🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தன்னலமற்ற சமுதாயப்பணியால் 45-வது குருபூஜைக்கு திரண்ட சமுதாயம்!

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியம், மேலமுடிமன்னார் கோட்டையில் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்து,  இராஜகம்பள மகாஜன சங்கத்தின் தலைவராக 1950 முதல் 1977 வரை பணியாற்றிய காலத்தில் கொல்லவார், சில்லவார், தோக்கலவார், தொழுவ நாயக்கர் பிரிவுகளை ஒன்றிணைத்து "தொட்டிய நாயக்கர்" என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவர மூலகாரணமாக இருந்தவர் அமரர்.வையப்ப நாயக்கர். பெருந்தலைவர் காமராஜரின் நெருங்கிய நண்பராக இருந்தபடியால்  1957-இல் அவர் முதல்வராக இருந்தபொழுது தொட்டியநாயக்கர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் அமரர்.வையப்ப நாயக்கர். கம்பளத்தார் சமுதாயத்தின் மிகப்பெரிய அமைப்பாக இராஜகம்பள மஹாஜன சங்கத்தை கட்டமைத்து குக்கிராமம் தோரும் கொண்டு சேர்க்கும் பணியில், சமுதாய தலைவர்கள், ஜமீன்தார்கள், நாட்டாமை, ஊர்நாயக்கர், ஊர்மந்தை அனைவரையும் ஒன்றிணைத்து வெற்றிகண்ட தலைவர் அமரர்.வையப்ப நாயக்கர்.


சுமார் 27-ஆண்டுகாலம் கம்பளத்தார் சமுதாயத்திற்காக அரும்பணியாற்றி, பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய முதுபெரும் தலைவரின் 45-வது நினைவுநாளான  நேற்று (21.10.2022) முடிமன்னார்கோட்டையில் அமைந்துள்ள அவரது நினைவிட சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. இதில் வையப்ப நாயக்கர் மகனும், திமுக பிரமுகருமான மலைராஜன், இராஜகம்பளம் (தொட்டியநாயக்கர்) மகாஜன சங்கத்தின் நிறுவன தலைவர் மாரையா, கட்டபொம்மன் கலவி அறக்கட்டளை முக்கிய நிர்வாகிகள் இராதாகிருஷ்ணன், இராமநாதபுரம் மாவட்ட இந்து அறநிலையக்குழு தலைவர் கார்த்திகைச்சாமி மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


அதேபோல் இராசிபுரத்திலுள்ள விடுதலைக்களம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் வையப்ப நாயக்கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் ராஜேந்திரன் மாவட்ட செயலாளர் சரவணன், நாமக்கல் நகர செயலாளர் பாலசுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியூர்  பூபதி ,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வசந்தா மணி, மோகனுர் ஒன்றிய பொறுப்பாளர் சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்று மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினர்.


அதிகாரப்பதவிகளை எதையும் அலங்கரிக்காத ஐயா.வையப்பநாயக்கர் மறைந்து 45 ஆண்டுகள் கடந்தும், ஒரு பெருங்கூட்டம் அவரது நினைவுநாளை நன்றியுடன் அனுசரிக்க காரணம் அவரது தன்னலமற்ற சமுதாயப்பணியே என்றால் மிகையல்ல. ஐயா.வையப்ப நாயக்கர் புகழ் ஓங்குக.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved