🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மயக்கமா....கலக்கமா... மனதிலே குழப்பமா...

முன்னேறிய (உயர்சாதி பிரிவினர்) வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி யு.யு.லலித், நீதியரசர்கள் தினேஷ் மகேஷ்வரி, எஸ்.ரவீந்திர பட், பேலா எம்.திரிவேதி, ஜேபி.பர்டிவாலா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து மூன்றுநாள் நடைபெறவுள்ள விசாரணையில் புகழ்பெற்ற பேராசிரியர் மோகன்கோபால் மனுதாரர் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார்.

பேரா.மோகன்கோபால் தனது வாதத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு வழங்கும் இடஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டின் தாத்பரியத்தையே மாற்றி, பொருளாதார ரீதியான உதவித்திட்டம்போல் செயல்படுத்த முனைகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்கும் இடஒதுக்கீடு கல்வி மற்றும் சமூக ரீதியாக பின் தங்கியவர்களுக்கு வழங்காமல் முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் வழங்குவது அரசிலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று வாதிட்டார். மேலும், 103-வது சட்டதிருத்தம் அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல், அரசியலமைப்புச் சட்டத்தையே செயலிலக்கச் செய்யும் முயற்சி, சமூகத்தில் சமச்சீரற்ற தன்மையை ஆதரிப்பதன் மூலம் அரசியலைப்புச் சட்டத்தின் முதுகில் குத்துவதுபோல் உள்ளது என்றார். மேலும், பல வழக்குகளையும், புள்ளி விபரங்களையும் மேற்கோள் காட்டி 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு எதிராக கடுமையான வாதங்களை முன்வைத்தார்.

தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராக உள்ள நிலையில், இதுவரை மத்திய அரசு வழக்கறிஞர் 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு ஆதரவாக வைத்துள்ள நான்கு முக்கிய வாதங்களை முறியடிக்கும் வகையில் வாதங்கள் முன்வைக்கப்படவில்லை என்று மூத்த வழக்கறிஞர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இச்சட்டம் அரசியலைமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்பதற்கான அனைத்து சான்றுகளும், தரவுகளும் இந்திராசஹானி வழக்கின் தீர்ப்பிலும், சிங்கோ ஆணைய அறிக்கையிலும் இருப்பதாக சுட்டிக்காட்டும் மூத்த வழக்கறிஞர்கள், மனுதாரர் தரப்பும், தமிழக அரசும் மேம்போக்கான வாதங்களை முன்வைக்காமல், மத்திய அரசு வழக்கறிஞரின் வாதத்திற்கு உரிய பதில்களை நேரடியாக வைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஆதரித்து தன் முழு பலத்தையும் பயன்படுத்தி, இந்தியாவில் தலைசிறந்த வழக்கறிஞர்களை எல்லாம் பலகோடி செலவில் களமிறக்கி வாதிட்ட தமிழக அரசு, EWS வழக்கில் மட்டும் போதிய அக்கறை காட்டாமல், ஒப்புக்குச்சப்பாணியாக நடத்துகிறதோ என்ற அச்சம் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் எழுந்துள்ளது. சமூகநீதியை நிலைநாட்ட தேசிய அளவில் அணிதிரட்ட நினைக்கும் தமிழக முதல்வர் இந்த வழக்கில் போதிய கவனம் செலுத்தி, தலைசிறந்த மூத்த வழக்கறிஞர் குழுவை நியமித்து, தன் தரப்பு வாதங்களை முன்வைத்து நாட்டில் வாழும் 65 விழுக்காடு இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று சமூகநீதி கூட்டமைப்பு வேண்டுகோள் வைத்துள்ளது.

தமிழகத்தில் 5 விழுக்காடு உள்ள உயர்சாதியினரில் 20 விழுக்காடு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்றால் 1 சதவீதம் பேரே உள்ளனர். ஒரு சதவீத மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பதும், மிசோராம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் உயர்சாதியினரே இல்லாதநிலையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது மோசடியானது. ஏற்கனவே 90 விழுக்காடு இடங்களை ஆபகரித்துக்கொண்டுள்ளவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடாக மீண்டும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது மிகப்பெரிய அநீதி. இந்த அநீதியை சட்டப்பூர்வமாக்க முனைந்துள்ள மத்திய அரசின் முயற்சியை தமிழக அரசு ஏனோ தானோ என்று அணுகாமல், முழுமூச்சாக எதிர்க்க வேண்டும் என்று சமூகநீதி கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved