🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவீரனுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் முனைப்பில் தமிழக அரசு!

மாவீரனுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் முனைப்பில் தமிழக அரசு!

திராவிட முன்னேற்றக்கழகம் கடந்த 2021- இல் நடைபெற்ற 16 வது சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மொத்தம் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அதில் 455-வது வாக்குறுதியாக வெள்ளையர்களை எதிர்த்து முதன்முதலில் தீரமாய் போரிட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோருக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் இடம் பெற்றிருந்தது.

திமுகழகம் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை பெரும் சவாலாக இருந்தது. ஆட்சியின் தேனிலவு காலத்தை கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வந்த திமுக அரசு, பால்விலை குறைப்பு, பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி, மகளிருக்கு இலவச பஸ்பாஸ் போன்ற தேர்தல் அறிக்கையில் கூறப்படிருந்த ஜனரஞ்சகமான, அதேவேளையில் மக்கள் எதிர்பார்த்த முக்கிய அம்சங்களை நிறைவேற்றி, தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதை வெளிக்காட்டி வந்தது. அதற்கேற்றாற்போல் முதல்வர் அவர்களும் தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் தன்னுடைய அரசு தேர்தல் வாக்குறுதிகளில் இவ்வளவு சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிவந்தார்.

இந்நிலையில், கம்பளத்தார் சமுதாய அமைப்புகளின் அரைநூற்றாண்டு கோரிக்கையான மாவீரன் கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்ற வாக்குறுதி மிகுந்த கவனத்தை பெற்றது. அரசு பதவியேற்றபின் எதிர்பார்ப்பும் அதிகமாயிற்று. இதற்கிடையே சட்டமன்றத்தில் சிலை அமைக்கும் அறிவிப்பு வெளியானதும், அரைகுறையாகவும், நம்பிக்கையற்றும் இருந்தவர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால் அறிவிப்பு வந்து ஒருவருடம் தாண்டியும் பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை என்ற போது, பல அமைப்புகளும், தனி நபர்களும் அரசின் மீது விமர்சனக் கணைகளை ஏவத்துவங்கினர். 

இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் கட்டபொம்மன் சிலை அமைக்கும் பணியை பார்வையிடச் சென்ற புகைப்படம் வெளியாகியது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சென்னையிலுள்ள பிரதான சாலைகளில் ஏதாவது ஒன்றில் மாவீரனுக்கு சிலை அமைக்கப்பட்டிருந்தால், மக்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் முழுமையாக நிறைவேறியிருக்கும். ஆனால் தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழல், நீதிமன்றங்களின் தலையீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஏதாவது வழியில் தனது வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக முதல்வர் முன் வந்திருப்பது நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியது.

இதனைத்தாண்டி சமகால அரசியலில் நீண்ட காலம் வாழையடி, வாழையாக கழகத்திற்காகவே தியாகம் செய்த கம்பளத்தார் குடும்பங்கள் ஏராளமாக உள்ளது. அப்படிப்பட்ட விசுவாசமிக்க கம்பளத்தார் உள்ளிட்ட வாய்ப்பற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு "சமூகநீதி அரசிலும், கழகத்திலும்" உரிய வாய்ப்பினை வழங்கிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுவதோடு, மாவீரன் கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவை தமிழக அரசு சார்பில் பிரமாண்டமான முறையில் நடத்தி கௌரவிக்க வேண்டுமாய் கம்பளத்தார் சமுதாயத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved