🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கலைவாணர் அரங்கை அலங்கரிக்கும் கம்பளத்தார்! காண்பது கனவா? நிஜமா?

சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் முப்பெரும் விழாவினை கலைவாணர் அரங்கினை ஏற்பாடு செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகவும், அரசியல் கட்சியினர் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சமி. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை 2017-இல் தொடங்கப்பட்டதிலிருந்து, சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தோடு தொடர்பிலும், நல்லுறவிலும் இருந்து வருகிறது. நலச்சங்கம் ஆண்டு தோறும் முன்னெடுக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தொடர்ந்து கலந்து வருகிறோம். இச்சங்கத்தின் ஓரிருவரைத் தவிர 99 சதவீதமான நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பிழைப்புத்தேடி சென்னை நகருக்கு குடி பெயர்ந்தவர்கள். 


இப்படியான ஒரு பின்னனியோடு இருப்பவர்களில் ஒருசிலர் சேர்ந்து 2006-இல் உருவாக்கிய வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் முதல் தலைமுறை நிர்வாகிகளின் ஓய்வுக்குப்பிறகு அடுத்த தலைமுறை இளைஞர்கள் பொறுப்பேற்றுக்கொண்டு, மிகக்குறுகிய காலத்தில் கொரோனோ பெருந்தொற்று இடர்பாடுகளைத்தாண்டி இலக்கை நோக்கி வேகமாகப்பயணித்து வருவது மிகுந்த மகிழ்சியை அளிப்பதாக உள்ளது.

தலைநகர் சென்னையில் 15 சென்ட் நிலம், 12000 சதுரடியில் மூன்றடுக்கு மாளிகை, அதில் மாவீரன் கட்டபொம்மன் பெயரில் இளைஞர்கள் போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்ய அகாடமி என்பது பெருமைதரக்கூடிய விசயம். பழமையில் ஊறிப்போன கம்பளத்தார் சமுதாயம் முற்போக்கு சிந்தனை இல்லாத காரணத்தால் ஜமீன்தாரர்களாகவும், நிலச்சுவாந்தாரர்களாகவும் இருந்தும்கூட ஒரு பள்ளியையோ, கல்லூரியையோ உருவாக்காத சூழலில், வளர்ந்த சமூகங்களோடு ஒப்பிடுகையில் நூறாண்டுகளுக்கு பின்னால் ஒரு பயிற்சி மையத்தை தொடங்குகிறோம்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை முப்பெரும்விழாவாக கொண்டாட முடிவெடுத்திருக்கும் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், அரசியல் அரங்கில் உள்ளவர்களை ஒன்றிணைத்து கலைவாணர் அரங்கில் கொண்டாடத் தீர்மானித்திருப்பது என்பது காண்பது கனவா இல்லை நிஜமா என்று பிரமிக்க வைக்கிறது.

ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றக்கூட்டத்தொடர் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ள இந்த சூழலில், மாநகரம் பரபரப்பாக இயங்கும் வேளையில் முப்பெரும்விழாவில் பல்வேறு மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்களும் பங்கேற்ப இருப்பது ஒட்டுமொத்த கவனத்தையும் முப்பெரும்விழா ஈர்க்கப்போகிறது.

அதேவேளையில், அறக்கட்டளைக்காகவும், இடஒதுக்கீடு, டிஎன்டி சான்றிதழ் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்காக அடித்தட்டு மக்களோடும், தலைவர்களோடும் பழகிய வகையில், கலைவாணர் அரங்கின் சிறப்பையோ, நிகச்சியின் முக்கியத்துவத்தையோ நம் தலைவர்கள் எந்த அளவு உள்வாங்கிக்கொண்டு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்ற ஐயம் ஒருபுறம் இருந்தாலும், இச்செய்தியையும், முக்கியத்துவத்தையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்க ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு பாடுபட வேண்டும் என்று அறக்கட்டளை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் இம்முயற்சிக்கு தானாக முன்வந்து ஒத்துழைப்பு நல்கி, நல்ல முறையில் மலர் வெளியாகவும், நிகச்சியை வெற்றிபெறச் செய்யவும் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகோள் வைக்கின்றோம். 

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved