🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தெலுங்கானா மாநில அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் சந்திப்பு!

சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தெலுங்கானா மாநிலத்தின் கால்நடை மற்றும் மீனவர்நலத்துறை அமைச்சர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்துப்பேசினார். 

இது குறித்து சமுதாய நலச்சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பூர்வகுடி சமூகங்களின் கொடிவழி தொடர்புகள் குறித்த வரலாற்று ஆய்வாளர்களின் கூட்டம் தெலுங்கான மாநில அமைப்பு ஒன்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொல்லியல்/கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களும் கலந்துகொண்டனர். இதில் கம்பளத்தார் சமுதாயம் குறித்தான பல தகவல்கள் இடம்பொறுவதால், அது குறித்து விவாதிக்கவும், விளக்கமளிக்கவும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தலைவருக்கு அழைப்புவிடப்பட்டிருந்தது. இதனையேற்று தலைவர் இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். 


இக்கூட்டத்தில் பரிமாறிக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய பிரிவுகளுக்கும் தமிழகத்தில் வாழும் கம்பளத்தார்களுக்குமான பண்பாட்டு ரீதியான ஒற்றுமைகளை மேலும் சில கள ஆய்வுகள், கிடைக்கின்ற வரலாற்று ஆவணங்கள் மற்றும் செய்திகள் மூலம் உறுதி செய்வதற்கான ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. 


இக்கூட்டத்தின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தொடர்புகள் மூலம் அம்மாநில அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமுதாய தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய அளவில் ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட) சமூகங்களை ஒன்றிணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் நாடுதழுவிய அளவிலும், மாநில அளவிலுமுள்ள பல்வேறு சமூகங்களை அகில இந்திய ஓபிசி கமிட்டியில் பங்கேற்கச் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

 

இதன் ஒருபகுதியாக தெலுங்கான மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் தலசானி சீனிவாசனை சந்த்தித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் உயர்சாதி ஏழைகளுக்கான (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கிற்கு ஆதரவு தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.


இதனைத்தொடர்ந்து பல்வேறு சமுதாயத் தலைவர்களுடனான சந்திப்பின்போது, இடஒதுக்கீடு விவகாரத்தை அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாப வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்துவதை எதிர்த்து சமூகங்களாக ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். உதாரணமாக, தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், பெருஞ்சாதியான வன்னியர் சமூகத்திற்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தங்கள் அரசியல் லாப நோக்கோடு வாக்கு வங்கி அரசியலுக்காக சமூகநீதி கோட்பாட்டை  சிதறடித்த இருபிரதான கட்சிகளை எதிர்த்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகங்கள் இணைந்த சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிபெற்றது குறித்து விரிவாக விளக்கமளித்தார்.


அதேபோல் தற்போது மத்திய அரசு ஏற்கனவே 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு பொருளாதார இடஒதுக்கீட்டுற்கு எதிராக வழங்கிய தீர்ப்பை பொருட்படுத்தாமல், 103-வது சட்டதிருத்தத்தின் மூலம் மோசடியாகவும், அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும் உயர்சாதி பிரிவினரிலுள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மோடி அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விபரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இச்சட்டத்திற்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இணைந்து போராட வருமாறு தலைவர் இராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.  


அகில இந்திய ஓபிசி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனுமந்தராவ் அவர்களை சந்தித்து தற்பொழுது விசாறனையிலுள்ள வழக்கின் நிலை குறித்தும், அகில இந்திய அளவில் ஓபிசிக்களை இணைப்பதற்கு ஆதரவு தருமாறும் கேட்கப்பட்டது.


இதனையடுத்து தெலுங்கான காங்கிரஸ் கமிட்டியின் செய்ல் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அஞ்சங்குமார் யாதவ் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர் லட்சுமண் யாதவ் மற்றும் அஸ்பர் யூசுப்ஜாகி ஆகியோரை சந்தித்து அகில இந்திய ஓபிசி கமிட்டிக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.


மேலும், தெலுங்கான மாநில அரசின் வழக்கறிஞர் வெங்கட் செல்லக்கானி அவர்களை சந்தித்து உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது எவ்வாறு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் பொருளாதர அளவுகோளை மைய்யமாக வைத்து வழங்கப்படும் இடஒதுக்கீட்டுற்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் வழக்கை எதிர்கொள்ளுவதற்கு அகில இந்திய ஓபிசி கமிட்டி தரப்பில் முன்வைக்கப்படும்  சட்டப்புள்ளிவிபரங்கள் குறித்தான தரவுகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.


மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தலைவர் இராதாகிருஷ்ணன் இன்றுகாலை (19.09.2022)சென்னை திரும்பினார். அவருடன் பொதுச்செயலாளரும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved