🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கவர்ன்மென்ட் வேலை கனவை நனவாக்க தயாராகும் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்!

தனியார்துறைகளில் எத்தனை உயர்ந்த பதவி, எவ்வளவு லட்சங்கள் மாதச்சம்பளமாக கொடுத்தாலும் அரசுவேலை மீதான "க்ரேஸ்" இன்று வரை குறையவில்லை என்பதை, அரசு தேர்வு குறித்த அறிவிப்புகள் வந்தவுடன் லட்சக்கணக்கானோர் விண்ணப்பிப்பதின் மூலமும், தேர்வு எழுதுவதின் மூலமும் உறுதியாகிறது. அரசு வேலை என்பது அதிகாரமிக்கது, உத்தரவானமானது என்பதைத் தாண்டி, அரசு நிர்வாகத்தில் ஒரு சமுதாயத்தின் பங்கேற்பாக பார்க்கப்படுகிறது. அதிகார அடுக்குகளில் இடம்பெறுவதின் மூலம் பலவழிகளில் நேரடியாகவும், மறைமுறைமாகவும் சமூகத்தின் மீது செல்வாக்கு செலுத்தப்படுகிறது. இதனால் பல சமுதாயங்கள் தங்கள் சமுதாய ஆட்கள் அரசு வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதிதுவத்தை பெறுவதற்கு பிரத்யோகமாக பயிற்சி நிறுவனங்களை நடத்தி வருகின்றன. உயர்சாதியில் தொடங்கி தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்கள் வரை இது பொருந்தும். இதில் வழக்கம்போல் பின்தங்கிய சாதிகள் பட்டியலில் தொட்டிய நாயக்கர் சமூகம் நிச்சயம் இடம்பெறும்.

தொட்டிய நாயக்கர் சாதியின் பெரும்சாபக்கேடுகளில் ஒன்று, கிராமம் தோறும் அரசியல் கட்சிகளில் பொறுப்பாளர்களாக இருப்பார்கள், ஆனால் உயர்ந்த இடத்திற்கு வரமாட்டார்கள். அதுபோல் தற்போது படிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர், ஆனால் போதிய அளவு அரசுப்பணியில் இல்லை. ஆசிரியப்பணியில் இருப்பவர்களை நீக்கிவிட்டு அரசுப்பணிகளில் இருப்பவர்களை கணக்கிட்டால் சிலநூறுகளில் முடிந்துவிடும். நம் சாதியில் ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ் கூட இல்லை என்று கூட்டத்தில் கூப்பாடு போட்டு கடமையை முடித்துக்கொள்பவர்கள் ஒருபுறம் என்றால், உதவி செய்யப்போனால் ஏதாவது உபத்திரத்தைக்கொண்டுவந்து விடுவார்களோ என்ற அச்சத்தில், அரசுப்பணியில் இருப்பவர்களின் பாராமுகம் மறுபுறம் என சிக்கித்தவிக்கும் சபிக்கப்பட்ட சமூகம். ஏற்படுத்திக்கொடுக்கும் நுழைவு வாயிலை வாய்ப்பாக மாற்றிக்கொள்ளத் தெரியாததும், பிறரிடம் காட்டும் விசுவாசத்தையும், நன்றியையும், நம்மவர்களிடம் காட்ட மறுப்பது, ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் போக்கும், உதவ முன்வருபவர்கள்கூட, எதற்கு காசைக் கொடுத்து கடி நாயை விலைக்கு வாங்குவானேன் என்று ஒதுங்கிக்கொள்ள வைக்கிறது. இவற்றை மாற்ற மாபெரும் சிந்தனை மாற்றத்தை சமூகத்தில் கொண்டுவரவேண்டிய தேவை எழுகிறது. 

எதார்த்த கள நிலவரம் இப்படி இருப்பினும், எதையும் பொருட்படுத்தாமல் சமூகத்தில் நாளு பேரு நல்லா இருக்கட்டும் என்று நினைக்கும் பெருந்தனக்காரர்களும் இல்லாமல் இல்லை. பாவப்பட்ட சமூகத்தை எப்படியாவது முன்னேற்றிட முடியாத என்ற ஏக்கம், எளியவர்கள் முதல் செல்வந்தர்கள் வரை தங்களால் இயன்றதை விருப்பத்தோடு வழங்கியதின் விளைவே, இன்று சென்னை, செங்குன்றத்தில் 3 கோடி மதிப்பிலான 12500 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் மூன்றடுக்கு கட்டிடம். 

ஏறக்குறைய 90 சதவீத கட்டுமானப்பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், இக்கட்டிடத்தைப் பயன்படுத்தி அரசுப்பணியில் தொடரும் வறட்சியைப்போக்க சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சொந்தமாக பயிற்சி நிறுவனத்தை நடத்துவதே லட்சியமாக இருந்தாலும், அதற்கான கட்டமைப்பு, பொருளாதார வசதி, அரசு அங்கீகாரம், பயிற்சி ஆசிரியர்களை நியமிப்பதில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுபவம் வாய்ந்த பயிற்சி மையங்களோடு இணைந்து செயல்பட ஆலோசனை வழங்கப்பட்டதின் அடிப்படையில், சென்னை, அண்ணாநகரில் செயல்பட்டு வரும் மேத்தா ஐஏஎஸ் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 சர்வீஸ் முதல் 51 வகையான பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்கு, முதற்கட்டமாக பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேத்தா ஐஏஎஸ் அகாடமி மூலம் வழங்கப்படும் பயிற்சி கட்டணத்தை சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வழங்கிட உத்தேசித்துள்ளது. கூடுதலாக இலவசமாக தங்கும் வசதிக்கு (ஆண்களுக்கு மட்டும்) நலச்சங்க கட்டிடத்தை பயன்படுத்திக்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி மையத்தில் சேர்வதற்கான விண்ணப்பம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்பும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த கொல்லவார், சில்லவார், தோக்கலவார், எர்ர கொல்லவார் பிரிவு விண்ணப்பதாரர்கள், நேரடி கலந்தாய்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பரிந்துரைகள், 1950-இல் தொடங்கப்பட்ட இராஜகம்பள மகாஜனசங்கம் உள்ளிட்ட  அனைத்து அமைப்புகளில் இணைந்து சமுதாயப்பணியாற்றிய குடும்ப உறுப்பினர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு, நிர்வாகத்தின் பரிசீலனையில் உள்ளது. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved