🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உச்சநீதிமன்ற தீர்ப்பு! பெரியார் வாக்கு உறுதியானது!

முன்னேறிய வகுப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு - EWS  (ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம்) 10 % இடஒதுக்கீடு வழங்க செய்யப்பட்ட 103-வது சட்டதிருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது.

பல ஆயிரம் ஆண்டுகால சாதியப்பாகுபாட்டால் கல்வி, வேலைவாய்யு உரிமை மறுக்கப்பட்டு, தீண்டாமை கொடுமைகளுக்கு உள்ளாகி வந்த பிற்படுத்தப்பட்ட,  தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு உரிய நீதி வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு முறையில், சமூகநீதியை தகர்த்தெறியும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

ஏற்கனவே இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் மொத்த இடஒதுக்கீடு வரம்பு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக் கூடாது என்று வரையறுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க. அரசு, அரசியல் சாசனத்தின் சமூகநீதிக் கோட்பாட்டிற்கு எதிராக,  இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தை ஒரு அளவுகோலாகத் திணித்தது சமூக நீதியையே நீர்த்துப் போகச் செய்கின்ற முயற்சியாக இச்சட்டத்தை கொண்டுவந்தது. 

ஏற்கனவே, மண்டல் குழு வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லது என்று தீர்ப்பளித்தது. அதை முறியடிப்பதற்குத்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு, அரசமைப்புச் சட்டத்தில் 103 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து, உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்தது.

ஒட்டுமொத்தமாக சமூகநீதி தத்துவத்தையே கேலிக்குள்ளாக்கும் வகையில், பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய 103 ஆவது சட்டத் திருத்தம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை (Basic Structure) தகர்க்கிறது என்பது தான் வழக்கு.

இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளைப் பல ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் கிடப்பில் போட்டிருந்தது.  தலைமை நீதிபதியாக யு.யு.லலித் அவர்கள் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் இதற்கான அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வெறும் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியின் பதவி காலம் இருந்தநிலையில் பல்வேறு வழக்குகளுக்கு அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டதும், வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டது இதே காலகட்டத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை பறிக்கும் இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அமர்வில் 5 நீதிபதிகளுமே உயர்சாதியினர் என்பது கடும் விமர்சனமாக பார்க்கப்பட்ட நிலையில், இந்தியச் சமூகம் எதிர்காலத்தில் இப்படியான சிக்கலைத்தான் சந்திக்கும் என்றுணர்ந்து தந்தைப்பெரியார் கூறிய வாக்கை இத்தீர்ப்பின் மூலம் உறுதிசெய்துள்ளது உச்சநீதிமன்றம் என்று கருத்தை பலரும் முன்வைக்கின்றனர். 

எந்தவித தரவுகளும் இன்றி கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்காமல் தொடரச் செய்தபோதே இதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யாது என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளைப் புரிந்து கொண்டு பாஜக அரசும் அவசர அவசரமாக எல்லா துறைகளிலும் 10% இட ஒதுக்கீட்டை  நிறைவேற்றியது. எஸ்சி, எஸ்டி மற்றும்  ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடுகளை நிறைவு செய்யாமல் பல்லாயிரக்கணக்கான பதவிகளை பின்னடைவுக் காலிப் பணியிடங்களாக வைத்திருக்கும் மோடி அரசு, இந்த 10% இட ஒதுக்கீட்டை மட்டும் தனிக் கவனம் செலுத்தி நடைமுறைப்படுத்தியது.  ஒருபுறம் இந்துக்கள் அனைவரும் ஒன்று என்று பேசிக்கொண்டே இந்து மதத்தில் இருக்கும் ஓ பி சி மற்றும் எஸ்சி, எஸ்டி  பிரிவினருக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக அரசு  முன்னேறிய சாதியினருக்காக மட்டுமே செயல்படும் அரசாக இருக்கிறது என்பதற்கு இதுவொரு சான்று ஆகும். 

இந்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி ரவீந்திர பட்  மற்றும் தலைமை நீதிபதி யு.யு. லலித் ஆகியோரும்கூடத் தங்களின்  தீர்ப்பில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றே கூறியுள்ளனர். இது சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாடே ஆகும்.  

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரிலும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் உள்ளனர். அவர்களை 10% இட ஒதுக்கீட்டில் பங்கேற்க முடியாமல் தடுப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது. அந்த அடிப்படையிலும் இந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும்  என்பதே மூத்த வழக்கறிஞர்கள் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வைத்த வாதம்.

இவ்வழக்கில் சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் லலித், ரவீந்திர பட் ஆகிய இருவரும் இந்த வாதத்தின் அடிப்படையில் தான் தமது தீர்ப்பை அமைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பான்மைத் தீர்ப்பை எழுதியிருக்கிற நீதிபதிகள் இந்த வாதத்தை நிராகரிப்பதற்கு விளக்கம் எதையும் கொடுக்கவில்லை.  

இட ஒதுக்கீடு அளவு 50 % க்கு மேல் போகக்கூடாது என்று இந்திரா சஹானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்மானிக்கப்பட்டது. அதை ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு மாற்ற முடியாது. எனவே இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பு குறித்து இந்த அமர்வு முடிவு செய்திருப்பதும் சட்டப்படி ஏற்புடையதல்ல. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை அனுப்ப வேண்டும் என்று கோரி சீராய்வு மனுவினை மனுதாரர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதே பிற்படுத்தப்பட்ட மக்களின் விருப்பம்.

ஒருபுறம் இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறும் பாஜக, நாட்டில் பெரும்பான்பை மக்களான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மிகப்பெரிய மோசடி. அற்ப பதவி சுகங்களுக்காக பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் ஒரு சாரார், நாட்டில் தங்களுக்கான உரிமையை மறந்து அநீதிக்கு துணைபோவது சொந்தக்காசில் சூனியம் வைப்பது போன்றது.

நாடு சமூகநீதி பயணத்தில் நெடுந்தூரம் கடக்கவேண்டியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அதிகாரமற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved