🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திருஅருட்பிரகாச வள்ளலார் காட்டும் ஆன்மீகம்! - 200 வது அவதார தின சிறப்பு!

ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி ஆன்மீக அன்பர்களுக்கு புதிய பாதையை திறந்தவர், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்தநாள் இன்று.

வள்ளலார் சுவாமிகள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் சிதம்பரத்திற்கு வடக்கே பத்துக்கல் தொலைவிலுள்ள மருதூர் எனும் சிற்றூரில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக அவதரித்தார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று, பல நூற்றுக்கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப்படுகிறது.

கணக்கராகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்த வள்ளலாரின் தந்தையார் இராமையா பிள்ளை, வள்ளலார் பிறந்த கொஞ்ச நாளிலேயே காலமாகிவிட்டதால், குடும்பம் வறுமையில் சிக்கியது.  ஐந்து பிள்ளைகளோடு ஆதரவற்று நின்ற தாய் சின்னம்மை, சென்னை அருகே பொன்னேரியில் உள்ள தாய் வீட்டில் தஞ்சம் கொண்டார். பிறகு பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு சென்னையில் குடியேறினார்கள்.

மூத்த பிள்ளை சபாபதி தமிழ் ஆசிரியரானதும், பிள்ளைகளுக்கு வீட்டில் வைத்து பாடம் சொல்லிக் கொடுத்தும், புராணச்சொற்பொழிவுகள் மூலம் ஈட்டிய வருவாயும், சின்னம்மை குடும்பத்தின் வறுமையை போக்கியது. இராமலிங்கரோ பள்ளிக்குச் சென்று கல்வி பயில்வதில் நாட்டம் கொள்ளவில்லை. கந்தகோட்டத்தில் முருகனைச் சேவித்துப் பாடல்கள் பாடத் தொடங்கினார். இராமலிங்கரின் பக்தி ஈடுபாடு கண்டு வியந்த ஆசிரியர், அவருக்கு பாடம் நடத்த மறுத்துவிட்டார்.

தம்பியின் போக்கில் கோபம்கொண்ட அண்ணன் சபாபதி, இராமலிங்கரை வீட்டில் சேர்ப்பதற்கோ, உணவளிப்பதற்கோ தடை விதித்தார். ஆனால் கணவருக்குத்தெரியாமல் அண்ணியார் அவருக்கு உணவளிப்பார். ஒரு கட்டத்தில் அண்ணியின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி இராமலிங்கர் வீட்டுக்குத் திரும்பியதோடு படிப்பைத் தொடரவும் செய்தார்.

ஒன்பது வயதில் படிப்பதற்காக நூல்களையும், எழுது பொருள் களையும் பெற்றுக்கொண்டு தமது அறைக்குள் நுழையும் இராமலிங்கர், அறைக்குள்ளிருந்த கண்ணாடி முன் அமர்ந்து தியானம் செய்வார். அப்போது மடை திறந்த வெள்ளமாய் அவருக்குள்ளிருந்து பாடல்கள் வெளிப்படும்.

பார்ப்பதற்கு சாது! அருள் சிந்தும் மலர்முகம்! கருணையிலோ கடல்! ஆனால், பாடும் கவிதையில் சூறாவளி! அநீதியை எதிர்ப்பதில், மூட பழக்கவழக்கங்களை, சனாதனத்தை எதிர்ப்பதில் தீப்பந்தம்! பகுத்தறிவின் குரு! சமதர்ம சித்தாந்தத்தின் கரு! என்று அஅன்பர்களால் போற்றப்படுபவர்.

ஆதிகாலத்தில் சமணம், சாருவாகம், ஆசிவகம் போன்ற மரபினர் வேதங்கள், சடங்குகளை எதிர்த்து நாத்திகம் பேசினர். அவர்களில் உத்தாலகர், விருஷப தேவர், பிரகஸ்பதி, அஜிதகேச கம்பளன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், வள்ளலார் நாத்திகவாதியல்ல, உருவ வழிபாடுகள், சமயச் சடங்குகளை தவிர்த்து, தனக்குள் ஒளிரும் உள்ளொளியை கண்டவர்.

முயன்றுலகில் பயன் அடையா மூட மதமனைத்தும்

முடுகி அழிந்திடினும் ஒரு மோசமும் இல்லையே!

என பகிரங்கமாக ”மதங்கள் அனைத்தும் மூடத்தனங்களால் பின்னப்பட்டவை, பயனற்றவை, அவை அழிந்திடில் நாட்டுக்கு ஒரு மோசமும் நிகழ்ந்திடாது” என்ற புரட்சிகர சிந்தனையாளர்.

ஆன்மீகப் புரட்சியாளர் வள்ளலார் என ஏன் தமிழ்சான்றோர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால், அவர் சனாதாவாதிகளிடம் இருந்து கோவில்களை விடுவிக்க போராடினார். சனாதனவாதிகள் எந்தப் பெயரிலான மாயையில் இந்த மக்களை ஆட்டுவித்தார்களோ அவை பொய் என பிரகடனப்படுத்திய முதல் புரட்சியாளர் வள்ளலார் தான்.

வேத ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேத ஆகமத்தின் விளைவறியீர் – சூதாகச்

சொன்னதல்லால் உண்மை உரைத்தலில்லை

என்ன பயனோ இவை! என பறையறித்துச் சொன்ன வள்ளலார்,

உலகறி, வேத ஆகமத்தை பொய் எனக் கண்டுணர்வாய்! என்றார்.

தன் ஆன்மீக ஆற்றலால் இறை சக்தியை உணர்ந்தவர் வள்ளலார். இறைவனை நெருங்க மனத் தூய்மை ஒன்றே போதுமானது. ஆகவே, கொல்லாமை, பொய்யாமை, சூதுவாதின்மை இவையே இறைவனை நெருங்கும் வழியென தன் பிரச்சாரத்தில் வலியுறுத்திய வள்ளலார்,

நால் வருணம், ஆசிரம், ஆசாரம் முதலா

நவின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே, என்றார்.

சாதியும், மதமும், சமயமும் பொய்யென

ஆதியில் உணர்த்திய அருட் பெரும் ஜோதி!

என தான் உணர்ந்ததை நமக்கும் உரைத்தார்!

சைவம் (சிவ வழிபாடு),வைணவம் (பெருமாள் வழிபாடு), சாக்யம் (சக்தி வழிபாடு) ,கெளமாரம் (முருக வழிபாடு), காணபத்யம் (பிள்ளையார் வழிபாடு), செளரம் (சூரிய வழிபாடு) என பற்பல தெய்வங்களும், மதங்களும் இருந்தது நம் நாடு. சதா சர்வகாலமும் அன்றைக்கும் சிவ பக்தர்களும், பெருமாள் பக்தர்களும் சண்டையிட்ட காலம் அது.  சித்தர்களை பகையாளிகளெனக் கருதி அவர்களை அரசன் துணையுடன் சனாதனிகள் நாடு கடத்திய காலகட்டமெல்லாம் இருந்துள்ளது. இவர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சாடினார் வள்ளலார்.

தெய்வம் பற்பல சிந்தை செய்வாரும்

சேர்கதி பற்பல செப்புகின்றாரும்

பொய்வந்த கலை பல புகன்றிடுவாரும்

பொய்ச்சமயாதியை மெச்சுகின்றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றிலார், என அப்பட்டமாக அவர்களின் தோலுரித்தார். அவரது ஆறாம் திருமுறையில் உருவ வழிபாட்டை முற்றிலும் தவிர்க்கச் சொல்லி ஜோதியை வழிபடச் சொன்னார். அதாவது உள் ஒளிரும் ஜோதியை உணரத் தூண்டினார். 

மேலும்,

சாதியிலே, மதங்களிலே, சமய நெறிகளிலே

சாத்திரச் சந்தடியிலே, கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து நீர் அழிதல் அழகலவே! என வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

புராணங்கள், இதிகாசங்கள் இவற்றை உண்மையென நம்பி கற்பனை கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து பூஜிப்பதைக் கடுமையாகச் சாடினார் வள்ளலார். 

”கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக’’ என்றார்!

யாகங்கள், வேள்விகள், பரிகார பூஜைகள் என பணத்தை அள்ளி இறைத்து வீணடிப்பவர்களைக் கண்டு, ”பசியில் வாடும் ஏழைகளுக்கு உணவளியுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார். உலகத்திலே பிறர் பசித் தீர்ப்பதே ஆகப் பெரும் அறமாகும்’’ என்று சொன்ன வள்ளலார், சொல்லியதோடு நில்லாமல் வடலூரிலே மே 23, 1867 ஆம் ஆண்டு முதல் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார். உணவளிக்க அன்று பற்றவைக்கப்பட்ட 150 ஆண்டுகள் கடந்தும் அணையாமல் அடுப்பாக கோடிக்கணக்கானோருக்கு உணவளித்து வருகிறது.

தண்ணீரிலும் விளக்கெரிய வைத்த ஆன்மீக சித்தர் வள்ளலார் 3.1.1874-இல் ஜோதியில் ஐக்கியமாகி அருட்பெருஞ்ஜோதியாய் ஒளிவீசிக்கொண்டும், தனிப்பெருங்கருணையாய் அருள்மழை பொழிந்துகொண்டும் உள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved