🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தாரின் கண்ணியம், கட்டுப்பாடு, வீரசக்கதேவி ஆலய குழுவிடம் காவல்துறை பாராட்டு!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வம், கம்பளத்தாரின் இஷ்ட தெய்வம் மற்றும் அடையாளம் என இரண்டறக் கலந்தது பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி. புகழ்மிக்க வீரசக்கதேவி ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா இரண்டாண்டுகள் கொரோனோ பெருந்தொற்று இடைவெளிக்குப்பின் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவிற்கு, தமிழகம் முழுவதிலுமிருந்து பல லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு அம்மனை தரிசித்துச் சென்றனர். தென்மாவட்டத்தில் எந்தவொரு சமுதாய விழா என்றாலும் 144 தடையுத்தரவு போட்டு, மிகுந்த எச்சரிக்கையுடன், அசம்பாவிதம் நிகழ்ந்துவிடாமல்  பார்த்துக்கொள்வது காவல்துறைக்கு பெரும் சவாலாக இருக்கும். ஒருநாள் விழாவிற்கே அவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்படும்பொழுது, சக்கதேவி ஆலயத்தில் மூன்றுநாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின்போது சட்டம் ஒழுங்கை பாதுக்காப்பது காவல்துறைக்கு மிகுந்த சவாலான பணியாக இருக்கும்.


முளைப்பாரி, தீர்த்தக்குடம், ஜோதி என கிராமம் தோறும் மக்கள் வெவ்வேறுவகையான வழிகளில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற கூட்டம் கூட்டமாக, வாகனங்கங்களிலும், கால் நடையாகவும், வாத்திய இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு, இரவுபகலாக பல ஊர்களை, நகரங்களை அமைதியாக கடந்து வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. சவால்மிக்க இந்தப்பணியை சரியான திட்டமிடுதலோடு, சமூகத்தை பண்படுத்தி, விழாவை வெற்றிகரமாக நடத்திமுடித்து, தென்மாவட்டத்தில் ஒரு பெருங்கூட்டத்தை கூட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் நடத்திட முடியும் என்பதை நிரூபித்துள்ளது வீரசக்கதேவி ஆலயக்குழு.

காவல்துறையே எதிர்பார்த்திராத ஒரு நேர்த்தியான விழாவை நடத்திய ஆலயக்குழுவினரை தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் Dr.பாலாஜி சரவணன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் இறுதியில், இரவு சுமார் 10.00 மணி அளவில் ஒட்டுமொத்த காவல்துறை உயர்அதிகாரிகளும் விழா மேடையில் ஏறி, கம்பளத்தார்கள் நேர்த்தியாகவும், சுயகட்டுப்பாட்டோடும், பக்தியோடும் விழாவில் கலந்துகொண்டதற்கும் நன்றி தெரிவித்து, விழாவினை நடத்திய ஆலயக்குழுவினருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப்பின், இந்த ஆண்டு (2022) சித்திரை திருவிழாவையும்  சிறப்பாக நடத்தியதற்கு விழாக்குழுவினரை நேற்று (21.10.2022) அழைத்து இன்றைய மாவட்ட கண்காணிப்பாளர் திரு.Dr.பாலாஜி சரவணன் IPS அவர்கள் பாராட்டு சான்றிதழ் அளித்து வருங்காலங்களிலும் நல்லமுறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியின்போது பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும் பெயர்போன கம்பளத்தார் சமுதாயம், வீரசக்கதேவி ஆலய திருவிழாவில் கலந்து கொள்ளும் அதே ஒழுக்கத்தோடும், நாகரீகத்தோடும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சியின்போதும் நடந்துகொள்வதை விழா ஏற்பாட்டாளர்களும், கலந்துகொள்பவர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் வைத்தார்.

தகவல் உதவி
திரு.எஸ்.இராதாகிருஷ்ணன்,
தலைவர்,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,
சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved