🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வீதியில் இறங்கிய வருங்காலங்கள்! நம்பிக்கை தரும் நாமக்கல்!

நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் வசிக்கும் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள உயர்ஜாதி வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீத   இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாட்டில் 5 விழுக்காடு உள்ள உயர்சாதி பிரிவினர் ஏற்கனவே மத்திய அரசின் உயர்பதவிகளிலும், நீதிமன்றங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 விழுக்காடு இடத்தை அபகரித்துக் கொண்டுள்ள சூழலில், வாக்கு வங்கி அரசியலுக்காக அவர்களை திருப்தி படுத்தும் வகையில் இச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. நாட்டில் 65 விழுக்காடுக்குமேலுள்ள ஓபிசி வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாக நிரப்பாமல், இதுவரை 15 விழுக்காடு அளவிலேயே பணிநியமனங்கள் பெற்றுள்ள நிலையில், அதில் கவனம் செலுத்தாமல், ஏற்கனவே உண்டு கொழுத்தவர்களுக்கு வலுசேர்த்துக்கொண்டுள்ளது மத்திய அரசு.


இதனை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் தங்கள் அறியாமையால் உரிமைகளை பறிகொடுத்து வருகின்றனர். இச்சட்டத்தை தீவிரமாக எதிர்க்க வேண்டிய பிற்படுத்தப்பட்ட சமுதாய அமைப்புகளின் தலைவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் தங்கள் சமூகத்திற்கு வழங்கியுள்ள உரிமைகள் குறித்து ஏதுமறியாதவர்களாக உள்ளனர். விதிவிலக்காக வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை அடுத்து உருவாகியுள்ள சமூகநீதி கூட்டமைப்பு, பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை ஒன்றிணைத்து அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க போராடிக்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் சமூகநீதி கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பல்வேறு சாதிய அமைப்புகள் தங்கள் சமூகங்களுக்கு இடஒதுக்கீடு குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

அந்தவகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த மோசடி சட்டத்தை எதிர்த்து தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு கண்டன முழக்கமும், விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தண்டுவாடம்பட்டி தங்கவேல், தட்டாரபாளையம் பழனிசாமி, சர்வேயர் துரைசாமி (ஓய்வு), காந்தியவாதி ரமேஷ், மேற்கு பாலப்பட்டி ராஜா, அறக்கட்டளை  பொறுப்பாளர்கள் சின்னசாமி ,பாலப்பட்டி மணி, பாப்பநாயக்கன்பட்டி செல்வராஜ், சிட்டி கனகராஜ்,  ஜங்களாபுரம் சூர்யா, வடக்கு தொட்டிபாளையம்  கௌசல்யா ஆகியோர் பங்கேற்று நடத்தினர்.

தங்கள் சொந்த பிரச்சினைகள் தாண்டி. சமுதாயத்திற்குத் தேவையான பொதுப்பிரச்சினை, இடஒதுக்கீடு போன்ற உரிமைசார்ந்த பிரச்சினைகளுக்காக நாமக்கல் மாவட்ட தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் திரண்டிருப்பது கம்பளத்தார் வரலாற்றில் முதல்முறை. இப்படியான பிரச்சினைகளை தொடர்ந்து சமுதாய மக்களிடம் கொண்டு சேர்த்து, போராட்ட களத்திற்கும் தயார் படுத்திவரும் நாமக்கல் அறக்கட்டளை தலைவருக்கும், நிர்வாகிகளுக்கும் வருங்கால சமுதாயம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும், அறக்கட்டளை நிர்வாகத்திற்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved