🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சிறையிலிருந்து மீண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! - 95-வது பிறந்தநாளில் வணங்குகிறோம்!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமேற்று நடித்து உலகெங்கும் கட்டபொம்மனாரின் புகழ் பரப்பி, காலமெல்லாம் நிலைத்திருக்கும் வகையில் திரைக்காவியமாக்கி, வரலாற்றில் நீங்கா புகழையும், பெருமையையும் தேடித்தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு உலகெங்கும் வாழும் கம்பளத்தார் சார்பில் நன்றியுடன் நினைவு கூறுகிறோம். 

இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள அவரது  மணிமண்டபத்திற்கு வெளியே மக்கள் பார்வைக்கு படும்படி சிவாஜி சிலையை அமைக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சிலை அமைத்துள்ளது. இந்த நிலையில் நடிகர் திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணிமண்டபத்தை பார்வையிட்டு சிவாஜி கணேசனின் குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசினார். இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்த அங்கு வந்தார். அப்போது கே.எஸ். அழகிரி - மு.க.ஸ்டாலின் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். இதையடுத்து கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு, நடிகர் ராஜேஷ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிவாஜி கணேசனின் ரசிகர்களும், பல்வேறு அமைப்புகளும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சென்னை கடற்கரையில் அமைக்கப்ப்ட்டிருந்த சிவாஜி கணேசனின் சிலை, நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்.ஏ.புரத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு பொதுமக்கள் பார்வைக்கு தெரியாதவாறு அமைக்கப்பட்டிருந்தது. மாவீரன் கட்டபொம்மனாரின் புகழை கெடுக்கும் வகையில் அவ்வப்போது வெளிவரும் அவதூறுகளைத் தாண்டி நிலைத்திருப்பதுபோல், நடிகர் திலகத்தின் புகழை மணிமண்டப சிறைக்குள் அடைக்கும் முயற்சியை முறியடித்து இன்று மணிமண்டபத்திற்கு வெளியே கம்பீரமாக காட்சியளிக்கிறார். உலகம் போற்றிய நடிகர் திலகத்தின் சிலையை மக்கள் பார்வையில் படும்படி மாற்றியமைத்த தமிழக அரசுக்கு நன்றி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved