🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தூக்குமேடையை முத்தமிட்ட விருப்பாச்சியாரின் நினைவுநாள்!

மாவீரர் கோபால் நாயக்கருக்குப் பெற்றோர் வைத்த பெயர் திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர், தந்தை பெயர் திருமலை தாசரி சின்னப்ப நாயக்கர், 1728 ஆம் வருடம் ஜனவரி மாதம்14-ஆம் தேதி இவர் பிறந்தார். இவருடைய மனைவி பெயர் பாப்பம்மாள். முத்துவேல் நாயக்கர், பொன்னப்பநாயக்கர், என்ற இரண்டு குமாரர்கள் இருந்தனர்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எத்தனையே வீரர்களின் எழுச்சி மிக்க போராட்டங்கள¦, வரலாற்றில் மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் போனது. அப்படி மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் போனவர்தான், விருப்பாட்சியை 40 ஆண்டுகள் ஆட்சி செய்து வெள்ளை ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்ட, தமிழ்நாட்டின் மிகப் பெரிய விடுதலைப் பேராட்ட வீரர் குப்பளப் பாட்சா என்று திப்புசுல்தானாலும், கோபால் நாயக்கர் என்று மக்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர்.

1371-ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசன் குமாரகம்பனன் மதுரையைக் கைப்பற்றி விஜயநகரப் பேரரசின் ஒரு பகுதியாக மதுரையை சேர்த்துக் கொண்டான். மதுரையை சேர்த்துக் கொண்ட அவன் நிருவாக வசதிக்காக தன் படைவீரர்களை மதுரையில் விட்டுச் சென்றான். அப்படை வீரர்கள் பல இடங்களுக்குச் சென்று ஊர்களை உருவாக்கினர். அப்படி வந்த ஒரு படைப் பிரிவின¦ படைத்தளபதி சின்னப்ப நாயக்கன் என்பவர் (1381-1425) தன் குலதெய்வமான “விருப்பஷர்” பெயரில் விருப்பாட்சி என்ற ஊரை ஏற்படுத்தினார்.

விருப்பாட்சியைச் சுற்றிலும் தன்னுடைய உறவினர்களைக் கொண்டு பல ஊர்களை உருவாக்கி ஆண்டு வந்தார். பின்னர் இவை மதுரை விஸ்வநாத நாயக்கர் (1529-1564) ஆட்சிக்கு வந்த போது பல சிற்றரசுகள் ஜமீன்களாக மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்ட ஜமீன்களில் ஒன்று விருப்பாட்சி. விருப்பாட்சி ஜமீனின் 19-ஆம் பாளையக்காரராக திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர் (1763-1801) பட்டமேற்று, மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தார்.

நிஜாம் மன்னரிடம் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற ஆற்காடு நவாப் தனது ஆடம்பரமான செலவினங்களால் வெள்ளையரிடம் கடன் வாங்கினான். அதிக வட்டியும் பெரிய கடனும் நவாப்பின் நிலை மீறியதால் கடன் தொகைக்காக பாளையக்காரர்களிடம் வசூலிக்கும் தொகையில் 6-இல் 5 பங்கை கிழக்கு இந்திய கம்பெனிக்குத் தர சம்மதித்தார். நாளடைவில் வரியை நிர்ணயிக்கவும், வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயரே பெற்று அடாவடியாக அதிகமான வரியை விதித்ததால் பாளையக்காரர்கள் இதனை எதிர்த்துப் புரட்சியும், கலகமும் செய்தார்கள். அவர்களை அடக்கிப் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயர்கள் கையாண்டனர்.

திண்டுக்கல் சீமைக்கு 25 சதவீத வரி உயர்வு செய்வதற்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அன்றைய கவர்னராக இராபர்ட் கிளைவின் மகன் எட்வர்ட் கிளைவ், விளைச்சல் முழுவதையும் அளந்து கொட்டினாலும் வரி கட்ட இயலாமல் தங்களது சொத்துகளையும் விதை நெல்லையும் கூட விற்று விட வேண்டிய அவல நிலையை அடைந்தனர். மக்கள் இந்த நிலைமைக்கு ஆட்படாமல் தங்கள் மண்ணின் மக்களைக் காக்க பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட முனைந்தனர்.


புலித்தேவன், தீரன் சின்னமலை, அழகுமுத்து கோன், கட்டபொம்மன் போன்ற பாளையக்காரர்கள் வரி கொடுக்க மறுத்து, ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தனர். திண்டுக்கல் சீமைப் பாளையக்காரர்களை கோபால் நாயக்கர் ஒருங்கிணைந்து வலுவான புரட்சிக் கூட்டணியை உருவாக்கினார்.

25.06.1772 அன்று காளையார் கோவில் போரில் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இராணி வேலுநாச்சியாரையும் கொல்ல முயற்சித்த ஆங்கிலேயப் படையிடமிருந்து தப்பிய வேலுநாச்சியர் தனது மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை மற்றும் தளபதிகள் மருது சகோதரர்கள் பரிவாரங்களுடன் விருப்பாட்சி கோபால் நாயக்கர் அரண்மனைக்கு வந்தார்.

போரில் மாண்ட கணவனின் உடலைப் பார்த்து அழக்கூட முடியாத நிலையில் அடைக்கலமாக வந்த வேலுநாச்சியார் எனது நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டே தீருவேன்’’ என வீர சபதம் இட்டார். அதற்கு உதவி செய்வதாக வாக்களித்த கோபால் நாயக்கர் வேலுநாச்சியாரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

தனது நாட்டையும், நாட்டின் மன்னராக இருந்த கணவனையும் ஒரே நேரத்தில் இழந்து வாடிய வேலுநாச்சியாரை தனது மகளைப் போல் பாவித்து அவருக்கு ஆறுதலும், அடைக்கலமும் தந்தார் கோபால் நாயக்கர். வேலுநாச்சியாரின் பாதுகாப்பு கருதி அவரையும், அவரது பரிவாரங்களையும் ஹைதர் அலியின் பாதுகாப்பில் திண்டுக்கல் கோட்டையில் சில காலம் தங்கியிருக்க ஏற்பாடு செய்தார் கோபால் நாயக்கர்.

விருப்பாட்சியிலிருந்து கொண்டே தன்னுடைய ஒற்றர்கள் மூலம் சிவகங்கை சீமை மக்கள் தந்த நிதியைக் கொண்டு தன்னுடைய படை பலத்தை வளர்த்துக் கொண்டார் வேலுநாச்சியர். தன் நாட்டின் நிலைமையும், மக்களின் மன நிலைமையும் அடிக்கடி தெரிந்து கொண்டார். கோபால் நாயக்கரின் ஆலோசனைப்படி நிதியைக் கொண்டு ஆயுத பலத்தை அதிகரித்து கொண்டார்.

நாட்டு மக்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை தனது பலமாக வைத்திருந்தார். தனது இலட்சியத்தில் உறுதியாக இருந்த வேலுநாச்சியார் விருப்பாட்சியிலிருந்து புறப்பட்டுச் சென்று ஆங்கிலேயரிடம், இழந்த தனது நாட்டை மீட்டவர் இவர் ஒருவர்தான். பெண் வெற்றிக்கு பெருமை தேடித் தர காரணமாயிருந்தது கோபால் நாயக்கரின் வழிகாட்டுதலே ஆகும்.வேலுநாச்சியாரின் மறைவிற்குப் பின்னர் கோபால் நாயக்கரின் தீபகற்பம் கூட்டு அமைப்பில் முக்கியப் பங்கு வகித்தனர் மருது சகோதரர்கள், இவர்கள் சிவகங்கை, திருநெல்வேலி சீமைகளின் புரட்சிப்படைக்கு பொறுப்பேற்றிருந்தனர்.



1799-ஆம் ஆண்டில் தனித்தனியாக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராட்ட குழுவினர் கூட்டணி அமைத்தால் அதன் பலன் வெற்றி தரும் எனக் கருதி, திண்டுக்கல் சீமை கோபால் நாயக்கர், கோவை பகுதி காளிஹான், மலபார்பகுதி கேரளவர்மா, கன்னட மராட்டியப் பகுதி துண்டாஜிவாக் என அமைத்த கூட்டணியின் தலைவர்கள் களத்தில் நின்று வென்றிட போர்க்கோலம் பூண்டனர். இந்த தீபகற்ப கூட்டமைப்பிற்கு நாடெங்கிலும் ஆதரவு பெருகியது.

1799-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோபால் நாயக்கர் வழி காட்டுதலின்படி மணப்பாறை லட்சுமிநாயக்கர், ஹாஜிகான் தலைமையில் நத்தம், மேலூர், மணப்பாறை பகுதிகளிலிருந்து கிழக்கிந்தியப் பிரதேசங்களைக் கைப்பற்றினார். 1799-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீரங்கம் பட்டிணத்தில் கோபால் நாயக்கரின் போராட்டக் குழுவினர் திப்பு சுல்தானைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர் தனது பிரதிநிதியாக ஹாஜிகானை நியமித்து அனுப்பி வைத்தார் திப்பு சுல்தான்.

16.10.1799 அன்று கட்டபொம்மனைத் தூக்கிலிட்டு கொன்ற பின் விருப்பாட்சி அரண்மனை வாசலின் ஆங்கிலேயர்களால் பொருத்தப்பட்ட எச்சரிக்கை செப்புப் பட்டயம் ``இனி மேல் யாரும் புரட்சியில் ஈடுபட்டால் கட்டபொம்மனைப் போல் பாளையக்காரர்கள் கொல்லப்படுவார்கள்’’ என்ற செய்தியின் விரிவாக்கம் மேஜர் பானர்மேனால் கோபால் நாயக்கருக்கு அனுப்பட்டது. இப்போது இந்த பட்டயம் இடைக்கோட்டை ஜமீன் மாளிகையில் உள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாறில் தூக்கிலிட்டுக் கொன்ற பின் அவர் தம்பி ஊமைத்துறையை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். ஆங்கிலேயர்களிடம் இருந்து அவரை மீட்க கோபால் நாயக்கரும் மருதும் திட்டம் வகுத்தனர். திருச்செந்தூருக்கு காவடி எடுப்பது போல் தந்திரமாகப் படையினரைத் தயார் செய்து பாளையங்கோட்டை சிறைக்குள்ளே புகுந்து அதிரடிப் போர் புரிந்து ஊமைத்துரையை மீட்டனர். சிறையில் இருந்து மீட்கப்பட்ட ஊமைத்துரை தன்னைத் தாக்க வந்த பரங்கியரின் தலைகளை சுருள் கத்தியால் கொய்தான். பின்னர் விருப்பாட்சிக்கு வந்த அந்த வீரனுக்கு விருதும் 6,000 படை வீரர்களையும் தந்து மீண்டும் ஊமைத்துரையை பாஞ்சாலங்குறிச்சிக்கே மன்னனாக ஆவணம் செய்தார் கோபால் நாயக்கர்.

கோபால் நாயக்கரின் அரண்மனைக்குப் பின்னால் உள்ள கருமலையில் தான் தீபகற்பக் கூட்டணித் தலைவர்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் ரகசியமாக கூடிப் பல தீர்மானங்களைக் கொண்டு வந்தனர். அரண்மனையின் பின்புலத்தில் உள்ள கருமலையில் காணப்படும் உயரமான மலைக்குன்றில் தான் தமுக்கு குன்று உள்ளது. தூரத்தில் எதிரிகள் வருவதைக் கண்காணித்து எதிரிகள் தென்பட்டால் எச்சரிக்கை ஒலியாக தமுக்கு அடிப்பார்கள். இதற்கெனவே சுழற்சி முறையில் ஆட்கள் மலை மேலிருந்து கண்காணிப்பு பணியைச் செய்து வந்தனர். கருமலை அடிவாரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்திலும் கோபால் நாயக்கரின் புரட்சிப்படையினர் மறைந்து வாழ்ந்து வந்தனர்.

நாடெங்கும் நடைபெற்ற கொரில்லா தாக்குதலுக்கு காரணம் கோபால் நாயக்கர் தான் என்பதை உளவாளிகள் மூலம் அறிந்த திண்டுக்கல் சீமை கலெக்டர் பி.ஹர்டீஸ் அவர் மீது குற்றம் சுமத்தி சம்மன் அனுப்பினான். ஆனால் கோபால் நாயக்கர் பதில் அளிக்கவில்லை. எனவே 1799-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது சம்மன் அவரை சரணடையுமாறு மிரட்டலாக வந்தது. 72 வயதான போதும் மிரட்டலுக்கு பணியாத கோபால் நாயக்கர் இறுதித் தாக்குதலுக்கு திட்டம் தீட்ட துவங்கினார்.

கோபால் நாயக்கர் புரட்சிப்படையினர்கள் ஒளிந்த இடங்களை கண்டறிய நாய்களுடன் ஆங்கிலேயப் படையினர் விருப்பாட்சி மலையில் தேடினார். ஆனால் புரட்சிப்படையினர் விருப்பாட்சிக்கு பின்னால் உள்ள கருமலை பகுதியில் ஆங்கிலேயரின் கண்களில் படாமல் அடர்ந்த காட்டிற்குள் மறைந்திருந்து போர் பயிற்சி மேற்கொண்டனர். விடுதலைப் புரட்சியாளர்கள் கருமலையில் உருவாகி வரும் தலையூற்றில் நீராடி புத்துணர்ச்சி பெற்றனர். தண்ணீர் வசதி உள்ள இடமாதலால் இந்த மலைப் பகுதியிலேயே இடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டனர். கோபால் நாயக்கரின் கூட்டணியில் இருந்த ஆயக்குடி பாளையக்காரர், வேலாயுத நாயக்கர், பொன்னிமலை பகுதிகளில் ஆட்களை அமர்த்தி வெடிமருந்து தயாரித்து தந்தார்.

இடையக்கோட்டை பாளையம் கோபால் நாயக்கரின் புரட்சிப்படைக்கு வேண்டிய பொருள் உதவி மட்டுமில்லாமல் போர் ஆயுதங்களை செய்வதற்கு தேர்ந்த ஆட்களையும் விருப்பாட்சிக்கு அனுப்பி வைத்தது. கோபால் நாயக்கருக்கு செய்த உதவியைப் பாராட்டி இடையக்கோட்டை பாளையத்திற்கு வந்த மைசூர் மன்னன் திப்பு சுல்தான் தனது வாலை பரிசாகத் தந்தார். அதனால் அந்த வால் இடையக்கோட்டை ஜமீன் மாளிகையில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கோபால் நாயக்கர் மற்றும் கேரளவர்மா தலைமையில் பெரிய படை ஒன்று திண்டுக்கல் மலைக்கோட்டையிலிருந்த ஆங்கிலேய இ ராணுவத்தை விரட்டியடித்து ஆயுத கிடங்குக்குள் கிடைத்த வெடிமருந்துகள், துப்பாக்கிகள் போன்றவற்றை கைப்பற்றினர். கொரில்லா போர் முறையில் நடந்த தாக்குதலால் ஆங்கிலேயர் நிலை குலைந்தனர். திண்டுக்கல் மலைக்கோட்டை பீரங்கி குண்டுகளுக்கு சிக்காமலும், அஞ்சாமலும் விடுதலை வீரர்கள் தீரத்துடன் போரிட்டனர்.

கோபால் நாயக்கரின் படையினர் திண்டுக்கல் கோட்டையிலிருந்த இராணுவ தளவாடங்களை கடினப் பிரயாசையுடன் அழித்தனர். கோபால் நாயக்கரின் தலைமையில் சென்ற திப்பு சுல்தான் படையினர் திண்டுக்கல் கோட்டையில் ஆங்கிலேய படையுடன் அதிரடியாகப் போர் புரிந்தனர்.

29.04.1800 அன்று விருப்பாட்சியில் கோபால் நாயக்கர் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து இறுதிக்கட்டப் போர் நடத்த இரகசிய மாநாடு நடைபெற்றது. கேரளவர்மா, மைசூர் கிருஷ்ணப்பா, சின்னமருது, கோவை ஹாஜிகான், கல்யாணித் தேவர், பெருமாள் பிள்ளை உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 03.06.1800 அன்று கோவையில் உள்ள ஆங்கிலேய ராணுவ முகாமில் உள்ள ஐந்தாம் படையை அழிக்க கோவையின் நாலா பக்கத்திலிருந்தும் ஒரே சமயத்தில் தாக்குவது எனத் தீர்மானித்து 5 குழுவாகப் பிரிக்கப்பட்டார்கள். குழுக்களின் தளபதிகள் ஓசூர் புட்டா முகமது, இச்சாபட்டி ராமனுல்லாகான், ஓசூர் முகமதுஹாசன், பரமத்தி அப்பாவு, மற்றும் சேசையா.

இறுதி கட்டப் போர் விபரத்தை சில துரோகிகள் மூலம் அறிந்த பரங்கியர் படை 03.06.1800 அன்று கோவையைச் சுற்றி நாலாபுறமும் பீரங்கிப் படையைக் கொண்டு எதிர்த் தாக்குதல் நடத்தினர். இதை எதிர்பாராத புரட்சிபடையினருக்கு தோல்வியே மிஞ்சியது பலர் தப்பி ஓடினர். 42 பேர் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். முக்கிய தளபதி முகமதுஹாசன் சேலம் கலெக்டர் மக்லாய்டு என்பவனால் கூண்டில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டான். எதிரியிடம் கூட்டணி ரகசியங்கள் போய் விடக் கூடாது என்று எண்ணி 08.06.1800 அன்று தன் குரல் வளையைத் தானே அறுத்து தற்கொலை செய்து கொண்டான்.

சேசையா, துணைத் தளபதிகள் புட்டா முகமது, சேக் முகமது, இமானுல்லாகானும் கைது செய்யப்பட்டனர். சில காலம் கழித்து 12.10.1800 அன்று லெப்டினட் கர்னல் இன்னஸ் என்பவன் பெரும் படையுடன் விருப்பாட்சியை முற்றுகையிட்டான். 14-ஆம் தேதி வரை சுற்றி உள்ள பகுதிகளிலும் சத்திரப்பட்டியிலும், நங்காஞ்சியிலும் தாக்குதல் நடத்தினான். ஆங்கிலேயரின் அரண்மனையை முற்றுகை இட்டனர். பெரியகோட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வரும் கோபால் நாயக்கருக்காக தங்கள் உயிரைத் துச்சமாக எண்ணி விருப்பாட்சி போரில் கலந்து கொண்டனர்.

வேலூரைச் சேர்ந்தவர்கள் பெரியக்கோட்டையினருடன் இணைந்து சத்திரப்பட்டியிலேயே ஆங்கிலேயருடன் போர் புரிந்தனர். சத்திரப்பட்டி ஜமீன் மாளிகை முன்பாக பொது மக்கள் ஒன்று கூடி ஆங்கிலேயரின் படையை எதிர்த்து பலர் மாண்டனர். சாலை எங்கும் இரத்த ஆறு ஓடியது. கடுமையான போரில் ஆங்கிலேயப் படையை எதிர்த்து பெரியகோட்டை, சத்திரப்பட்டி, வேலூர் பகுதி மக்கள் எல்லாம் ஆவேசத்துடன் போர் புரிந்தனர். ஆனால் வெள்ளையரின் நவீன போர் ஆயுதங்களால் பலர் மடிந்தனர். ஆயினும் கடைசி மூச்சு உள்ள வரை வீரத்துடன் போராடினர். கோபால் நாயக்கரின் மூத்த மகன் முத்துவேல் போரில் வீர மரணம் அடைந்தான். கோபால்நாயக்கர் எதிரிகளிடம் சிக்காமல் தப்பிவிட்டார். அவர் கிடைக்காத ஆத்திரத்தில் விருப்பாட்சி அரண்மனையைத் தரை மட்டமாக்கினார்.

கோபால் நாயக்கரின் கூட்டமைப்பில் இருந்த துண்டாஜிவாக்கின் கருநாடக மராத்திய புரட்சிப்படையினர் பலர் ஆங்கிலேயப் படையிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களைப் பீரங்கி வாயில் கட்டி வைக்கப்படும் போதும் மன உறுதியுடனே மரணத்தை எதிர் கொண்டனர். கோபால் நாயக்கரின் மனைவி பாப்பம்மாள் இளைய மகன் பொன்னப்பன் நாயக்கர் உட்பட 22 பேரை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

விருப்பாட்சி போருக்குப் பின் 2 மாதங்களாக எங்கு தேடியும் கோபால் நாயக்கரை ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவரது தலைக்கு 20,000 பணம் என விலை வைத்தனர். கோபால் நாயக்கரை காட்டி கொடுத்தால் 20,000 பணம் தரப்படும் எனவும் அவரது தளபதிகள் தும்மச்சி நாயக்கர், சோமநாத சேர்வை, சோமன்துரை, பெரியபட்டி நாகமநாயக்கர் ஆகியோரைக் காட்டி கொடுத்தால் 5,000 பணம் என பறைசாற்றினர். ஆங்கிலேயன் தரும் பணத்திற்கு ஆசைப்பட்ட சில துரோகிகளால் கோபால் நாயக்கர் காட்டிக் கொடுக்கப்பட்டார். 

04.05.1801 அன்று அவரைக் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர் வெள்ளையர்கள்.

1801 ஆம் வருடம் விருப்பாட்சி கோட்டையில் கோபால் நாயக்கர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். சாகும் போது கூட கொஞ்சமும் கலங்காமல் ‘‘என்னைப் போல் கோடி மக்கள் கூடி இந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை வேரோடு அழிப்பார்கள் இது உறுதி’’ என வீர முழக்கமிட்டுத் தன் மரணத்தைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்.

ஆங்கிலேயர்கள் கோபால் நாயக்கரை தூக்கிலிட்ட பின் மலைக்கோட்டை சிறையிலிருந்த அவர் மனைவி, மகன் ஆகியோரை திண்டுக்கல் காசிம்ராவுத்தர் பேட்டையில் 1816 –ஆம் ஆண்டு வரை வீட்டுச் சிறையில் வைத்தனர். இன்றும் அவர் வாழ்ந்த விருப்பாட்சி மண்ணின் தடங்கள் அவர் வீரத்தையும் உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. கோபால் நாயக்கர் அரண்மனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை இப்போது அங்குள்ள கன்னிமார் கோவிலின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.

45 அடி நீளமுள்ள சுவர் மட்டும் கோபால் நாயக்கரின் சரித்திரத்தை பிரதிபலிக்கும் பிம்பமாக இருக்கிறது. குதிரைகள் தண்ணீர் குடிக்கும் கல் தொட்டி கோபால் நாயக்கர் அரண்மனை இருந்த வளாகத்திலேயே இன்றும் பயன்பாட்டில் உள்ளது. மிக வலிமையாகக் கட்டப்பட்ட கோபால் நாயக்கர் அரண்மனையின் அடித்தளம் இப்போதும் உறுதியாகவே காணப்படுகிறது. கோபால் நாயக்கரை தூக்கிலிட்டுக் கொன்றபின் அவர் வாழ்ந்த அரண்மனையும், கோட்டையும் ஆங்கிலேயர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. அந்த இடம் இப்போது தென்னை மரத்தோப்பாக காட்சியளிக்கிறது.

விருப்பாட்சி ஊரின் கிழக்கு எல்லையில் தன் மனைவிக்காக கோபால் நாயக்கர் ஒரு எழில் மிகுந்த அரண்மனையைக் கட்டிக் கொடுத்தார். இன்று அந்த மாளிகையில் பாழடைந்த சுவர்கள் தான் மீதமாகக் காட்சி அளிக்கிறது. கோபால் நாயக்கர் அரண்மனையை ஆங்கிலேயர் தரை மட்டமாக்கினர். அவர்களால் தகர்க்க முடியாதது யானை கட்டும் கல்தூண். முட்டையின் வெள்ளைக்கரு, கடுக்காய், சர்க்கரை, சுண்ணாம்பு போன்ற கலவையைக் கொண்டு கட்டப்பட்ட கோட்டை சுவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்து காலப்போக்கில் இன்று அங்குள்ள தோட்டத்தின் வரப்பைத் தாங்கும் சக்தியுடன் உள்ளது. சாய்ந்திருக்கும் சிலைக்கு முன்னால் தென்படும் கன்னிமார் கோயில் தான் கோபால் நாயக்கரின் அரண்மனை இருந்த இடமாக உள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved