🔴 LIVE | முப்பெரும் விழா 2023


செக்கச் சிவந்த பிரேசில்! மிகுந்த உற்சாகத்தில் இடதுசாரிகள்!

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நாடான பிரேசில், கிட்டத்தட்ட பாதி (47%) அளவை உள்ளடக்கியது. உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான பிரேசில், அமேசான் மழைக்காடுகள் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கு பிரபலமான இடமாக உள்ளது. தவிர, இயற்கை வளங்கள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சினையில் தீவிரப்பங்காற்றி வரும் நாடு என்ற பெயர் பிரேசிலுக்கு உண்டு.

பிரேசிலின் பெரும்பான்மையான மக்களாட்சி வரலாற்றில் பல கட்சி முறைமையையே கொண்டுள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. 18 வயதிலிருந்து 70 வயதுவரையிலான படித்த அனைவருக்கும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  16 முதல் 18 வயது நிரம்பிய படிக்காதவர்களுக்கும், 70 வயதைத் தாண்டியவர்களுக்கும் வாக்களிப்பது விருப்பத்தேர்வாக உள்ளது.

உலகின் நான்காவது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலின் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி நடந்தது. இதில் தற்போதைய அதிபா் ஜெயிா் போல்சனாரோ மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக முன்னாள் அதிபரும், இடதுசாரி கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவருமான லூலா டி சில்வா களம் இறங்கினார். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 11 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இத்தேர்தலில், நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பிரேசில் அரசியலமைப்பு சட்டப்படி அதிபா் தோ்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளை பெற வேண்டிய நிலையில், லூலா டி சில்வா 47.9 சதவீத வாக்குகளும், போல்சனாரோ 43.6 சதவீத வாக்குகளும் பெற்றனா்.

முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை பெறாதசூழலில், முதல் இரு இடங்களைப் பெற்றவா்கள் 2-ம் சுற்று தேர்தலில் போட்டியிட்டனர். அதன்படி சென்ற 28-ஆம் தேதி 2-ஆம் சுற்று தேர்தல் நடைபெற்றது .தற்போதைய அதிபரும் தீவிர வலதுசாரியுமான ஜெயிர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரும் தீவிர இடதுசாரியுமான லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா இடையே மிகக்கடுமையான போட்டி நிலவியது. பதிவான வாக்குகள் முழுவதும் எண்ணப்பட்ட நிலையில், லூலா மொத்தம் பதிவான வாக்குகளில் 50.9 சதவிகித வாக்குகளும் (6,03,45,999), பொல்சொனாரோ 49.1 சதவிகித வாக்குகளும் (5,82,96,352) பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த வலதுசாரி தலைவரான ஜெயிர் போல்சனாரோவை தோற்கடித்து லூலா டி சில்வா வெற்றி பெற்றுள்ளார். இதற்கு கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை அதிபராக பதவி வகித்துள்ள லூலா டி சில்வா, தற்போது மூன்றாவது முறையாக பிரேசில் அதிபராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1985-ல் பிரேசில் ஜனநாயகத்துக்கு திரும்பியதில் இருந்து, பதவியில் இருக்கும் அதிபர் ஒருவர் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தது இதுவே முதல் முறையாகும். கருக்கலைப்பு மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள், கொரோனா தொற்றை கையாண்ட விதம், அமேசான் மழைக்காடுகள் அழிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக போல்சனாரோ ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவியதாகவும், இதுவே அவரது தோல்விக்கு காரணம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல், புதிய  அதிபர் குறித்தும் பல்வேறு சுவாரஷ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,செருப்பு தைத்தவரின் மகனான ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க அதிபர் ஆனதுபோல், வறுமைகாரணமாக சிறுவயதில் ஷூவுக்கு பாலிஷ் போட்டு தன் வாழ்க்கையில் நாள்களை நகர்த்தியவர் லூலா டி சில்வா. இளம் வயதிலேயே பல்வேறு தொழில்களைச் செய்துவந்த லுலா, தனது 19-வது வயதில் வேர்ஹவுஸ் (குடோன்) ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது பிரேசில் தொழில்மயமாகிக்கொண்டிருந்த காலமாக இருந்தபடியால், ஃபோர்டு, வோல்க்ஸ்வேகன், டொயோட்டா, மெர்சிடிஸ் என்று பல நிறுவனங்கள் பிரேசிலில் தொழிற்சாலைகளை நிறுவின. அப்போது லுலா தன்னைத் தொழிலாளர்கள் கூட்டணியில் (Workers Union) இணைத்துக்கொண்டார்.

தொடர்ந்து படிப்படியாக முன்னேறி, 1975, 1978-ல் தொழிலாளர்கள் கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் லூலா. தொழிற்சாலைகளுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் முன்னின்று லூலா நடத்தி வந்தநிலையில், பிரேசிலில் ராணுவ ஆட்சி வந்துவிடவே, போராட்டக்காரர்களையெல்லாம் உடனடியாகக் கைதுசெய்து சிறையில் வைத்தது பிரேசில் அரசு. அதன்படி லூலா ஒரு மாதம் சிறையில் அடைக்கப்படுகிறார். ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, லூலாவுக்கு வாழ்நாள் முழுவதும் பென்ஷன் வழங்கப்படும் என்று அறிவித்தது அப்போதைய பிரேசில் அரசு.

சிறையிலிருந்து விடுதலையான ஒருசில நாள்களில் கூட்டணித் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தம் நண்பர்கள் என இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டி  `Partido dos Trabalhadores (PT) என்ற அரசியல் கட்சியை 1980-இல் தொடங்குகிறார். இதைத் தொழிலாளர்கள் கட்சி (Worker Party) என்று மக்கள் அழைத்தனர். அப்போது பிரேசிலில் அதிபர்களை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்கும் முறை இல்லை. தற்போது இந்தியாவில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதுபோல, அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. அதை 1989-ல் மாற்றியமைத்து, நேரடித் தேர்தல் முறையை அமல்படுத்தினார் லூலா. அதே ஆண்டில் அதிபர் தேர்தலுக்கும் போட்டியிட்ட லூலா முதல் தேர்தலிலேயே தோல்வியைச் சந்தித்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட காலர் வெற்றிபெற்றார். 1992-ல் காலர் தம் பதவியிலிருந்து விலகிவிடவே, லூலாவும் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று அறிவித்தார். அவர் அந்தத் தேர்தலில் நின்றிருந்தால், நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார் என்று பிரேசில் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன் பின்னர் நடந்த இரண்டு அதிபர் தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவிய லூலா (1994 &1998), 2002-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றிபெற்றார். அதன் பிறகு, 2006-ல் நடந்த அதிபர் தேர்தலிலும் மீண்டும் வெற்றிபெற்று, தொடர்ந்து இரண்டு முறை பிரேசிலின் அதிபர் பதவியை அலங்கரித்தார்.

லூலா வெற்றிபெற்ற பிறகு பிரேசிலின் வறுமையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். அதில் குறிப்பிடத்தக்கது வறுமை இல்லா திட்டம் (Zero hunger programme). பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய வறுமை ஒழிப்புத் திட்டம். விவசாயத்தில் புரட்சி, இளமைப் பருவத்தில் கர்ப்பத்தடை, வறட்சிப் பகுதியில் நீர் மேலாண்மை செய்வது, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு நேரடிப் பண உதவி எனப் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தினார். ஆபத்துகள் அதிகமான மலைப்பகுதியில் வாழும் மக்களுக்காக, 40 பில்லியன் யூரோ செலவில் வீடு கட்டிக்கொடுத்தார். இவரது ஆட்சிக்காலத்தில் பிரேசிலில் குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாடு 46 சதவிகிதமாகக் குறைந்தது.

இவரது செயல்களைப் பாராட்டி 2010-ம் ஆண்டு, ஐ.நா இவருக்கு, `உலக வறுமை ஒழிப்பு சாம்பியன்’ என்றொரு விருது கொடுத்தது. (World Champion in fight against hunger). இது தவிர பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் அலவன்ஸ், வறுமை ஒழிப்புக்காகத் தனி அமைச்சகம் போன்ற பல விஷயங்களையும் கொண்டுவந்தார். ஆனாலும் கூட்டணிக் கட்சியின் கெடுபிடியால், தேர்தலில் முன்மொழிந்தவற்றில் பாதியைத்தான் லூலாவால் நிறைவேற்ற முடிந்தது.

லூலா அதிபராவதற்கு முன்பு ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தது பிரேசில். சொல்லப்போனால், யார் பிரேசிலை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கப்போகிறார் என்பதை மனதில் வைத்துத்தான், அப்போதைய அதிபர் தேர்தலே இருந்தது. லூலா அதிபரான பின்னர் பல விமர்சனங்கள் எழுந்தன. 'ஓர் இடதுசாரிக் கொள்கையை உடையவர், தனியார்மயத்துக்கு எதிராகப் பேசி வருபவர் எப்படி இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைப்பார்?' என்று பல்வேறு பொருளாதார அறிஞர்கள் விமர்சனம் செய்தார்கள். ஆனால் லூலா பதவியேற்ற பிறகு , அதுவரை கடனில் சிக்கித்தவித்த பிரேசில், 2008-ல் முதன்முதலாக மற்ற நாடுகளுக்குக் கடன் கொடுத்தது. வங்கிகள் அனைத்தும் அதுவரை காணாத லாபத்தை லூலாவின் ஆட்சியில் கண்டன. ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டி சர்வதேச நிதிக் கூட்டமைப்பிடம் (IMF) கடன் வாங்கி, 2005-ல் மொத்தக் கடனையும் வட்டியோடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே திருப்பிச் செலுத்தினார் லூலா.

லூலா ஆட்சியின் ஆரம்பத்தில் பொருளாதார அமைச்சராக இருந்த பாலோசி, பல்வேறு ஊழல்கள் செய்ததால், பதவி விலகிவிட, தம்மைப் போன்ற ஒரு தீவிர இடதுசாரி சிந்தனை உள்ள பொருளாதார அறிஞரான மான்டிகாவை பொருளாதார அமைச்சராக்கினார் லூலா. லூலாவின் இரண்டாவது ஆட்சியில், வளர்ச்சி மற்றும் முன்னேற்ற திட்டத்தைக் கொண்டுவந்து, பிரேசிலின் பொருளாதாரத்திலும், சமூகக் கட்டமைப்பிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். இதன்பலனாக  2008-ல் உலகப் பொருளாதார நெருக்கடியின்போது பிரேசிலின் பொருளாதாரம் சரிந்துவிடாமல் காப்பாற்றியது.

லூலாவின் ஆட்சியில் பிரேசில் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தபோதே, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளையும் சந்திக்க நேர்ந்தது. முதல் ஆட்சிக்காலத்தில் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர், லூலா உட்பட அவரது கட்சியைச் சேர்ந்த 40 பேர் ஊழலில் ஈடுபட்டிருப்பதாகத் தகவலை வெளியிட்டார். இந்தத் தகவல் வெளிவந்த ஒரு சில நாள்களிலேயே ஊடகச் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை பறிக்கப்பட்டன. 2016-ல் லூலாவின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில், அவரது ஆட்சியில் பெட்ரோப்ராஸ் எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து ஊழல் செய்திருப்பது கண்டறியப்பட்டது.

அதையடுத்து, லூலாவை அப்போதைய அதிபரான ரௌஸெப், பிரேசிலின் தலைமை அதிகாரியாக நியமித்தார். (இது பிரேசில் நாட்டின் பிரதமருக்கு இணையான பதவி). இதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு ஃபெடரல் கோர்ட் (இந்தியாவின் உச்ச நீதிமன்றம்போல) தலையீட்டால் அந்தப் பதவி பறிக்கப்பட்டு, லூலாவின் மீது விசாரணை முடிவில், 2018-ல் சிறையிலடைக்கப்பட்டு சுமார் 580 நாள்கள் சிறையில் இருந்தார் லுலா. லூலாவைச் சிறையில் அடைத்த நீதிபதி, பின்னாளில் போல்சனாரோ அரசாங்கத்தில் நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2019-ல் லூலாவைக் கைதுசெய்தது முறையன்று என்று தீர்ப்பளிக்கப்பட்டு, 2021-ல் அவர்மீது சுமத்தப்பட்ட வழக்கு பொய்யானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு லுலா விடுதலை செய்யப்படுகிறார்.

அதன் பிறகு தற்போது 2022 தேர்தலில் போல்சனாராவுக்கு எதிராகப் போட்டியிட்டு, அவரைத் தோற்கடித்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரவிருக்கிறார் லுலா. தற்போது உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில், பிரேசிலின் கரன்சி மதிப்புமே சரிந்து, பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது பிரேசிலின் அதிபராகப் பதவியேற்கவிருக்கும் லூலாவுக்கு பெரும் சவால் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதிகிறார்கள்.

உலகில் நான்காவது பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் இடதுசாரித் தலைவர் பொறுப்பேற்பது செங்கொடி தோழர்களை உற்சாகமடையச் செய்துள்ளது, 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved