🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மழழையோடு கொஞ்சும் முதல்மொழியாய் தெலுங்கு ஒலிக்கட்டும்!

மழழையோடு கொஞ்சும் முதல்மொழியாய் தெலுங்கு ஒலிக்கட்டும்!

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் தலைமையில் நேற்று மாலை காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர், ஏடறிந்த வரலாற்றில் ஓராயிரம் ஆண்டுகாலத்திற்கு மேற்பட்ட வரலாறு கொண்ட இனக்குழுக்களில் கம்பளத்தார் சமூகமும் ஒன்று. அறிவியல் வளர்ச்சியற்ற முடியாட்சி காலத்தில், வேவ்வேறான இடங்களில் வாழ நேரிட்டதாலும், இடங்களுக்கு ஏற்றவாறு வேவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இனக்குழுவிற்கான தனிப்பட்ட பண்பாட்டுக்கூறுகள் எவ்வளவோ இழப்பையும், மாற்றத்தையும் தாண்டி இன்றுவரை நிலைத்துள்ளது. 

சமகாலத்தில் நம் இனக்குழுவின் பண்பாட்டுக்கூறுகளை காக்க வேண்டியது ஒவ்வொரு கம்பளத்தாரின் கடமை.  தென்னகம் வந்து மீண்டும் ஆதிக்கம் பெற்று அதை படிப்படியாக இழந்துவிட்டாலும், பண்பாட்டை இழக்காமல் நமது முன்னோர்கள் காத்துவந்துள்ளனர்.தற்போது நமது முன்னோர்களின் விட்டுச்சென்ற அடையாளங்களில் எஞ்சி இருப்பது தெலுங்கு மொழியும், திருமண சடங்கு சம்பிரதாயம், வழிபாட்டு முறைகள் மட்டுமே. நமது இனக்குழுவின் இந்த அடையாளங்களையும் இந்த தலைமுறைக்கு கடத்தாததின் விளைவு, இன்றைய தலைமுறைக்கு தெலுங்கு மொழி அந்நியப்பட்டுவிட்டது. அதுபோலவே கம்பளத்தாருக்கே உரித்தான திருமண சடங்குகளையும் பாதுகாக்காமல் வைதீகத்திடம் விட்டுவிட்டோம்.

ஆயிரமாண்டுகாலத்திற்கு மேலாக வழிவழியாக நம் முன்னோர்களால் கட்டப்பட்ட மாளிகையும், கோவில்களும், தேசங்களும் அழிந்து போயிருக்கலாம். ஆனால் அவர்கள் பின்பற்றிய கலாச்சாரமும், மொழியும் காலம் கடந்து நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. எனவே அதை காக்க வேண்டியது நமது கடமை. இனி வரும் காலங்களில் நமது இல்லங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையுடனும் தாயும், தந்தையும் கொஞ்ச வேண்டிய முதல்மொழியாக தெலுங்கு இருக்கட்டும். அதேபோல் நமது திருமண சடங்குகளை நமது பெரியோர்களை வைத்து, நமது பாரம்பரிய முறைப்படி நடத்த அனைவரும் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved