🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உயர்சாதி இடஒதுக்கீடு வழக்கு விசாரணை நிறைவு பெற்றது!

உயர்ஜாதி ஏழைகள் அல்லது முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பில் ஏழைகள் எனப்படுவோருக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்குவதற்காக மத்திய பாஜக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு  அரசிலமைப்புச் சட்டத்தில் செய்த 103-வது சட்டதிருத்தத்த்திற்கு எதிரான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட  சமூகங்களை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமூகநீதியை நிலைநிறுத்த கொண்டுவரப்பட்டது தான் இடஒதுக்கீடு. இதுதான் சமூகநீதிக்கு அடிப்படை என்பதால் இந்திய அரசியல் சாசனமும் இதனை உறுதி செய்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்காகத் தான் இந்திய அரசியல் சாசனம் முதன் முதலாக திருத்தப்பட்டது. இந்தத் திருத்தத்துக்காக  மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியவர் தந்தை பெரியார்தான்.

ஆனால் இந்த இடஒதுக்கீடு தத்துவத்தை அனைத்து உயர்பொறுப்புகளையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள உயர்ஜாதியினர் எனப்படும் முற்பட்ட வகுப்பினர் கடுமையாக எதிர்த்து வந்தனர். இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் தங்கள் சமூகம் மட்டுமே ஆண்டாண்டு காலமாக அனுபவித்து, உண்டு கொழுத்து வருவதற்கு ஆபத்து என்றுணர்ந்த உயர்சாதியினர், வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 27% இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த உத்தரவிட்டதை எதிர்த்து உயர்சாதி எனப்படுகிற முற்பட்ட வகுப்பினர் மாணவர்கள்களை தூண்டிவிட்டு, போராட்டம் நடத்தி தீக்குளித்த கொடுமையும் இந்தியாவில்தான் அரங்கேறியது. மதத்தை பின்னனியாகக்கொண்டு தூண்டிவிடப்பட்ட சதிக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களும் பலியானதும் நடந்தது. 1885-இல் தொடங்கி இன்றுவரை இடஒதுக்கீடுக்கு எதிராக எதிர் கருத்துகளை உருவாக்குவதும், நீதிமன்றங்களை துணைக்கு வைத்துக்கொண்டு வழக்குகள் மூலம் தடை ஏற்படுத்தி வருவதும் உயர்ஜாதியினரின் வழக்கம்.

ஆனால் காலம் செய்த கோலம், இடஒதுக்கீடை எதிர்த்த உயர்ஜாதியினரே இடஒதுக்கீடு கோரினர். இதனடிப்படையில்தான் உயர்ஜாதி எனப்படும் முற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியான பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் 2019-இல் பாஜக அரசு கொண்டுவந்தது. இதற்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. முற்படுத்தப்பட்டோரில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளோருக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்துமாம்.

பொதுவாக இடஒதுக்கீடு வழக்குகளில் இடஒதுக்கீடு அளவானது 50%-த்தை தாண்டக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. மத்திய அரசு உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் இந்த 50% இடஒதுக்கீடு வரம்பு மீறப்பட்டிருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீடு வழக்குகளை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம், இந்த வழக்கை மட்டும் மூன்றாண்டுகள் கிடப்பில் போட்டுவைத்திருந்தது.

நாட்டின் அரசியல் சாசனத்தில் சமூக- கல்வி அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது; ஆனால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தவில்லை என இந்த வழக்குகளில் சுட்டிக்காட்டபபட்டிருந்தது. திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து விசாரித்தது. 

முன்னதாக, 103வது சட்டம் திருத்தப்பட்டதில் 3 முக்கிய  கேள்விகள் எழுந்துள்ளதாகவும், முதலில் அது பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என்று தொடக்கத்தில் இந்த அமர்வு அறிவித்திருந்தது. மேலும், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கொள்கைகளை மீறும் வகையில் இந்த சட்டத்தை திருத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறதா? தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு  அரசுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கியதில் அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளதா? இந்த சட்ட திருத்தத்தினால் பிற்பட்டோர், தலித்துகள், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பாதிக்கப்படுமா? ஆகிய 3 முக்கிய கேள்விகள் குறித்து  விவாதம் நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம்  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணை அனைத்தும் நேற்று (27.09.2022)  முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், துஷார் மேத்தா உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில், “இந்த இடஒதுக்கீட்டு சமூகத்தில் பின் தங்கியிருக்கும் வகுப்புகளுக்கு அளிக்கப்பட்ட 50% இடஒதுக்கீட்டை எந்தவகையிலும் தடுக்கும் வகையில் இல்லை. ஆகவே இந்த இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புச் சட்ட திருத்தம் செல்லும்” என்ற வாதத்தை முன்வைத்தனர். 

இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக, “பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு மற்ற வகுப்புகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு பிரிவிற்கு மட்டும் இதை தருவது இடஒதுக்கீடு முறையை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இது பின்பக்கத்திலிருந்து இடஒதுக்கீட்டில் நுழைவது போல் உள்ளது” என்று வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 

தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சேகர் நப்டே, “பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பதை மட்டும் அடிப்படையாக வைத்து ஒரு இடஒதுக்கீட்டை அளிக்க முடியாது. இந்த இடஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்கும் முன்பாக நீதிபதிகள் இந்திரா சஹானி (மண்டல் வழக்கு) வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்பி பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.

தலைமைநீதிபதியின் பதவிகாலம் இன்னும் ஒன்னரை மாதகாலமே இருப்பதால், அதற்கு முன்னதாக தீர்ப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக வழக்கறிஞர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved