🔴 LIVE | முப்பெரும் விழா 2023


EWS 10 விழுக்காடு இடஒதுக்கீடு- மறுசீராய்வு மனுவில் செய்ய வேண்டியது என்ன?

அனைத்து கட்சிகளுக்கும் சமூகநீதிக் கூட்டமைப்பின் வேண்டுகோள்!

முற்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான (EWS) 10% இடஒதுக்கீடிற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டு இருந்தபோதே,  மனுதாரர்கள் அரசமைப்புச் சட்ட  நிபுணத்துவம் வாய்ந்த வழக்கறிஞர்களை வாதாட வைக்குமாறும், சில முக்கியமான சட்ட வாதங்கள் வைக்கப்படவில்லை என்றும், அவற்றையெல்லாம் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்டவர்கள் மூலமும், திறந்த கடிதம் வாயிலாகவும் வெளியிட்டோம். அரசும், வழக்கை நடத்திய கட்சிகளும் அதை கண்டுகொண்டாததின் விளைவு, அரசமைப்புச்சட்ட  திருத்தத்தின் மூலம் 130 கோடி மக்களுக்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கடுகளவு மூளையும், கைச்சிற்று  அளவு உப்புப் போட்டுச் சாப்பிடுகின்ற எந்த மனிதனும், 103-வது  அரசமைப்பு  சட்டத் திருத்தத்தைச் சட்டப்படி சரியென்று ஏற்றுக்கொள்ளமுடியாது. இப்படிப்பட்ட மாபெரும் அநீதியைச் சரிசெய்ய சரியான சட்ட வாதங்களை முன்வைக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்படி 103வது திருத்தம் செல்லாது என்பதற்கு மனுதாரர் (திமுக உள்ளிட்ட கட்சிகள்) முன்வைத்த வாதங்கள் என்ன?

1. பொருளாதார அளவீட்டை மட்டும் வைத்து இடஒக்கீடு வழங்கமுடியாது.

2. SC/ST/OBC ஏழைகளை ஒதுக்கிவிட்டு FC-யில் உள்ள EWS-க்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கியது சமத்துவ உரிமையைப் பாதிக்கின்றது.

3. உச்சநீதிமன்றம் விதித்துள்ள 50% இடஒதுக்கீட்டு உச்சவரம்பை மீறிவிட்டதால், இது சமத்துவ உரிமைக்கு  எதிரானது.

உச்சநீதிமன்ற வழங்கியுள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ள காரணங்கள் என்ன?

1.காலத்தின் தேவை கருதி, அரசு இதுவரை வாய்ப்புக்கள் வழங்கப்படாத ஏழைகளுக்கு வழங்குவதற்காகப் பொருளாதார அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீடு வழங்கலாம். இது பொருளாதார நீதி. அரசமைப்புச் சட்டத்தை தேவைக்கு ஏற்ப படித்துக்கொள்ளலாம். EWS சரத்து 46க்குள் வரும், சரத்து 46 இல்லை என்றாலும் பாராளுமன்றத்திற்கு  அடிப்படைக்கூறுகளை மீறாமல், எப்படிப்பட்ட சட்டத்  திருத்தமும் கொண்டுவர அதிகாரமுள்ளது.

2. இடஒதுக்கீடு விதிவிலக்காக வழங்கப்படுவது. அதவது சரத்து 16 (4), 16 (1)ற்கு விதிவிலக்கானது. இடஒதுக்கீடு அடிப்படை கூறு அல்ல. அதனால் SC/ST/OBC ஏழைகளுக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு  வழங்கப்படுவதால் அவர்களை நீக்கிவிட்டுத்தான் EWS-க்கு இடஒதுக்கீடு வழங்க முடியும். சமத்துவ உரிமையைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை.

3. 50% இடஒதுக்கீட்டு உச்சவரம்பு மாற்றமுடியாத சட்டமல்ல. மேலும், அந்த உச்சவரம்பு SC/ST/OBC  இடஒதுக்கீட்டிற்குத்தான் பொருந்தும். 10% EWS  இடஒதுக்கீட்டுக்கு அல்ல.

4. புள்ளிவிவரமில்லை, அது இல்லை, இது இல்லை என்பதையெல்லாம் வேறு வழக்கில்தான் (பிற்படுத்தப்பட்டோர்) பார்த்துக்கொள்ள  வேண்டும். எனவே 103வது அரசமைப்புச்சட்ட திருத்தம் செல்லும்.

ஏன் உச்சநீதிமன்றத்தின் மேற்படி வாதங்களும் தீர்ப்பும் சட்டப்படி தவறு.

1. தீர்ப்பின் பத்தி 33ல், மேற்படி சட்டத்திருத்தம் சமத்துக்கோட்பாட்டை மீறியுள்ளதால் இச்சட்டத் திருத்தம் செல்லாது என்ற ஒரே அடிப்படையில்தான் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த அடிப்படையிலும்  அல்ல என்று பதிவு செய்துள்ளது.

அரசமைப்புச்சட்ட திருத்தத்தை இரண்டு அடிப்படையில்  எதிர்க்கலாம். முதலாவது, அடிப்படை கூறுகளைச் சிதைப்பதாக உள்ளது மற்றொன்று அரசமைப்புச்சட்டம் வகுத்துள்ள வழிமுறைகளை மீறியுள்ளது என்று. இந்த வழக்கில் இரண்டாவது காரணமும் மிக முக்கியமான காரணம். ஆனால் அதை யாரும் முன்வைக்கவில்லை. நீதிமன்றமும் அந்த சட்ட அளவின்படி தீர்ப்பு வழங்கவில்லை. சரத்து 16 (6) மாநில அரசு வேலைகளில் 10% EWS  இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்துள்ளது. அரமைப்புச்சட்டம் 7வது அட்டவணையில் பட்டியல் இரண்டில் 41வது வரிசையில் மாநில அரசுப்பணிகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இத்திருத்தம் இந்த மாநில அரசுப்பணியில் மாற்றம் செய்துள்ளது. எனவே சரத்து 368ன் கூடுதல் விதிகளில் கொடுக்கப்பட்டுள்ளபடி  103வது திருத்தத்திற்கு பாதிக்கு மேற்பட்ட மாநிலங்கள் ஒப்புதல் கொடுத்தபின்தான் சட்டமாக்கப்பட்டிருக்க  வேண்டும். எனவே இச்சட்டம் செல்லாது. 

102வது திருத்தம் இதன் அடிப்படையிலும்  எதிர்க்கப்பட்டது ஆனால் மராத்தா வழக்கில் 102வது திருத்தம் மாநில அரசின் அதிகாரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தீர்ப்பளித்து. 103வது திருத்தத்தில் மாநில அரசின் அதிகாரத்தில் தெளிவான மாற்றம் செய்துள்ளதால். மேற்படி நடைமுறையைக்  கடைப்பிடிக்காததால். 103வது சட்டதிருத்தம் 100% ம் செல்லாது. இன்னும் பல அசைக்க முடியாத  சட்டக்காரணங்களை சமூகநீதி கூட்டமைப்பு வழங்க  தயாராகவுள்ளது.

2. இரண்டாவது பெருந்தவறு மேற்படி திருத்தம் எப்படி சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது என்ற வாதத்தில் SC/ST/OBC ஏழைகளை விலக்கியது  ஒருதலைபட்சமானது  என்பதைத் தவிர  வேறுவாதமில்லை.  ஆனால் மேற்படி திருத்தம் 16 (4)ன் கீழ் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் மண்டல் அறிக்கையின்படி சமூக, கல்வி, பொருளாதார அளவீடுகளில் பின்தங்கியிருக்க வேண்டும், போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்க வேண்டும், 335ன்படி நிர்வாகத்திறமை  குறந்துவிடாமல்  இருக்கவேண்டும்  இப்படிப் பல  கட்டுப்பாடுகளுடன்  இடஒதுக்கீடு  வழங்கும்போது EWSக்கு  பொருளாதாரத்தில்  பின்தங்கியிருந்தால்  மட்டும் போதும் என்பது சமத்துக்கோட்பாட்டிற்கு எதிரானது. SC/ST/OBC  இடஒதுக்கீடுக்கு எந்த விழுக்காடும் வரையறுக்காமல் EWSக்கு அதிக பட்சமாக 10% வரையறுத்திருப்பது  ஒருதலைபட்சமானது.

3.அரசமைப்பு சட்ட சரத்துக்களைக் குறிப்பாக 16 (1) மற்றும் 16 (4) அதிக எண்ணிக்கை கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு (7 மற்றும் 9) 16 (4), 16 (1)ன் விதிவிலக்கல்ல, வெளிப்பாடே என்று விளக்கமளித்திருக்கும் போது 5 நீதிபதிகள் அதற்கு மாறான விளக்கமளிக்க அதிகாரமில்லை.

4. 7வது அட்டவணை இரண்டாவது பட்டியல் வரிசை எண் 41யை பார்க்காமலே தீர்ப்பு வழங்கியுள்ளதால் இது தீர்ப்பே அல்ல. இன்னும் பல பல அசைக்கமுடியாத சட்ட விளக்கமுள்ளது.

எனவே மறுசீராய்வுக்கு தயாராகும் கட்சிகள் தயவு செய்து இம்முறையாவது தலைசிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டுகிறோம்.

10% EWS இடஒதுக்கீட்டுற்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல்  கட்சிகளுக்குப்  பணிவான சவால்.  தர்மப்படி, சட்டப்படி சரியென்று விளக்கினால் 130 கோடி SC/ST/OBC மக்கள் உங்கள் கட்சிக்குத் தொடர்ந்து வாக்களிக்கின்றோம். எம்மக்கள் பிரிந்து கிடக்கின்றார்கள் என்பதற்காக, செல்வாக்கு  மிக்க  சிலரின் வாக்குகளுக்காக அநீதியை சரியென்று பேசுவது மகா பாவம். வாய்  அழுகிவிடும். நீதியின் சாபம் உங்கள் கட்சியை சும்மா விடாது.

SC/ST/OBC/DNT மக்களே நாம் மிகப்பெரிய அநீதிக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த  பேராபத்தை  முறியடித்து. அனைவருக்குமான  தேசத்தைக் கட்டமைக்க சபதமேற்போம்.  

சமூகநீதிக் கூட்டமைப்பு

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved