🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒதுங்கிக்கொண்ட காக்கைகூட்டங்கள் ! ஒற்றுமையாய் திரண்ட கம்பளத்தார்!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 223-வது நினைவுநாள் இன்று தமிழகமெங்கும் மிகுந்த எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக மாவீரன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறு தவிர, மதுரை, கரூர், திருப்பூர், கோவை, போடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த அமைப்புகள் ஏற்பாடு செய்துவந்தன. அதேபோல் சிலைகள் இல்லாத நகரங்களிலும் குறிப்பாக சத்தியமங்கலம், சென்னை, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் மாவீரன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தேர்தல் காலமாக இல்லாத காரணத்தால் அரசியல் கட்சித்தலைவர்கள் கட்டபொம்மனாரின் நினைவுநாளை புறக்கணித்தனர். தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக போன்ற பல்வேறு கட்சிகளில் கம்பளத்தார் சமுதாயத்தினர் இருந்தாலும், அவர்களாலும் கட்சியில் தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள இயலவில்லை, அரசியல் கட்சிகளும் கம்பளத்தாரை அங்கீகரிக்கவோ, வாய்ப்புகள் வழங்கவோ விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. குறைந்த பட்சம் டிவிட்டர், முகநூல் பக்கங்களிலாவது நினைவுநாளுக்கு செய்தி வெளியிடும் அரசியல் கட்சித்தலைவர்கள், தேர்தல் இல்லாத இந்த ஆண்டு வாய்மூடி மௌனித்துவிட்டது, 40 லட்சம் கம்பளத்தாரின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, ஒரு சில மாவட்டங்களில் குறிப்பிட்ட அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள் பெயரில் "இன்னாரின் ஆர்மி" என்று புலங்காகிதம் அடையும் கம்பளத்து இளைஞர்களுக்கு ஒரு படிப்பினை. சுயகவுரவத்தை இழந்து அரசியல் செய்ய நினைத்தால் அது அவர்களை மட்டுமல்ல சமுதாயத்தையே இழிவுபடுத்துகிறது என்பதற்கு சிறந்த உதாரணம், அரசியல் கட்சிகளின் பாராமுகம்.


கட்சிகள் மட்டுமல்ல கம்பளத்தாரின் கூட்டத்தைக்காட்டி பிழைக்கும் தோழமை அமைப்புகள் கூட இந்தமுறை பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. ஜனவரி 3-ஆம் தேதியும் இதேநிலைதான் தொடரும், ஆனால் 2024-இல் பாராளுமன்ற தேர்தல் வரும்போது அடுத்த நினைவுநாளிலும், 2024-இல் வரும் பிறந்தநாளிலும் காக்கைக்கூட்டங்கள் கம்பளத்தாரின் வாக்குகளை கவர போட்டி போட்டிக்கொண்டு படையெடுக்கும் என்பதில் மாற்றமிருக்காது.


எந்தக்கட்சி , எந்த தலைவர் எப்படிப்போனாலும் கம்பளத்தார் மீதும், கட்டபொம்மனாரின் மீதும் பரிவும், பாசமும் கொண்ட ஒரே அரசியல் கட்சித்தலைவர் வைகோ அவர்கள் மட்டுமே என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். வாக்கு அரசியலுக்கு வருவதற்கு முன்பு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த காலம் தொடங்கி, அரசியல் கட்சித் தலைவராக ஆனபின்பும், கட்டபொம்மன் தொடங்கி ஒவ்வொரு சுதந்திரப்போராட்ட தியாகிகளையும், சாதி, மத எல்லை கடந்து அவர்களின் பிறந்தநாள், நினைவுநாள்களில் கௌரவிப்பதை வழக்கமாகக்கொண்டுள்ளார். இதுமட்டுமல்ல, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் கம்பளத்தாருக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கிய தலைவரும் வைகோ அவர்கள் மட்டுமே.


வழக்கம்போல் இந்த ஆண்டும் தனது மகனும் மதிமுக தலைமைக்கழக செயலாளருமான துரைவைகோவுடன் கயத்தாறு மணிமண்டபம் வந்திருந்தார். பிற தலைவர்கள் போல் சம்பிரதாயமாக மாலை அணிவித்துவிட்டு செல்லாமல், மாவீரன் கட்டபொம்மன் புகழ் ஓங்குக என்று மூன்றுமுறை உரக்க முழக்கமிட்டு, ஒரு நிமிடம் அந்த இடத்தையே உணர்ச்சிபொங்கச்செய்வதே, கட்டபொம்மன் போன்ற வரலாற்று மாவீரர்களின் தியாகத்திற்கு செய்யும் உண்மையான மரியாதை என்பதை உலகுக்கு உணர்த்தி, பிரச்சார வாகனத்தில் இருந்து மாவீரனின் தியாகத்தை நினைவுபடுத்தி செல்வது வாடிக்கை. அதை இந்த ஆண்டும் தொடர்ந்தார். அவருடைய பாஷையில் சொல்வதென்றால் மாவீரன் கட்டபொம்மன் புகழை நேற்றும், இன்றும்,நாளையும் பேசுவார், பேசிக்கொண்டே இருப்பார்.


கம்பளத்தாரின் உள்ளும், புறமும் அறிந்த ஒரே தலைவர், சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் உரிய வாய்ப்புகளை வழங்கிவரும் தலைவர் வைகோ அவர்களின் கயத்தாறு வருகைக்கும், முகநூலில் கட்டபொம்மனாரின் நினைவுநாள் செய்தியினை வெளியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் கம்பளத்தாரின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved