🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நவீன இந்தியாவின் புதிய அடிமைகளா ஓபிசி மக்கள்? மத்திய அரசின் முடிவுக்கு கடும் கண்டனம்.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கொருமுறை நடத்துவது வழக்கம். 2020-ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக எடுக்கப்படவில்லை. 2021-ஆம் ஆண்டு எடுக்கப்படும் என்று அறிவித்திருந்த மத்திய அரசு, இன்னும் அதற்கான உத்தரவுகளை பிறப்பிக்காமல் உள்ளது. ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதும், எஸ்சி/எஸ்டி பிரிவினர், முஸ்லிம், கிருஸ்தவர் உள்ளிட்ட இந்து மதம் அல்லாதவர்களின் மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் நாட்டில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினர் மக்கள்தொகை மட்டும் கணக்கெடுக்கப்படுவதில்லை. மத்தியில் எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தொடரும் இந்த அவலநிலை, இந்துக்களுக்கு நன்மை பயக்கும் கட்சியாக பார்க்கப்படும் பாஜக ஆட்சியிலாவது ஓபிசி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர், மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவு சேர்க்கப்படாது என்று அறிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று (08.11.2022) விசாரணைக்கு வந்தது.  அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது 1951-இல் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு என்று வாதிட்டார். அப்போது குறிக்கிட்ட நீதிபதி, பெரும்பான்மை மக்களின் நலன் கருதி கொள்கை முடிவை மாற்றிக்கொள்ளலாமே என்றார். இதற்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரிய மத்திய அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வரும் 22.11.2022 அன்று வழக்கை ஒத்தி வைத்தனர்.

மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, அரசியல் சாசனத்திற்கு எதிராக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதிகளுக்கு எந்தவித புள்ளி விபரமும், பரிந்துரையும் இல்லாமல் 10% இடஒதுக்கீடு வழங்கியது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டத்தை ரத்து செய்தது. சுதந்திரத்திற்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோவில் கட்டப்படுகிறது. இதுபோல் சுதந்திரம் பெற்றதிலிருந்து  ஆண்டாண்டு காலமாக காப்பாற்றப்பட்டு வந்த மரபுகளையும், சட்டங்களையும், நடைமுறைகளையும் கைவிட்டுள்ளது. ஆனால் தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டு, ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்தும், இடஒதுக்கீடு குறித்த பல வழக்குகளில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவை என்பதை உச்சநீதிமன்றம் வலியுறுத்திய பின்னரும், நேரு காலத்தில் எடுக்கப்பட்ட முடிவை காரணம் காட்டி ஓபிசி கணக்கெடுப்பு நடத்தமுடியாது என்று மத்திய அரசு பிடிவாதமாக உள்ளதின் மூலம், ஓபிசி இந்துக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு சலுகைகளை பறித்து, உயர்சாதி இந்துக்கள் மற்றும் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர்களுக்கு அடிமை சேவகம் செய்ய பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு துணைபோகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

ஒருபுறம் எஸ்சி/எஸ்டி மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை அதிகரித்துக்கொள்ள சட்டம் வழிவகை செய்வதால், அது தொடர்ந்து உயர்த்தப்பட்டே வருகிறது. 15% உள்ள உயர்சாதிகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கியதையும் ஏற்றுக்கொண்டுள்ளது உச்சநீதிமன்றம். ஆனால் நாட்டில் 70% உள்ள மக்கள் பல சாதிகளாக பிரிந்துள்ளதால் ஓபிசிக்களை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறது மத்திய அரசு.  மத்திய அரசின் இந்த முடிவால் வாய்ப்பற்ற சிறுபான்மை  சாதிகள் நவீன இந்தியாவின் புதிய அடிமைகளாக மாறும் நாள் தூரம் இல்லை என்றே தெரிகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved