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் குப்புசாமி என்பவர் பெயரில் தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதையும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வன்னியர் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறித்தும் முறையிட்டார். 

விசாரணையின் முடிவில், 2020-21-க்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிட நியமனங்கள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டதென்றும், இம்மனு மீது ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதன்மூலம் 2020-21 ஆண்டிற்கான ஆசிரியர்  பணியிடங்களை மோசடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்ட முயற்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆண்டாண்டுகாலமாக தன்னிச்சையாக, வெளிப்படைத்தன்மையின்றி பணியிடங்களை நிரப்பி வந்த TRB-க்கு சமூகநீதி கூட்டமைப்பு மூக்கணாங்கயிறு போட்டுள்ளது, வருங்காலங்களில் அனைத்து அரசு பணியிடங்களும் முறையாக நடைபெற சமூகநீதி கூட்டமைப்பு சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதனால் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற இளைஞர்களின் கனவை யாரும் மோசடியாக தட்டிபறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved