🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மருத்துவ நுழைவுத்தேர்வு! மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார் மாதவி!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே இராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். விவசாயியான இவரின் மனைவி கலாராணி சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும்  ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் காவல்துறையில் பணியாற்றி வருகிறார், இளையவர் இராணுவத்தில் சேர தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கடைக்குட்டி மகள் மாதவி, அருகேயுள்ள தும்முசின்னம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் சுட்டியான மாதவி +2 தேர்தில் 600-க்கு 568 மதிப்பெண்கள் பெற்றார். சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்து மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த மாதவிக்கு "நீட்" தேர்வு பொருளாதார தடையாக இருந்தது. வீட்டிலிருந்தபடியே சுயமாக "நீட்" தேர்வுக்கு தயாராகி எழுதியவர் 212 மதிப்பெண்களைப் பெற்றார். 

மருத்துவர் ஆகவேண்டும் என்ற மாதவியின் ஆர்வம், அரசுப்பள்ளி மாணவருக்கான 7.5% இடஒதுக்கீடு மூலம் சாத்தியப்படும் என்பதை உணர்ந்த உறவினரும், தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமையாசிரியாக பணியாற்றி வரும் கீழமுடிமன்னார்கோட்டைச் சேர்ந்த இராமமூர்த்தி அவர்கள், மாதவியை சேலத்திலுள்ள "ஸ்பெக்ட்ரம்" பயிற்சி மையத்தில் சேர்த்து படிக்க வைத்தார். அதன்பலனாக இரண்டாவது முயற்சியில் மாதவி நீட் தேர்வில் 390 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் அரசுப்பள்ளி மாணவர்களிலேயே முதலாவதாக தேர்வாகியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கான வாய்ப்பைப்பெற்று, சேர்க்கை முடிந்து முதலாமாண்டு வகுப்புகளுக்காக தயாராகிவருகிறார் மாதவி. தனது மகளுக்கு மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள மாதவியின் தந்தை செல்வம், மகளுக்கு மருத்துவ இடம் கிடைக்க மட்டுமல்ல, காவலராக பணியாற்றி வரும் தனது மூத்த மகன் கல்லூரிக்கு போகமாட்டேன் என்று வகுப்புகளைப் புறக்கணித்து சுற்றித்திரிந்தபோது, தலைமை ஆசிரியர் இராமமூர்த்தி அவருக்கு தகுந்த அறிவுரை வழங்கி, மீண்டும் படிக்க செல்ல வைத்த காரணத்தாலேயே இன்று மகன் காவல்துறையில் சேர்வதற்கும் காரணம் என்றார். மேலும், தங்கள் குடும்பத்தில் ஒருவராக வழிகாட்டிவரும் இராமமூர்த்தி அவர்கள், மாதவிக்கு சேலத்தில்  "நீட்" பயிற்சி வழங்க ஏற்பாடு செய்ததோடு, சேலம் பயிற்சி மையத்து அழைத்துச் சென்றதில் தொடங்கி, நீட் தேர்வு, சென்னை கலந்தாய்வு, மதுரையில் அட்மிசன், தற்போது விடுதியில் சேர்க்கும்வரை தனது காரிலேயே அழைத்துச் சென்று, சொந்த மகளைப்போல் பார்த்துக்கொண்டது வாழ்க்கையில் மறக்கமுடியாதது என்றார்.

ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த செல்வி.கார்த்திகா என்ற மாணவி சித்த மருத்துவ நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார், செல்வி.மாதவி மாவட்ட அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். சாதி கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பெண்கள் மீது மிகப்பெரிய அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட சமூகங்களில் கம்பளத்தார் சமூகம் முதன்மையானது. இன்றும் பல பகுதிகளில் குழந்தைத் திருமணம் நடந்து வரும் பிற்போக்கு நிறைந்த நிலையில், கார்த்திகா, மாதவி போன்ற குழந்தைச் செல்வங்கள், சமகால சவால்களை எதிர்கொண்டு, யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிப்பதும், ஆசிரியர் இராமமூர்த்தி  போன்ற துரோணரை மிஞ்சிய ஆசான்கள் வாஞ்சையோடு வழிநடத்துவதும், எத்தனைமுறை வீழ்ந்தாலும் வீறுகொண்டு எழுந்து தழைக்கும் சமூகம் கம்பளத்தார் சமூகம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. 

மாணவி மாதவிக்கு வாழ்த்தும், ஆசிரியர் இராமமூர்த்தி அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர் சென்னை, வீ.க.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி மற்றும் கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் வை.மலைராஜன் ஆகியோர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved