🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோவையில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியருக்கு பாராட்டு விழா!

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று (18.09.2022-ஞாயிற்றுக்கிழமை), ஈச்சனாரி ஊர்நாயக்கர் இராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் இன்னும் நிரப்பப்படாமல் உள்ள மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் தகவல் தொடர்பு பொறியியல் துறையில் முனைவர் பட்டம் (Ph.D.)  பெற்ற கல்லூரி பேராசிரியர் சத்யராஜ் அவர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் சிறப்பு விருந்திரனாக கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை அறிவித்துப்பேசிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், புதிதாக சமுதாயப்பணியாற்ற ஆர்வமோடு வந்துள்ள நிர்வாகிகள் சமுதாயத்தின் தேவைகளை கண்டறிந்து பணியாற்றிட வேண்டுமென்றும், சமுதாயக்கூட்டங்களுக்கு தனிப்பட்ட அழைப்பிற்காக காத்துக்கொண்டிருக்காமல், தானாக முன்வந்து கலந்துகொள்வதற்கு முன்வரும் மாண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதேபோல் வன்னியர் 10.5 இடஒதுக்கீடு பிரச்சினை உச்சநீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்டாலும், அரசுக்குள் ஊடுருவியுள்ள தீயசக்திகளால் குரூப் தேர்வுகளில் குழப்பம் விளைவிக்கப்பட்டு வருவது குறித்தும், இதை முறியடிப்பதற்காக தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி பெரும் பெருட்செலவில் நீதியை பெறவேண்டி இருப்பது குறித்து விளக்கிப்பேசினார். மேலும், இப்பிரச்சினையில் மீண்டும் அநீதி வராமல் தடுப்பதற்கு இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவருக்கும் கொண்டுசேர்க்க நிர்வாகிகள் அனைவரும் பாடுபடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.


மாவட்ட இணைஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் பேசுகையில், வன்னியர் இடஒதுக்கீடை அடுத்து உயர்சாதி பிரிவிலுள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அரசியல் சாசனத்திற்கு விரோதமான வகையில் முயற்சிமேற்கொண்டுவருவதை எதிர்த்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்துபணியாற்றி வரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் போராடி வருவது குறித்து விளக்கிப்பேசினார். 


மேலும் இக்கூட்டத்தில் புதிதாக தெர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை வாழ்த்தி மகளிரணி சார்பில் நஞ்சம்மாள, தேவகி, இந்துமதி, ஜெயந்தி ரங்கநாதன், லலிதாம்பிகை ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நல்லட்டிபாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் தாமரை குமரேசன், மாச்சநாயக்கன் பாளையம் கணேசன், சண்முககுமார் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.


கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுப்பேசினார் ஈச்சனாரி கிளை தலைவர் விக்னேஷ் குமார். இறுதியாக முனைவர் பட்டம் பெற்ற சத்யராஜ் ஏற்புரையாற்றினார்.  இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்டம் மகளிர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாக்கியலட்சுமி, வடக்கு மாவட்ட துணைத் தலைவரான ஈச்சனாரி கணேசன், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரான மாச்சநாயக்கன்பாளையம் அரவிந்த்,  ஈச்சனாரி கிளை மகளிர் அணி தலைவரான லலிதாம்பிகை, துணை தலைவரான மணிமேகலை, செயலாளரான சுவாதி, பொருளாளரான கலைச்செல்வி, துணைச்செயலாளரான லதா,ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள நஞ்சம்மாள், தேவகி, சிவனேஸ்வரி மற்றும் இந்துமதி ஆகியோருக்கு சமுதாய தலைவர்கள் வழக்கறிஞர் ரங்கநாதன், சின்னதுரை, பிரதீப் முருகேசன், சித்தரகுமார், மற்றும் வினோத் ஆகியோர் வாழ்த்தினர். நன்றியுரை  லலிதா வழங்கினார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved