🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு- நாடகமாடும் மத்திய, மாநில அரசுகள்

ஓபிசி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அக்கறையின்றியும், பிற்படுத்தப்பட்ட மக்கள் அறியாமையிலும் இருக்கின்றனர். எனவே காட்சி மற்றும் எழுத்து ஊடகத்துறையினர் இதுகுறித்து விழிப்புணர்வை உருவாக்க உதவிட வேண்டுமென்று சமூக நீதி கூட்டமைப்பு வேண்டுகோள் வைத்துள்ளது. இது குறித்து சமூக நீதி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

2021 சென்செஸ் கணக்கெடுப்பில் ஓபிசி சாதிகளையும் சேர்க்கவேண்டும் என்று நீதிப்பேராணை வழக்கு 14200/2020 மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் மகாதேவன் முன்பு இன்று 82-வது வழக்காக விசாரணைக்கு வருகின்றது. 

இந்தியாவில் 80 கோடி ஓபிசி மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு சமூகநீதி பெரும் அரசியல் பொருளாக வியாபாரம் செய்யப்பட்டுவருகின்றது. இம்மக்களின் குறைந்தபட்ச கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்றங்களும் நீதி வழங்கவில்லை. இந்த வழக்கு சம்பந்தமான எழுத்துப்பூர்வமான வாதத்தை இத்தோடு இணைத்துள்ளோம். தயவு செய்து ஓபிசி மக்களில் நியாயங்களை ஊடகங்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியவைக்க உதவுங்கள். 

நீதிமன்ற வாதம் ஆங்கிலத்தில் உள்ளதால் அதன் தமிழாக்க சுருக்கம் கீழ்க்காணுமாறு.

சாதிவாரிக் கணக்கெடு அரசின் கொள்கைமுடிவு, அதில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று உச்சநீதிமன்றம் 2014-லேயே (கிருஷ்ணமூர்த்தி வழக்கு சிஏ 9996/2014) கூறிவிட்டது. எனவே நீதிமன்றம் தலையிடமுடியாது என்பது தவறு. அதேதீர்ப்பில் அரசின் தலைப்பு ஒருதலைபட்சமாக இருக்கின்றபோது நீதிமன்றங்கள் குறுக்கிடலாம் என்று தெளிவாக உள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அரசு ஏற்கனவே முடிவுசெய்து, 1961 முதல் SC/ST சாதிவாரி/சமூகவாரிக் கணக்கெடுப்பு நடத்திவருகின்றது. ஓபிசிக்கு மட்டும் மறுப்பது ஒருதலைபட்சமானது. மேலும் அரசின் வாதமான SC/STக்கு சாதிவாரி கணக்கெடுக்க அரசமைப்புச்சட்டப்படி அவசியம் இருக்கின்றது, ஓபிசிக்கு அவ்வாறு சட்டம் வலியுறுத்தவில்லை, எனவே ஓபிசி கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்பது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் மட்டுமல்ல, ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு பூசும் ஒருதலைபட்சமான செயல்.

ஏனென்றால், SC/STக்கு என்ன அரசமைப்புச்சட்ட அவசியமிருக்கின்றதோ, அத்தனையும் ஓபிசி மக்களுக்கும் இருக்கின்றது. எனவே மத்திய அரசின் இச்செயல் ஓபிசி மக்களின் சமத்துவ உரிமையை மீறும் செயல். மேலும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓபிசி சாதி வாரிக்கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு பலமுறை வலியுறுத்தியுள்ளது. அப்பரிந்துரை அரசைக் கட்டுப்படுத்தும் என்று 1993 வருட தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்டமும், இராம்சிங் (ஜாட்) வழக்கில் உச்சநீதிமன்றமும் தெளிவாக கூறியுள்ளது. 

எனவே ஓபிசி கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத்த வேண்டும். இப்பரிந்துரை அரசை கட்டுப்படுத்தது என்ற மத்திய அரசின் வாதம் பொய்யானது, ஏற்புடையதல்ல. மேலும் மத்திய அரசு சாதி வாரிக்கணக்கெடுப்பு சிரமமானது, பிழைகள் வரும், வேலைகள் முடிந்துவிட்டது என்ற பல நொண்டிச்சாக்குகள் சொல்வது அர்த்தமற்றது. 2011ல் சென்செஸ் சட்டத்திற்கு வெளியில் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. ஆனால் பலதுறைகளில் தனித்தனியாக எடுக்கப்பட்டதால் பல பிழைகள் இருப்பதாகக் கூறி அந்த புள்ளிவிவரங்களை இதுவரை வெளியிடவில்லை. 

எனவே மேலும் அதுபோன்ற வீண் வேலைகளைத் தவிர்க்க மக்கள் வரிப்பணத்தைச் சேமிக்க சென்செஸ் கணக்கெடுப்பில் கேள்வி 10ல், படிவம் வரிசை எண் 13ல் ஓபிசி என்ற ஒற்றை வார்த்தையைச் சேர்ப்பதால், மிக துல்லியமான புள்ளிவிவரங்களை எந்த கூடுதல் செலவுமின்றி எடுக்கமுடியும். அது பல இலட்சம் கோடி பெறுமான பல பயனுள்ள விபரங்களை மத்திய, மாநில உள்ளாட்சி அரசுகளுக்கு வழங்கி சமூகநீதியைப் பேணி அரசமைப்புச்சட்டத்தின் நோக்கைத்தை நடைமுறைப்படுத்த உறுதுணையாக இருக்கும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved