🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜகம்பளத்தார் கோவில் அரைநூற்றாண்டுகால ஆக்கிரமிப்பு! நொடியில் அகற்ற உதவிய துரைவைகோ!

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டம் லந்தக்கோட்டை கிராமத்தில் இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வரும் அருள்மிகு ஸ்ரீ நாச்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 8 ஏக்கர் 41 சென்ட் நிலமானது கடந்த 45 வருடங்களாக தனியார் ஒருவரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி கோவில் நிலத்தை மீட்க வேண்டுமென்பது அந்த கிராம பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்துள்ளது. 

அரைநூற்றாண்டுகாலமாக ஆக்கிரமிப்பை நீக்கும் முயற்சியில் தோல்வியைச் சந்தித்து வந்த மக்கள், விருதுநகர் மாவட்டம் செங்குளம் மற்றும் ஈரோடு மாவட்டம் பெரியபுலியூர் கோவில் நிலங்களில் இருந்துவந்த நீண்டகால பிரச்சினையை வெற்றிகரமாக கையாண்டு கம்பளத்தாரின் உரிமையை நிலைநாட்டியவர் என்ற வகையில், விடுதலைக்களம் கட்சியின் தலைவர் கொ நாகராஜனிடம் இப்பிரச்சினையை கொண்டு சென்றனர்.


அதனடிப்படையில், கடந்த 12/10/22 அன்று  கிருஷ்ணகிரி மாவட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள  வந்த மதிமுக-வின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ வைச் சந்தித்து அருள்மிகு நாச்சியம்மன் கோவில் நிலத்தை மீட்டு தர கோரி வலியுறுத்தி மனு அளித்தார்.

மனுவினை பெற்றுக்கொள்ளும்போதே அதுகுறித்த தகவல்களை விரிவாகவும், பொறுமையாகவும் கேட்டுக்கொண்ட துரை வைகோ, சென்னை திரும்பியதும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களை சந்தித்து ஆக்கிரமிப்பை அகற்றிட கோரிக்கை வைத்தார். இந்த மனுவைப் பெற்றுக்கொண்டு விரைந்து செயல்பட்ட அமைச்சர், உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறபித்ததைத் தொடர்ந்து, கோயில் நிலத்தை மீட்டு நேற்று முன்தினம் ( 08/11/2022) இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டது.

அரைநூற்றாண்டுகால ஆக்கிரமிப்பை ஒருசில வாரங்களில் மீட்க துரித நடவடிக்கை எடுத்த துரைவைகோ மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, விடுதலைக்களம் கட்சியின் தலைவர் கொ.நாகராஜன் உள்ளிட்டோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved