🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாதிகள் பேசும் சமூகநீதி! வழிகாட்டும் கம்பளத்தார்!

இந்திய இடஒதுக்கீடு வரலாற்றில் முஸ்லீம், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு தலைவர்கள் முயற்சிகள் மேற்கொண்டனரே தவிர மக்கள் கிளர்த்தெழுந்து போராடவில்லை. இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் தொடக்கத்தில் இயக்கங்களை உருவாக்கி  போராடினார்களே தவிர, தனிப்பட்ட சாதிகளாக போராடவில்லை. தமிழகத்தில் வன்னியர் சமூகம் தனி இடஒதுக்கீடு கேட்டு போராடி ஓரளவு வெற்றி பெற்றது. இடஒதுக்கீட்டை மையமாக வைத்து செயல்பட்ட கட்சிகள் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றிய பிறகு இடஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்படும் சட்டப்பிரச்சினை, வழக்குகள் உள்ளிட்ட எந்த தாவாக்கள் என்றாலும் கட்சிகளே பார்த்துக்கொண்டன. ஆங்காங்கே தனி இடஒதுக்கீடு கேட்கும் சாதிகள் கூட அவ்வப்பொழுது ஒரு மாநாட்டை நடத்தி அரசுக்கு கோரிக்கையாக வைப்பது ஒரு சடங்குபோல் ஆகிவிட்டது. 

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பிறகு,  சமூகநீதியை மையமாக வைத்துச் செயல்படும் கட்சிகள் வாக்குவங்கி அரசியலுக்காக அடிக்கும் பல்டிகளை கண்டு, இனியும் இடஒதுக்கீடு விவகாரத்தில் கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த பிற்படுத்தப்பட்ட சாதிகள்,  ஒன்றிணைந்து உருவாக்கியது தான் சமூகநீதி கூட்டமைப்பு.

தமிழகத்தில் இக்கூட்டமைப்பு உருவாகி ஒன்றரை ஆண்டுகாலத்தில் இடஒதுக்கீடு விசயத்தில் பல்வேறு கட்ட களப்போராட்டங்களையும், சட்டபோராட்டங்களையும் சந்தித்துள்ளது. அதில் வலிமையான தமிழக அரசின் வன்னியர் 10.5 இடஒதுக்கீடு சட்டம் 8/2021-க்கு ஆதரவாக, அரசு தரப்பில் ஆஜரான இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களின் வாதங்களை உயர்நீதிமன்றத்திலும்,  உச்சநீதிமன்றத்திலும் எதிர்கொண்டு வலுவான வாதங்களை முன்வைத்து வெற்றிபெற்றுள்ளது. 

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில், மத்திய அரசு உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளை தெருவில் இழுத்து விட்டுள்ளது. 

இச்சட்டத்தை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்குகளை பல ஆண்டுகள் கிடப்பில் போட்டு, உயர்சாதியினரை மத்திய அரசு பணியிடங்களிலும், கல்வி நிலையங்களிலும் ஆக்கிரமித்துக்கொள்ள மத்திய அரசுக்கு துணைபோயுள்ளது உச்சநீதிமன்றம். 

இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த வழக்கை தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது நீதிமன்றம். வெறும் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கப்போகும் யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை நேற்று முன்தினத்திலிருந்து விசாரித்து வருகிறது.

ஏற்கனவே பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நிராகரித்துள்ள நிலையில், எப்படியாவது இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் கண்ணில் மண்ணைத்தூவி நீதிமன்ற உதவியோடு நிறைவேற்றிக்கொள்ளத் துடிக்கிறது மத்திய அரசு. 

இதனை எதிர்த்து களமிறங்கியுள்ள சமூகநீதி கூட்டமைப்பு, இச்சட்டத்தை எதிர்த்து மாநில அரசு சார்பில் வாதாட சிறந்த சட்டவல்லுனர்குழுவை நியமிக்க வலியுறுத்தி வருகிறது. 

இதனொரு பகுதியாக உயர்சாதி ஏழைகளுக்கு  10  சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பது அடிப்படை சமத்துவ உரிமைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது  என்றும் இதனை செயல்படுத்தவேண்டும் துடிக்கும் மத்திய அரசைக்கண்டித்து விடுதலைக்களம் கட்சியின் சார்பாக நேற்று (14.09.2022) மாலை நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் மத்திய அரசு எந்தவித புள்ளி விவரமும் இல்லாமல், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தாமல், 4 சதவீதம் மட்டுமேயுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு  10  சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பது அடிப்படை சமத்துவ உரிமைகளுக்கு எதிரானது  என கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் பழனிசாமி  முன்னிலை வகித்தார். நாமக்கல் நகர தலைவர் முரளி, நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், தெற்கு மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், தெற்கு மாவட்ட செயலாளர் நடராஜன், செந்தில், மாவட்ட பொருளாளர் தங்கவேல், வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன், மாநில பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன் , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இடஒதுக்கீடு விவகாரம் அரசியல் கட்சிகளிடமிருந்து சமுதாயங்களிடம் சென்றிருப்பது, மக்களிடையே இடஒதுக்கீடு குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, வருங்காலங்களில் இதில் கட்சிகள் மோசடி செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பற்றிய நெருப்பு மெல்ல வடக்கே நகர்ந்தால் இந்தியாவில் மாபெரும் சமூகமாற்றத்தை உருவாக்கும். சமூகநீதி கூட்டமைப்பு மெல்ல மெல்ல அதை சாதிக்கும் என்பது உறுதி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved