🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மும்முனை போட்டி நிலவும் குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!

வடமாநிலங்களான குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு மாநிலத்திற்கான தேர்தல் தேதிகளும் ஒரேநாளில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தேர்தல் ஆணையம் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியானது. அதன்படி, இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி குறித்து அறிவித்தார். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதன்படி, குஜராத்தில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல் கட்ட வாக்கு பதிவு டிசம்பர் 1ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது.

முதல்கட்டமாக 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நவம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது.  இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது.

குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகளில் 4.90 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் மொத்தம் 51.782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநில தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 80 வயதானவர்கள், 40 சதவீதம் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.

மும்முனைப்போட்டி நிலவும் குஜராத் மாநில சட்டமன்றத்தேர்தலில் பல திருப்புமுனைகள் காத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved